Iran-Israel War : மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டாக எச்சரிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

iran war

மத்திய கிழக்கில் ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்களை அதன் தோற்ற இடத்திலேயே அழிக்கத் தயார் என அதிரடி கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய உக்கிரமான வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்; 149 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதேபோல் குவைத், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இரு தரப்பினரிடையே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் எச்சரிக்கை

ADVERTISEMENT

இந்நிலையில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டுத் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆரம்பகட்ட ராணுவ நடவடிக்கைகளில் எவ்விதத் தொடர்பும் இல்லாத நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் அளவுக்கு அதிகமான மற்றும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்கள் எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

ஈரானின் இந்தப் பொறுப்பற்ற செயல்கள் எங்களின் நெருங்கிய கூட்டாளிகளை இலக்கு வைப்பதோடு, அந்தப் பகுதியில் பணியில் உள்ள எங்களது ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.”ஈரான் இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ADVERTISEMENT

எங்கள் நலன்களையும், எங்கள் கூட்டாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தேவையான அனைத்துத் தற்காப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம். குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்படும் இடத்திலேயே அவற்றின் தாக்குதல் திறனைத் தடுத்து அழிப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது.

பொருளாதார அச்சம்

ஈரான்-இஸ்ரேல் இடையிலான இந்த மோதல், ஒரு மிகப்பெரிய உலகப் போராக மாறும் அபாயம் உள்ளதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் உலக அளவில் கடும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share