Gen Z இளைஞர்களின் போராட்டம் வெடித்த நேபாள நாட்டில் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ளார் நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசிலா கார்கி.
மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளத்தில் கடந்த 2008ம் ஆண்டு மக்களாட்சி மலர்ந்தது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நேபாளத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக உள்ளது. உலகின் ஒரே இந்து தேசமாக இருந்த நேபாளம் மதச்சார்பற்ற நாடாகவும் மாறி உள்ளது.
ஊழல் வேலையின்மை
நேபாளத்தின் பிரதமாகராக கேபி ஒலி சர்மா பதவி வகித்து வந்தார். நேபாளத்தில் ஊழலும், வேலை வாய்ப்பின்மையும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. இதற்கிடையில் நேபாளத்தில் அரசின் உயர் பதவியில் இருப்பவர்களின் பிள்ளைகள் செல்வ செழிப்போடு இருப்பது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி இருந்தது. இது அந்நாட்டு இளைஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களுக்கு தடை
இதற்கிடையே சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அரசு அறிவித்தது. பதிவு செய்யதாத யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டா கிராம், உள்ளிட்ட 26 சமூகவலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசு திடீரென தடை விதித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் சமூக வலைத்தள தடைக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். ஆங்காங்கே தொடங்கிய போராட்டம் ஓரே நாளில் நாடு முழுவதும் பரவியது.
இந்த போராட்டம் GEN Z புரட்சி என்று வர்ணிக்கும் அளவிற்கு தீவிரம் அடைந்தது. போராட்டத்தை தொடர்ந்து வேறு வழியின்றி சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால் அடுத்த நாளும் போராட்டம் தீவிரம் அடைந்தது. அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. போராட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தை தொடர்ந்து பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலகினார். அதிபர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய பதவி வகித்தவர்கள் ராணுவத்தினரின் உதவியுடன் நாட்டை விட்டு தப்பி சென்றனர். பிரதமர் பதவி விலகியதை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கையில் எடுத்தது. இந்நிலையில் தங்களது பிரதிநிதியாக ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசிலா கார்கியை நியமிக்க போராட்டக்காரர்கள் முடிவு செய்ததை தொடர்ந்து அவர் இடைக்கால அரசின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
தியாகிகள்
இந்நிலையில் நேபாளத்தில் GenZ இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி பதவி விலகிய பின்னர், தற்போது இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை தியாகிகளாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதிகாரத்தை அனுபவிக்க பிரதமர் பதவியை ஏற்கவில்லை என சுசிலா கார்கி தெரிவித்துள்ளார். மேலும் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சுசிலா கார்கி
நேபாளத்தின் பிராட் நகரில் ஜூன் மாதம் 7 ம் தேதி 1952 ல் சுஷிலா கார்கி பிறந்தார். 1972 ல் பிராட் நகரில் உள்ள மகேந்திர மோராங் கல்லூரில் பி.ஏ இளங்கலை பட்டம் பெற்றார். மேல்படிப்புக்காக சுஷிலா கார்கி இந்தியாவிற்கு வந்தார். 1972ல் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து 1978ல் நேபாளத்தின் திரிபுவன் பல்கலையில் சட்டம் பயின்றார்.
1979ல் பிராட் நகரில் தனது சட்டப்பணியை தொடங்கினார். கடந்த 2007ல் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். பின்னர் 2009ம் ஆண்டு நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியானவர் நவம்பர் 18, 2010ம் ஆண்டு நோபாள உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பின்னர் 2016ல் பொறுப்பு தலைமை நீதிபதியானார்.
இந்தியாவுடனான உறவு
சிஎன்என்-நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ” நான் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் படித்தேன். அது குறித்த எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. என் ஆசிரியர்கள், நண்பர்களை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். கங்கை நதி, அதன் கரையில் உள்ள விடுதி, மற்றும் கோடை இரவுகளில் மாடியில் அமர்ந்து பாயும் கங்கையைப் பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது. இந்திய எல்லைக்கு மிக அருகில்தான் பிராட் நகர் உள்ளது. என் வீட்டிலிருந்து எல்லை சுமார் 25 மைல் தொலைவில் இருப்பதால் நான் அடிக்கடி எல்லையோர சந்தைக்குச் செல்வேன். என்னால் ஓரளவு இந்தி பேச முடியும், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் மிகப் பழமையானவை. அரசாங்கங்கள் வேறுபட்டவையாக இருக்கலாம், ஆனால் மக்களின் உறவு மிகவும் ஆழமானது.” என தெரிவித்துள்ளார்.