நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார் சுஷிலா கார்கி

Published On:

| By christopher

Sushila Karki sworn in as Nepal's first female PM

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி இன்று (செப்டம்பர் 12) பதவியேற்றுள்ளார்.

அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். பின்னர் நாட்டில் நிலவும் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து மாணவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 900க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், தலைமை செயலகம், பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் இல்லம் ஆகியவை தீ வைத்து சூறையாடப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திரி பவுடல் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் ஆட்சி ராணுவம் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

ஆட்சி கவிழ்ந்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். அதன்படி, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கடந்த 10ஆம் தேதி ஆன்லைன் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அதில் இடைக்கால பிரதமராக காத்மாண்டு மேயர் பாலென் ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நேபாள மின்சார ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி குல்மான் கிஷிங் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இறுதியில் இளைஞர்களின் அழைப்பை ஏற்ற சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேபாள நாட்டின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி இன்று இரவு 9 மணிக்கு பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றார் சுசீலா.

இதையடுத்து நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், பிரதமர் சுசீலா கார்கி தனது மந்திரி சபையை தேர்வு செய்ய உள்ளார். அதன்பின்னர், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நேபாளம் பிரதமர் சுசீலா தலைமையிலான அரசின் வசம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share