சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்… ஆம்னி பேருந்து மோதி 4 பேர் பலி!

Published On:

| By Kavi

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து மோதியதில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர்.

பெங்களூருவில் இருந்து நாகர்கோயிலை நோக்கி இன்று (மே 17) அதிகாலை இன்டர்சிட்டி ஸ்மார்ட் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்தனர்.

கரூர் செம்மடை அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி பேருந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதி, இழுத்துச் சென்று சென்டர் மீடியனையும் தாண்டி எதிரே வந்த சுற்றுலாவின் மீது அதிவேகமாக மோதி நின்றது.

எதிரே வந்த வாகனம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆம்னி பேருந்து மோதியதில் அந்த சுற்றுலா வேனில் இருந்த ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களது விவரம் இன்னும் தெரிய வரவில்லை. மேலும் ஆம்னி பேருந்தில் இருந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 5.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் கண் அயர்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் மற்றும் வெங்கமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற அவர்கள் விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் தீயணைப்பு துறை உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக கரூர் நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா சென்றவர்களுக்கு அதிகாலை நடந்த இந்த துயரம், தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான. இதில் ஒரு பேருந்து இன்டர்சிட்டி பஸ் நிர்வாகத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share