தொழில் துறை முதலீடுகள்- எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதில்!

Published On:

| By Minnambalam Desk

TRB Raja EPS

தமிழகத்தில் திமுக ஆட்சியின் தொழில் துறை முதலீடுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.Industrial InvestmentsT.R.B. Raja Edappadi Palaniswami

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்ட அறிக்கை: எதிர்க்ட்சித்தலைவர் என்ற மரியாதையுடன் எடப்பாடி பழனிசாமி வெளியிடும் அறிக்கைகளுக்கு உரிய முறையில் பதிலளிப்பது என் வழக்கம். திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற பழக்கம். ஆனால், இப்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடும் அறிக்கைகள் தமிழ்நாட்டு அரசியலின் காமெடிக் காட்சிகளாக இருக்கின்றனவே தவிர, அதில் உண்மையான தகவல்கள் எதுவும் இருப்பதில்லை.

தவறான ஒப்பீடுகள்

ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள அவரது கட்டுரையைப் படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. யதார்த்த நிலையை அறியாதவராக, தன் ஆட்சிக்காலம் தொடர்பான புள்ளிவிரங்களைக் கூடப் புரிந்து கொள்ளாதவராக எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதற்கு அவரது கட்டுரையே சான்று. உலக முதலீட்டாளர் மாநாடு 2024ல் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும், அதில் 2024-25ஆம் நிதியாண்டில் முதலீடாக மாறிய தொகைக்குமான அடிப்படையைக்கூட அறிந்துகொள்ளாமல் ஒப்பீடுகளை முன்வைத்திருக்கிறார்.

உயர் அழுத்த மின் இணைப்பு நிறுவனங்கள்

எடப்பாடி பழனிசாமி, சொல்வதெல்லாம் ஆதாரமற்ற வாதங்கள் என்பதற்கு, ஓர் எளிய தரவோடு ஆரம்பிக்கிறேன். 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் தொழில்துறை சார்ந்த உயர் அழுத்த மின் இணைப்புகள் 5,091ஆக இருந்தன. அதன்பிறகு, 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த நிலையில், 2020-21-ல் அந்த எண்ணிக்கை 6,777 என்றாகியது. ஆண்டுக்கு சராசரியாக 168 உயர்அழுத்த மின் இணைப்புகள் கொண்ட நிறுவனங்கள் மட்டும்தான்.

அதிமுக ஆட்சிக் காலத்தைவிட இரட்டிப்பு

மாறாக, கடந்த நான்கு ஆண்டுகளில் (கொரோனா ஆண்டுகளான 2021, 2022 உட்பட), மே 2025 வரை… இந்த அரசு காலத்தில் 8,039 உயர்மின் தொழில்துறை இணைப்புகளாக உயர்ந்துள்ளன. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 315இணைப்புகள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தைவிட இரட்டிப்பு வளர்ச்சி. இது தான் உண்மையான தொழில்துறை வளர்ச்சிக்கான நேரடி சான்று.

ரூ.6.64 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கட்டுரை, அவரது குழுவில் உள்ள எழுத்தாளர்கள், தாங்கள் குறிப்பிடும் தரவுகள் பற்றிய விவரம் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. 2023-24 நிதியாண்டின் 4வது காலாண்டின் முதலீட்டு தரவுகளை எடுத்துக்கொண்டு, 2024 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் (GIM) செயல்பாட்டை அவர்கள் மதிப்பீடு செய்து கோமாளித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு எக்ஸல் ஷீட்டில் உள்ளதைக் கூடப் புரிந்துகொள்ள இயலாமல் எழுதப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் கட்டுரைக்கு வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை என்றே கருதுகிறேன். 2023-24 நிதியாண்டின் கடைசிக் காலாண்டில், ஜனவரி மாதத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் (GIM2024) கையெழுத்திடப்பட்ட ரூ.6.64 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சுமார் 25% முதலீடு 2023-24 நிதியாண்டுக்குள்ளாகவே நடைமுறைக்கு வந்துவிட்டது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகளாவிய அளவில் பார்த்தால்கூட இது ஒரு அபூர்வ சாதனை.

செயல் திறன் வேகத்தின் சான்று

நிதியாண்டின் கடைசி இரண்டு மாதங்களுக்குள்ளாக இத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்திருப்பதென்பது இதுவரை இல்லாத தமிழ்நாட்டின் செயல்திறன் வேகத்தின் சான்று. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத உழைப்பையும் சாதனையையும் மதித்துப் பாராட்டும் யாரோ ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரின் கட்டுரைத் தயாரிப்புக் குழுவில் இருக்கிறாரோ என்று ஆச்சரியப்படுகிறேன்.

தெளிவில்லாத புள்ளி விவரங்கள்

முதலீடுகளைப் பொறுத்தவரை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், DPIIT அல்லது RBI உள்ளிட்ட யாராலுமே ஒரு மாநிலத்திற்கு வரும் ஒட்டுமொத்த தனியார் முதலீடுகளை தனிப்பட்ட முறையில் துல்லியமாக கணக்கிட முடியாது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவரின் குழுவினர் எந்த தரவகளின் அடிப்படையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. தெளிவின்றி அவர்கள் தந்துள்ள உண்மைக்கு மாறான புள்ளி விவரங்கள் அடிப்படையிலான கட்டுரையை வெளியிடுவதற்கு முன்பாக, அந்த ஆங்கில நாளிதழ் அதனை சரிப்பார்த்து இதழியல் அறத்தைக் கடைப்பிடித்திருக்கலாமே?

சில மாதங்களில் பெரிய முதலீடுகள்

2024 உலக முதலீட்டாளர் மாநாட்டின் அடிப்படையிலான முதலீடுகளின் உண்மையான நிலை என்னவென்றால், Vinfast, Tata JLR போன்ற பெரிய முதலீடுகள் ஒரு சில மாதங்களுக்குள் நிலைநிறுத்தப்பட்டன என்பது தமிழகத்தின் செயல்திறனுக்கான நிரந்தரச் சான்றாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிலை என்ன?

உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 72% திட்டங்கள் ஏற்கனவே அனுமதி நிலைக்கு சென்றுவிட்டன. 391 திட்டங்கள்,அதாவது 62% அளவிற்கு, கட்டுமானத்தை தொடங்கிவிட்டன. இது இன்னும் முடிவான எண் இல்லை, இந்த நிதியாண்டு முடிவதற்கு முனபாகவும், இன்னும் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம். இதுதான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் முதலீடுகளின் நிலை. இதனை குற்றச்சாட்டாக்கி கட்டுரை எழுதியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆடசிக்காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.

அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட ஒப்பந்தங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவரது அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் ரூ.5,087 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் 80.4% முதலீடுகள் அடுத்த சில மாதங்களிலேயே கைவிடப்பட்டுவிட்டன. காரணம், அவை உண்மையான முதலீடுகள் அல்ல, வெறும் புகைப்படங்களுக்காக மட்டுமே போடப்பட்டவை. இதில் அன்றைய அதிமுக அரசின் தோல்வி விகிதம், 80%-க்கும் அதிகமாகும்.

வெற்று காகிதங்களாக 71% முதலீடுகள்

அதேபோல், அவரது ஆட்சியின்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ரூ.3,750 கோடிக்கு 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் மூன்று திட்டங்கள் முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டன. மீதமுள்ள இரண்டில் ஒன்று மட்டுமே முழு உற்பத்தியில் உள்ளது; மற்றொரு திட்டம் கூட பகுதி உற்பத்தியை தொடங்கியது. இவையும் திராவிட மாடல் அரசின் முயற்சியால்தான் சாத்தியம் ஆகின. மொத்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 71% முதலீடுகள் வெற்று காகிதங்களாகவே இருந்துவிட்டன.

ஒப்பந்தங்களின் தோல்வி விகிதம் 64%.

அ.தி.மு.க. ஆட்சியில் GIM-2019 மாநாட்டின்போது ரூ.2,68,296 கோடி மதிப்பிலான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. திமுக அரசு அமைந்த பிறகு நாங்கள் முயற்சி செய்து இவற்றை மீட்க போராடிய பின்னும், இதில் 36% முதலீடுகள் மட்டுமே இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அதாவது, அன்றைய அதிமுக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தோல்வி விகிதம் 64%.

அற்ப விளம்பரத்துக்காக ஒப்பந்தங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பலவீனமானவை, வெறும் அற்ப விளம்பரதிற்காகவே போடப்பட்டவை என்பதால் அவை முதலீடுகளாக மாறவேயில்லை. திராவிட மாடல் அரசு கடந்த நான்காண்டுகளில் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தாங்களால் கிடைத்துள்ள முதலீடுகளும், அதனால் கிடைத்துள்ள வேலைவாய்ப்புகளும் வெறும் எண்களாக மட்டுமில்லை. தமிழ்நாட்டில் பரவலாக உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளும், அதில் பணியாற்றும் ஆண்-பெண் தொழிலாளர்களுமே சான்றாகும்.

GFCF-யில் தமிழகம் 10% பங்கு

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பை மட்டும் வைத்து வளர்ச்சியை அளவிட முடியாது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய கடின உழைப்பு, திட்ட மேலாண்மை, சரியான தொடர்புகள், முதலீட்டாளர்களின் தேவைகளை புரிந்து செயல்படுதல், இவை அனைத்தும் தேவை.
Gross Fixed Capital Formation (GFCF) என்பதை எடுத்துக்கொண்டால், 2020-21ல் ரூ.34,000 கோடி → 2022-23ல் ரூ.60,630 கோடி. தமிழ்நாடு இந்தியாவின் மொத்த GFCF-யின் 10% பங்கு பெற்றுள்ளது.

இரு மடங்காக உயர்ந்த மருத்துவ துறை ஏற்றுமதி

மருத்துவப் பொருட்கள் மற்றும் மென்பொருள் ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால் Merchandise Exports 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையிலிருந்து 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் என ஏறத்தாழ இருமடங்காக இந்த ஆட்சிக்காலத்தில் உயர்ந்துள்ளது. மின்னணு ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையிலிருந்து, 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் என 9 மடங்கு அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

சென்னை முதன்மை இடம்

Global Capability Centres (GCCs)யைப் பொறுத்தவரை 2021-ல் 150 மட்டுமே.2025-ல் 305 என உயர்ந்துள்ளது. சமீப ஆண்டில் மட்டும் 60 புதிய GCC-கள். 2018-19 முதல் 2023-24 வரை சென்னையில் 94,000 புதிய GCC வேலை வாய்ப்புகள் இந்தியாவின் முதன்மையான இடம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டைகள்

சிப்காட் தொழிற்பேட்யைப் பொறுத்தவரை 2011-16 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 6-7 தொழிற்பேட்டைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. திராவிட நாயகன் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடரும் நான்காண்டுகால ஆட்சியில் (2021-25) 30 புதிய சிப்காட் தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டிருப்பதுடன் மேலும் பல சிப்காட் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று 50,000 ஏக்கர் சிப்காட் நிலப்பரப்புடன் நாம் முன்னிலை வகிக்கிறோம்.

பெருந்தொழில் வழித்தடம்

பெருந்தொழில் வழித்தடங்களைப் பொறுத்தவரை, சென்னை-கன்னியாகுமரி 572கி.மீ நீளப் பெருந்தடத்தில் 582 கி.மீ. முடிக்கப்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு பெருவழித்தடத்தில் பொன்னேரி எஸ்.பி.வி. இன்னும் முழுமை பெறவில்லை என்றாலும், பரந்தூர் விமானநிலையம், அறிவுசார் நகரம், பணப்பாக்கம் தொழிற்பூங்கா, மணலூர் மின்னணு வாகனப் பூங்கா உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மிக வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு தொழில் பெருவழித் தடம்

பாதுகாப்பு தொழில் சார்ந்த பெருவழித் தடத்தில் ஒன்றிய அரசின் ஆதரவு 137 கோடி ரூபாய் அளவில் மட்டுமேயாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் பாதுகாப்பு துறை சார்ந்த தொழில் முதலீடுகளில் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வாரப்பட்டியில் பாதுகாப்பு சாதனங்கள் பூங்கா, சூலூரில் ஏரோஸ்பேஸ் பூங்கா மற்றும் கோயம்புத்தூர் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் அனைத்தும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள திட்டங்களாகும்.

எதிர்க்கட்சித் தலைவரின் காழ்ப்புணர்ச்சி

திராவிட மாடல் ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத முயற்சியால் தொழில்துறையில் தமிழ்நாடு கண்டுள்ள மகத்தான வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பொறுப்பற்ற முறையிலும் புரிதலற்ற தன்மையிலும், உண்மைக்கான மாறான தரவுகளுடன், தமிழ்நாட்டை தவறாக சித்தரிக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

தொழில்துறையில் சாதனை

தமிழ்நாடு கடந்த நான்காண்டுகளில் கண்டுள்ள தொழில் வளர்ச்சியை அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டின் தொழில்துறை சாதனைகளை ஒப்புக்கொள்கிறார்கள். அதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு செரிக்கவில்லை.

உறுதி மொழிகளை மதிப்பது திராவிட மாடல்

நாங்கள் ஒவ்வொரு முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் சொல்வது, தமிழ்நாட்டின் தொழிற்கொள்கை தொடரும். எந்தக் கட்சியின் ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், முதலீடுகளை நாங்கள் பாதுகாப்போம். அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை மதிப்போம் என்பதுதான். இது தான் திராவிட மாடல்.

அவதூறு பரப்ப கூடாது

இதற்கு மாறாக, எதிர்க்கட்சித் தலைவர் அவதூறு பரப்புவது, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லாமல், தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுபவர் அவர் என்பதாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும். தமிழ்நாடு தொடர்ந்து உயர்வடையும். பித்தலாட்ட கூட்டத்தின் பொய்களும் அவதூறுகளும் தோற்றுப் போகும். உண்மையை அறிந்துள்ள தமிழ்நாட்டு மக்களால் திராவிட மாடலின் வெற்றி தொடரும். இவ்வாறு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share