கோவை, மதுரை… : கொட்டப்போகும் வேலைவாய்ப்புகள்!

Published On:

| By Kavi

Industrial budget for districts including Coimbatore Madurai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிட்டார். Industrial budget for districts including Coimbatore Madurai

இதில்  தொழில் துறைக்கான அறிவிப்பில்,

“தேசிய ஏற்றுமதியில் 33 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப்பெரும் மின்னணுப் பொருட்களுக்கான ஏற்றுமதிச் சூழல்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

2020-21 ஆம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி, 2023-24 ஆம் ஆண்டில் 9.56 பில்லியன் டாலராக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.

மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றிட பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

அதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்-2030 எனும் ஐந்தாண்டுகாலத் திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.

செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் (Semi Conductor Fabless Lab) ஒன்று சென்னையில் முன்னணி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கோவை மண்டலத்தின், நவீனத் தொழில் அடையாளமாக எதிர்காலத்தில் விளங்கக்கூடிய வகையில், கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூர்,மலேசியா, மற்றும் தைவானிய நிறுவனங்கள் இணைந்து அமைக்கவிருக்கும் இந்தத் தொழிற்பூங்காக்கள் கோவை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வசதிகளைக் கொண்டு, 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றும், விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும். இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஓசூர் நகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் (Hosur Knowledge Corridor) ஒன்று அமைக்கப்படும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களை அங்கு அமைத்திடத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும்.

காலணி உற்பத்தித் துறையில், இவ்வருடம் 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரிலும், 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூரிலும், இரண்டு தொழிற்பூங்காக்கள் 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.

மத்திய மண்டலத்தில் 5,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். 

தூத்துக்குடி மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிடவும், ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025’ ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் (Ship Hull Fabrication) மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி (Ship Engine Production) ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும். இந்தத் தொழில் வருகையின் மூலம், கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும்.

இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 3,915 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share