நாடு முழுவதும் 8-வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 41 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானிகளுக்கான பணி கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம், நெருக்கடியை எதிர்கொண்டது. போதுமான விமானிகள் இல்லாத நிலையில் விமானங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது இண்டிகோ நிறுவனம்.
இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள், உடைமைகளை அனுப்பியவர்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டு பரிதவிக்கின்றனர். விமான நிலையங்களிலேயே பல மணிநேரங்கள் காத்திருக்கும் பேரவலமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திலும் இதே அசாதாரண சூழ்நிலை தொடருகிறது. சென்னையில் இன்றும் இண்டிகோ நிறுவனத்தின் 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இண்டிகோ நிறுவனம் பயணிகளின் முன்பதிவு கட்டணம் ரூ827 கோடியை திருப்பி வழங்கி உள்ளது.
