இந்தியாவின் மக்கள் தொகைப் புதிர்கள்! (பகுதி II)

Published On:

| By Minnambalam Desk

குறைந்துவரும் கருவுறுதலும் இந்தியச் சமூகத்தின் எதிர்காலமும்!

ருக்மிணி எஸ்.

ADVERTISEMENT

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை.

‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்: மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் மூலம், மக்கள்தொகை மாற்றங்கள் குறித்த இன்றியமையாத இந்தியத் தரவுகளைத் தொகுத்து, இந்தியாவில் நடைபெறும் இதர சமூக-பொருளாதார மாற்றங்களின் பின்னணியில் வைத்து, உலகளாவிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கிறோம். இதன் மூலம், புதிய ஆராய்ச்சிக்கான பகுதிகளையும், கொள்கை, விவாதங்களுக்கான திசைகளையும் அடையாளம் காண்கிறோம்.

ADVERTISEMENT

பகுதி I இல், தற்போதைய நிலவரத்தை விவரிப்பதற்காகத் தரவுகளை ஒன்றிணைத்தோம். ஒப்பீட்டளவில் கவனிக்கப்படாமல் போனதாக நாங்கள் வாதிடும் சமீபத்திய முக்கியமான தரவுப் புள்ளிகளையும் வழங்கினோம். பகுதி IIஇல், குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் தொடர்பான தரவுகளை ஆராய்கிறோம். இந்தியா உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே நேரத்தில் விதிவிலக்காகவும் இருப்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம். பகுதி IIIஇல், இந்திய மாநிலங்களுக்கிடையேயான மக்கள்தொகை வேறுபாடுகள் குறித்த தரவுகளையும், அது தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு எவ்வாறு காரணமாகிறது என்பதையும் பார்ப்போம்.

மக்கள் தொகை மாற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் — குறைந்துவரும் கருவுறுதல், அதிகரித்துவரும் ஆயுட்காலம், இடப்பெயர்வு, தொற்றுநோயியல் மாற்றங்கள் — ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவுக்குக் கவனத்தை ஈர்க்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை. சில குழுக்களிடையே நிலவும் அல்லது உணரப்படும் அதிகக் கருவுறுதல் விகிதங்களும் மற்றவர்களிடையே குறைந்துவரும் கருவுறுதலும் மக்கள்தொகை தொடர்பான கருத்தங்குகளுக்கு அப்பால் எதிரொலிகளை எழுப்பும் கலாச்சாரப் பதற்றமாக உருவெடுத்துள்ளன.

ADVERTISEMENT

இது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் நடக்கும் ஊடக, அரசியல் விவாதத்தின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளது. மூன்று பகுதிகள் கொண்ட இந்தத் தொடரின் இந்தப் பகுதியில், உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவுகளின் கலவையைப் பயன்படுத்தி, இந்தியாவில் மாறிவரும் கருவுறுதல் விகிதங்களின் ஐந்து முக்கிய அம்சங்களை அலசுகிறோம். இந்தியா பல வழிகளில் உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாக இருக்கும் அதே சமயம் கருவுறுதலின் சில அம்சங்களில் முக்கியமான விதிவிலக்காகவும் உள்ளதையும் விவாதிக்கிறோம்.

உலகளாவிய தரவுகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகள், 2024 அறிக்கையின் திருத்தப்பட்ட வடிவத்தைப் பயன்படுத்துகிறோம். இந்தியத் தரவுகளுக்கு, இந்தியாவின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மாதிரிப் பதிவு அமைப்பு, தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு ஆகியவற்றின் மக்கள்தொகை மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம்.

1. இந்தியாவில் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) இப்போது தேசிய அளவில் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது

மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெற வாய்ப்புள்ள குழந்தைகளின் எண்ணிக்கையாகும். ஒரு நாட்டின் TFR 2.1 ஆகக் குறையும்போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று மக்கள்தொகை நிபுணர்கள் கூறுகிறார்கள், அப்போது நாடு “பதிலீட்டுக் கருவுறுதலை” அடைந்து விட்டது என்று கூறப்படுகிறது. இரண்டு பெரியவர்கள் ஒரு 2.1 குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்றுவைத்துக்கொண்டால், குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் இறப்பதற்கான சில வாய்ப்புகளைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், அந்தக் கணவன் மனைவி இரண்டு பெரியவர்களை உருவாக்குவார்கள். இரண்டுக்கு இரண்டு என்பதால் மக்கள்தொகையின் அளவு மாறாமல் இருக்கும். இது ஒரு நாட்டின் மக்கள்தொகை பயணத்தில் முக்கியமான மைல்கல். கருவுறுதல் இந்த அளவிற்கும் கீழே குறைந்தால், மக்கள்தொகை மொத்த எண்ணிக்கையில் குறையத் தொடங்கும்.

இந்தியாவின் மதிப்பீடுகளின்படி, 2019இல் இந்தியாவின் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைந்தது. நகர்ப்புற இந்தியாவின் TFR 2004இல் இந்த நிலையை முன்னதாகவே அடைந்தது. கிராமப்புற இந்தியாவிலும் TFR 2023இல் பதிலீட்டு அளவைவிடக் குறைந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மிக அண்மைக்காலதில் இது தொடர்பாக நமக்குக் கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமான தரவு என்றால் அது 2023ஆம் ஆண்டின் தரவுதான்.

கருவுறுதல் குறித்த இந்திய தேசியத் தரவு, ஆண்டுதோறும் நடத்தப்படும் மாதிரிப் பதிவு அமைப்பிலிருந்து (Sample Registration System – SRS) வருகிறது. பெரிய அளவிலான மாதிரிகளைக் கொண்டு நாடு தழுவிய அளவில் வீடு வீடாக நடத்தும் கணக்கெடுப்பு இது. மிகச் சமீபத்திய SRS தரவு 2023ஆம் ஆண்டிற்கானது. இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்குமான மதிப்பீடுகளை வழங்கும் இந்தக் கணக்கெடுப்பு, கல்வி நிலை, வருமானக் குழு அல்லது சமூகக் குழு உள்ளிட்ட சமூகப் பொருளாதாரக் கூறுகளின் அடிப்படையில் மதிப்பீடுகளை வழங்குவதில்லை.

இதற்காக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் சுகாதார ஆய்வுகள் அமைப்பின் ஒரு பகுதியான தேசிய அளவில் பிரதிநிதித்துவம் கொண்ட தேசிய குடும்பச் சுகாதார ஆய்வை (National Family Health Survey – NFHS) நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தியாவின் மிகச் சமீபத்திய NFHS 2019-21இல் நடத்தப்பட்டது. NFHSஇன் TFR மதிப்பீடுகள் அதே ஆண்டிற்கான SRSஐவிடவும் சற்றே அதிகமாக உள்ளன.

உலகம் முழுவதும் ஏழைகளிடமும் குறைந்த கல்வி அறிவு கொண்ட பிரிவினரிடமும் TFR அதிகமாக உள்ளது. காலப்போக்கில் அந்தக் குழுக்கள் செல்வந்தர்களாகவும் மேம்பட்ட கல்வி அறிவுடையவர்களாகவும் மாறும்போது இது குறைகிறது. இந்தியாவில் ஏழ்மையான 20 சதவீத இந்தியக் குடும்பங்களிடையே TFR மிக அதிகமாக இருந்தது. அங்கு சராசரியாக ஒரு பெண், வசதிபடைத்த 20 சதவீதக் குடும்பங்களில் உள்ள சராசரிப் பெண்ணைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களுக்கும் இடையேயான இடைவெளி ஒரே மாதிரியாக உள்ளது: பள்ளிக் கல்வியே இல்லாத பெண்கள், 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிக் கல்வி பெற்ற பெண்களைவிடச் சராசரியாக ஒரு குழந்தை அதிகமாகப் பெறுகிறார்கள். இருப்பினும், காலப்போக்கில், பணக்கார, ஏழை ஆகிய இரண்டு குடும்பங்களிலும், குறைந்த கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் அதிகக் கல்வி அறிவு கொண்ட பெண்களிடையேயும் TFR குறைந்துள்ளது.

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையும் பாதகங்களையும் எதிர்கொள்ளும் ஒதுக்கப்பட்ட சமூகங்களான பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களிடையே சலுகை பெற்ற சாதிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களைவிட TFR அதிகமாக உள்ளது. மற்ற மதக் குழுக்களுடன் குறிப்பாக இந்துப் பெண்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம் பெண்களின் அதிக TFR ஆகும். இது இந்தியாவில் காணப்படும் கூர்மையான வித்தியாசமாகும்.

TFR முஸ்லிம் பெண்களிடையே மற்ற மதக் குழுக்களைவிடத் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்தியாவில் முஸ்லிம் குடும்பங்களின் குறைந்த வருமானத்துடன் தொடர்புடையது. மற்ற மதக் குழுக்களைக் காட்டிலும் முஸ்லிம்களிடத்தில் TFR அதிகமாக இருக்கும் நிலை தொடர்ந்தாலும், முஸ்லிம் பெண்களின் கருவுறுதல் விகிதங்களும் கணிசமாகக் குறைந்துவிட்டன. மேலும், குடும்ப வருமானம் அதிகமாகவும், பெண்களின் கல்வி விகிதங்கள் அதிகமாகவும் இருக்கும் இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் இந்து, முஸ்லிம் உள்ளிட்ட எல்லாக் குழுவினரிடையேயும் கருவுறுதல் விகிதங்கள் குறைவாக உள்ளன. குறைந்த கருவுறுதல் விகிதங்கள் கொண்ட வசதி படைத்த மாநிலங்களான கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள முஸ்லிம் பெண்களின் TFR, அதிக கருவுறுதல் கொண்ட இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களான பிகாரிலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள இந்துப் பெண்களின் TFRஐவிடக் குறைவாக உள்ளது.

2. நாட்டின் சில பகுதிகளில் TFR நீண்ட காலமாகப் பதிலீட்டு அளவைவிடக் குறைவாக உள்ளது

மிக அண்மைக்காலத்தில்தான் இந்தியாவின் தேசிய TFR, பதிலீட்டு அளவைவிடக் குறைந்துள்ளது. எனவே, குறைந்துவரும் பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய உரையாடலுக்குள் இந்தியா இப்போதுதான் நுழைவதாகத் தோன்றலாம். ஆனால், இந்தியாவின் சில பகுதிகள் பல தசாப்தங்களாகவே வளர்ச்சியடைந்த உலகின் சில பகுதிகளைப் போலவே குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டிருக்கின்றன.

தேசிய TFR 4ஆக இருந்தபோது, 1988ஆம் ஆண்டில் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்த முதல் இந்திய மாநிலம் கேரளம். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1993இல் தமிழ்நாடு அந்த இடத்திற்கு வந்தது. மேலும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2004இல் ஆந்திரப் பிரதேசம் அந்த நிலையை எட்டியது. இந்தியாவின் கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் கருவுறுதல் அடிப்படையில் ஒரு விதிவிலக்கு. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்த மாநிலம் 2005இல் பதிலீட்டுக் கருவுறுதலை அடைந்தது.

இது இந்திய மாநிலங்களின் நகர்ப்புறப் பகுதிகளில் இன்னும் அதிகமாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம், பிகார் தவிர அனைத்து இந்திய மாநிலங்களிலும் TFR பதிலீட்டு அளவைவிடக் குறைவாக இருந்தது.

எனினும், தெற்கு மாநிலங்களில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் நிலவிவரும் போதிலும், குறைந்த கருவுறுதல் குறித்துப் பொது வெளியிலும் அரசியல் களத்திலும் நடக்கும் உரையாடல்கள் ஒப்பீட்டளவில் புதியவை.எடுத்துக்காட்டாக, ஆந்திரப் பிரதேசத்தில், 2025 ஜனவரியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஊக்கமளிக்கும் வகையில், இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரைத்தார். நாயுடுவின் இந்த ஆலோசனையைச் செயல்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புவரை, இந்த மாநிலம் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்களை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடாமல் தடுத்துவைத்திருந்தது. (அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 அக்டோபரில் நீக்கப்பட்டது).

3. பெண்கள் தாமதமாக அதிகக் குழந்தைகளைப் பெறுவதைக் காட்டிலும், விரைவாகக் குறைவான குழந்தைகளைப் பெறும் வழக்கமே இந்தியாவில் குறைந்துவரும் கருவுறுதல் விகிதத்திற்குக் காரணமாகிறது.

வளர்ச்சியடைந்த உலகின் பெரும்பாலான பகுதிகளில், கருவுறுதல் குறைவது பெண்கள் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் குறைவான குழந்தைகளைப் பெறுவதாக வெளிப்படுகிறது. இந்தியாவிலோ பெண்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பீட்டளவில் விரைவாகப் பெற்றெடுத்துவிட்டு, இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இந்தியப் பெண்கள் வாழ்க்கையில் பிற்காலத்தில் அதிகக் குழந்தைகளைப் பெறுவதில்லை.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது சற்று மட்டுமே – இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக – அதிகரித்துள்ளது. சராசரி இந்தியத் தாய் இப்போது தனது முதல் குழந்தையை 21 வயதிற்குச் சற்றே கூடுதலான வயதில் பெற்றெடுக்கிறார். இது இந்தியப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதில் ஏற்படும் மாற்றங்களுடன் நெருக்கமாகப் பயணிக்கிறது. தற்போது பெண்களின் திருமண வயது 18 வயதுக்குச் சற்றுக் கூடுதலாக உள்ளது.

குறிப்பிடத்தக்க மாற்றம் என்றால் அது பெண்கள் தங்கள் கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயதில் ஏற்பட்ட மாற்றம். குடும்பங்கள் சிறியதாகிவரும் நிலையில், அதிகமான பெண்கள் தங்கள் இருபதுகளிலேயே தங்கள் கர்ப்பங்களையும் முடித்துக்கொள்கிறார்கள். இதன் விளைவாக, ஒரு இந்தியத் தாய் தனது கடைசிக் குழந்தையைப் பெற்றெடுக்கும் சராசரி வயது கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பைவிட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் வருமானமும் கல்வியும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, பெண்கள் சற்றுத் தாமதமாகத் திருமணம் செய்துகொள்ளத் தொடங்குகிறார்கள். மேலும் தாமதமாகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். இந்தியாவிலும் இப்படி நடந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளில் உள்ள பெண்களுக்கே பிறக்கின்றன. உதாரணமாக, இங்கிலாந்தில் பெண்கள் தற்போது தங்கள் முதல் குழந்தையை மிகத் தாமதமாகப் பெற்றெடுக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் முப்பதுகளில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன.

இந்தியாவிலும் இந்த மாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. 1950களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன. இது கடந்த சில ஆண்டுகளில் மாறிவிட்டது என்றும், இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை இப்போது இருபதுகளின் பிற்பகுதியில் உள்ள பெண்களுக்குப் பிறக்கின்றன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை மதிப்பீடு குறிப்பிடுகிறது.

4. இந்தியாவிலும் உலகிலும் கருவுறுதல் ஏன் குறைகிறது?

குறைந்த பிறப்பு விகிதங்கள் குறித்த உலகளாவிய ஆய்வுகள் குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தைச் சார்ந்தவையாகவே இருக்க முனைகின்றன. இத்தகைய ஆய்வில் இந்தியாவைத் தவிர்ப்பது மனிதகுலத்தின் ஆறில் ஒரு பகுதியைத் தவிர்ப்பதாகும். அது மட்டுமல்லாமல், பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன என்பதற்கு உலகம் முழுவதும் பொருந்தாத கோட்பாடு உருவாவதற்கும் இது வழிவகுக்கும். பொருளாதார வல்லுநர்களான டீன் ஸ்பியர்ஸ், மைக்கேல் ஜெருசோ ஆகிய இருவரும் இணைந்து 2025ஆம் ஆண்டு எழுதிய ஆஃப்டர் தி ஸ்பைக்: பாப்புலேஷன், ப்ரோக்ரஸ், அண்ட் தி கேஸ் ஃபார் பீப்பிள் (After the Spike: Population, Progress, and the Case for People) என்னும் நூலில், கருவுறுதல் ஏன் குறைகிறது என்பதைப் புரிந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து நம்பகமான தரவுகளைத் திரட்டியுள்ளார்கள். வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்காகத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பணியிலிருந்து விலகும் பெண்களுக்கு ஏற்படும் இழப்பு கணிசமானது என்றும் நிரூபிக்கப்படக்கூடியது என்றும் ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். ஆனால் இது இந்தியாவில் பொருந்தவில்லை.

“தொழிலைத் துறப்பதால் ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்ட பிறகு கருவுறுதல் குறைவதற்கான மாபெரும் கோட்பாட்டைக் கண்டடைந்துவிட்டோம் என்று நினைப்பது நம் மனதுக்கு உகந்த்தாக இருக்கலாம். ஆனால், பெண்கள் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பெற்றால் மட்டுமே குறைந்த பிறப்பு விகிதங்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தக்கூடிய கோட்பாடாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது,” என்று அவர்கள் எழுதுகிறார்கள். “இந்தியாவைக் கவனியுங்கள். இந்தியா குறைந்த கருவுறுதலை அடைந்த பாதை, கருவுறுதல் குறைவுக்கான இந்தக் கோட்பாட்டிற்கும், கருவுறுதல் குறைவுக்கான பெரும்பாலான மற்ற கோட்பாடுகளுக்கும் சவாலாக விளங்குகிறது” என்கிறார்கள்.

ஸ்பியர்ஸும் ஜெருசோவும் சுட்டிக்காட்டுவதுபோல, உலகளாவிய முறை என்று எதுவும் இல்லை. இந்தியாவில் வயது வந்த பெண்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு வெளியே ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபடுவதில்லை. கிழக்கு ஆசியா அல்லது ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் அப்படி ஈடுபடுகிறார்கள். ஆனால் இரு பகுதிகளிலும் பிறப்பு விகிதங்கள் ஒரே அளவில் உள்ளன. இந்தியாவைவிட அதிகத் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைக் கொண்ட, அதே சமயம் அதிகப் பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. இந்தியப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வயதும் கிழக்கு ஆசியா, வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவைவிடக் குறைவாகவே உள்ளது. அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை, பெண்கள் தங்கள் தொழில் அல்லது வேலைக்காகக் குழந்தை பிறப்பதைத் தாமதப்படுத்துவது என்பது கருவுறுதல் குறைவதற்கான விளக்கமாக இல்லை. “இந்தியாவில், பெற்றோருக்கான பொறுப்புக்கும் பெண்களின் தொழிலுக்கும் இடையில் மோதல் இல்லாமல் குறைந்த கருவுறுதல் நடக்கிறது,” என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் எழுதுகிறார்கள்.

அப்படியானால், இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் பிறப்பு விகிதங்கள் ஏன் குறைகின்றன? ஸ்பியர்ஸும் ஜெருசோவும் இதற்கான பொதுவான கோட்பாடு இருக்க முடியாது என்று வாதிடுகிறார்கள். குறைந்த பிறப்பு விகிதங்களைப் பற்றி நாம் அறியாதவை நிறைய உள்ளன என்கிறார்கள். இந்தியா ஏற்படுத்தும் சிக்கலே இதற்கு ஓரளவு காரணம் என்றும் கூறுகிறார்கள். தாராளமயம், பெண்ணியம் ஆகியவற்றின் எழுச்சி, திருமணம், மத ஆதிக்கம் ஆகியவற்றின் சரிவு, தொழிலாளர் பங்கேற்பில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தல் உள்ளிட்ட மேற்குலகுக்குப் பொருந்தும் பல கருதுகோள்கள் இந்தியாவுக்குப் பொருந்தாது.

உலகமானது பலவிதமான, சிறியதும் பெரியதுமான வழிகளில் மேம்பட்டுள்ளது; இது குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் இழப்புகளை மிக அதிகமாக ஆக்குகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். இதில் பொருளாதார இழப்புகள் மட்டுமின்றி, கண்களுக்குப் புலப்படாதவையும் அடங்கும். எளிமையாகச் சொன்னால், குழந்தைகள் இல்லாதபோது மனிதர்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களைச் செய்ய அதிக நேரம் கிடைப்பதால் அவர்கள் பெறும் இன்பங்கள் கூடுகின்றன. “முன்பெல்லாம் ‘பல குழந்தைகளைப் பெறுவது’ என்பது ஒருவருக்கு முக்கியமாக இருந்தது. இப்போது அது, ‘எனக்கு எது முக்கியமோ அதைப் பெறுவது’ என்பதாக மாறிவிட்டது. பழைய மதிப்பீட்டின்படி செயல்படுவதால் எற்படும் இழப்பு அதிகம்” என்று அவர்கள் எழுதுகிறார்கள்.

கட்டாய மக்கள்தொகைக் கட்டுப்பாடுகளும் நீண்ட கால அளவில் கருவுறுதல் வடிவங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றுவதில்லை என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் வாதிடுகிறார்கள். தென்னிந்திய அரசியல்வாதிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் விளைவாகத் தங்கள் மாநிலங்கள் குறைந்த கருவுறுதல் விகிதங்களைக் கொண்டுள்ளன என்று வாதிட்டாலும், இந்த மாநிலங்கள் உலகின் பிற பகுதிகளைப் போலவே இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் அதே ஏணியில் சற்றுக் கீழே உள்ளன.

5. இந்தியாவில் கருவுறுதலின் எதிர்காலம் என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகைப் பிரிவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உலக மக்கள்தொகைச் சாத்தியப்பாடுகளின் திருத்தத்தை வெளியிடுகிறது. மிக அண்மையில், 2024ஆம் ஆண்டில் அது வெளியிட்ட திருத்தம், அடுத்த 75 ஆண்டுகளுக்கு இந்தியாவின் கருவுறுதல் விகிதம் படிப்படியாகக் குறையும் என்று கூறுகிறது. கணிக்கப்படும் கருவுறுதல், இறப்பு ஆகிய விகிதங்களின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 2060இலிருந்து அதன் மொத்த எண்ணிக்கையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மற்ற நாடுகளுக்கான ஐ.நா.வின் கணிப்புகளை ஒத்திருக்கிறது. பிற நாடுகளில் அடுத்த 75 ஆண்டுகளுக்குக் கருவுறுதல் மெதுவாகவே குறையும்; சுமார் 1.5முதல் 2வரை கருவுறுதல் விகிதம் இருக்கும் என்று பரந்த அளவில் மதிப்பிடப்படுகிறது. TFR இப்போது 1க்குக் கீழே உள்ள உலகின் ஒரே நாடு தென்கொரியா. இங்கு TFR சற்றே மீண்டு வந்து 1ஐ விட அதிகரிக்கும். பிறகு இந்த நூற்றாண்டின் எஞ்சிய காலத்திற்கு 1க்கு மேல் இருக்கும் என்று ஐ.நா. மதிப்பிடுகிறது.

எனினும், ஐ.நா.வின் தற்போதைய மதிப்பீடுகளைவிடக் குறைவான அளவில் கருவுறுதல் குறையக்கூடும். இந்தியாவின் சொந்த மக்கள்தொகை மதிப்பீடுகள் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து தயாரிக்கப்பட்டதால் பழையவை. இந்த மதிப்பீடுகள், 2035 வாக்கில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உட்படக் குறைந்தது ஏழு முக்கிய இந்திய மாநிலங்களில் TFR 1.5 ஆக இருக்கும் என்று கூறுகின்றன. இவையும் குறைவான மதிப்பீடுகளாக இருக்க வாய்ப்புள்ளது. பிகார் போன்ற மாநிலங்களின் TFR, 2023 வாக்கில், ஏற்கனவே 2011ஆம் ஆண்டின் மதிப்பீடுகளைவிடக் கணிசமாகக் குறைவாக இருந்தது.

இந்திய அரசியல்வாதிகள் சிலரும் மக்கள்தொகை நிபுணர்களும் குறைந்த பிறப்பு விகிதங்களின் சவால்களை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறைந்த பிறப்பு விகிதத்தை மாற்றியமைக்கத் தேவையான கொள்கைகளையும் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இருப்பினும், இந்த மாற்றங்கள் எளிதில் நடக்காது என்று வரலாறு சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், இந்தியாவில் நடக்கும் விவாதம் பெரும்பாலும் அதன் மக்கள்தொகை வரலாறு பற்றிய தவறான வாசிப்பையும், பொதுக்கொள்கையே கருவுறுதலைக் குறைத்தது என்ற நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டது.

1950 முதல், 26 நாடுகளில் TFR 1.9க்குக் கீழே குறைந்துள்ளது என்று ஸ்பியர்ஸும் ஜெருசோவும் கண்டறிந்துள்ளனர். “இந்த இருபத்தி ஆறு நாடுகளில் ஒன்றில்கூட, வாழ்நாள் பிறப்பு விகிதம் மக்கள்தொகையை நிலைப்படுத்தும் அளவுக்கு மீண்டும் உயர்ந்ததில்லை. கனடா, ஜப்பான், ஸ்காட்லாந்து, தைவான் என எந்த எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாடுகளில் சிலவற்றில், குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு உதவும் கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக அரசாங்கங்கள் கூறுகின்றன. ஆனால் இதனால் பிறப்பு விகிதம் உயர்ந்துவிடவில்லை. இந்த நாடுகள் அனைத்தும் இரண்டுக்கும் குறைவான பிறப்பு விகிதங்களைக் கொண்டவையாகவே தொடர்கின்றன.”

இந்திய அரசியல்வாதிகள் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க அறிவுறுத்தல்கள், ஊக்கத்தொகைகள் ஆகிய இரட்டை உத்திகளைப் பயன்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது. எந்த உத்தியும் வேலை செய்ய வாய்ப்பில்லை என்று சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. நிலைமையை மாற்றவே முடியாத நிலையில், இந்தியச் சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான தாக்கங்கள் உள்ளன.

இவற்றில் முதலாவது, மக்கள்தொகைக்குள் நிலவும் வயது விகிதங்கள் மாறியதற்கான அச்சுறுத்தலும் அது சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களும் ஆகும். (இந்தத் தொடரின் 3ஆவது பகுதி, மாநில அளவில் இந்த விஷயத்தைக் கையாள்கிறது).

இது இந்தியப் பெண்களின் வாழ்க்கையிலும், குறிப்பாகத் தொழிலாளர் படையில் அவர்களது பங்களிப்பிலும் ஏற்படுத்தக்கூடிய தாக்கமும் உள்ளது.

வேலை செய்வதாகவோ அல்லது வேலை தேடுவதாகவோ தெரிவிக்கும் வயதுவந்த இந்தியப் பெண்களின் பங்கு ஆண்களில் பாதியைவிடக் குறைவாகவும், உலகின் பிற பகுதிகளைவிடக் கணிசமாகக் குறைவாகவும் உள்ளது. வேலையோ தொழிலோ செய்யவில்லை என்று தெரிவிக்கும் பெண்கள் தங்கள் வீடுகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளை, முக்கியமாகக் குழந்தைகளைப் பராமரிக்கும் ஊதியம் இல்லாத பணிகளைச் செய்கிறார்கள்.

இந்தியாவில் பணிபுரியும் மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கேற்பு விகிதங்களுக்கு இடையேயான இடைவெளி அவர்களின் இருபதுகளின் பிற்பகுதியில் மிக அதிகமாக உள்ளது. அப்போதுதான் இந்தியப் பெண்களுக்குக் குழந்தைப் பிறப்பு, குழந்தைப் பராமரிப்புப் பொறுப்புகள் ஆகியவை உச்சத்தை அடைகின்றன. இந்தியப் பெண்கள் குறுகிய காலத்திற்குள் தங்கள் கர்ப்பங்களை முடித்துக்கொள்வதால், அவர்கள் தொழிலாளர் சந்தைக்குள் வரலாம். இருப்பினும், உலகின் பிற பகுதிகளில் நடப்பதுபோல இந்தியப் பெண்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயது உயரத் தொடங்கும்போது, தொழிலாளர் சந்தையில் பெண்கள் நுழையும் அல்லது மீண்டும் நுழையும் காலமும் காலப்போக்கில் மாறலாம்.

குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் மேம்பட்ட வாழ்க்கை அமையும் என்னும் நம்பிக்கையில் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் அபிலாஷைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்படும் என்ற கேள்வியும் உள்ளது. இந்தியப் பெண்கள் குறைந்த எண்ண்ணிக்கையில் குழந்தைகளைப் பெறுவது தொழிலாளர் சந்தை சார்ந்த காரணிகளால் அல்ல என்றால், அவர்கள் மேலும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளும் தேர்வுகளை முறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, ஓய்வு, பயணம், கலை, பொது வெளி ஆகியவற்றிலும் இதன் தாக்கங்கள் இருக்கும்.

குறைந்துவரும் பிறப்பு விகிதங்களை மாற்றியமைக்க வேண்டுமா என்பது கருத்தியல் சார்ந்த திட்டம். இதை மாற்றியமைக்க முடியுமா என்பது தற்போது முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இன்னும் சிறிது காலத்திற்குக் குறைந்த பிறப்பு விகிதங்களே யதார்த்தமாக இருக்கக்கூடிய நிலையில், சரியான சான்றுகளைக் கொண்டிருப்பதும் விளைவுகளைப் பற்றித் தெளிவாக இருப்பதும் இந்தியா மேற்கொள்ள வேண்டிய அவசரமான அடுத்தகட்டச் செயபாடுகள் ஆகும்.

கட்டுரையாளர்

ருக்மிணி எஸ். ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data for India) நிறுவனத்தின் நிறுவனர். CASIஇன் தொலைதூர ஆய்வாளர். மக்கள்தொகையியல், சுகாதாரம், வீட்டுக் குடும்பப் பொருளாதாரம் ஆகியவை இவர் முக்கியமாகக் கவனம் செலுத்தும் பகுதிகள். இதற்கு முன்பு இந்தியச் செய்தி ஊடகங்களில் தரவுசார் இதழியல் பிரிவுக்குத் தலைமை தாங்கியுள்ளார் Whole Numbers Half Truths: What Data Can and Cannot Tell Us About Modern India (Westland, 2021) என்ற புத்தகத்தின் ஆசிரியர்.

தமிழில்: டி.ஐ. அரவிந்தன்

நன்றி: பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் இணையதளம்

இந்தக் கட்டுரை அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ‘இந்தியாவைப் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்கான மையம்’ என்னும் (Center for the Advanced Study of India, University of Pennsylvania) அமைப்பு நடத்தும் இணையதளத்தில் வெளியானது.

இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share