ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேற நேரிடும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 8 அணிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன. இரு அணிகளும் நேற்று முன்தினம் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்குவதை இந்திய அணி வீரர்கள் தவிர்த்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததைக் கண்டிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுக்கின்றனர். மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை பஹல்காமில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அர்ப்பணித்தது இந்திய அணி. இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் அணி கேப்டன்கள் கை குலுக்கும் விவகாரத்தில் தலையிட்டதாக ஜிம்பாப்வேயை சேர்ந்த நடுவர் பைகிராஃப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட்டை நீக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் தங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், தாங்கள் வெளியேற நேரிடும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.