வாக்கு திருட்டு (Vote Fraud) விவகாரத்தில் டெல்லியில் இன்று ஆகஸ்ட் 11-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணியின் 300 எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். ஆனால் பேரணியாக சென்ற 25 கட்சிகளின் எம்.பிக்கள் அனைவரையும் டெல்லி போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் எம்பிக்கள் அனைவரும் சாலையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி. தமிழக எம்பிக்கள் என அனைவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் என்ற பெயரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வாக்குகள் திருடப்பட்ட விவகாரத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களை முன்வைத்தே போலி வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டுள்ளனர்; வாக்குகள் எப்படி திருடப்பட்டுள்ளன என்பதை விவரித்து பரபரப்பை கிளப்பி வருகிறார் ராகுல் காந்தி.
அதே நேரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த பின்னணியில், டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்டனர். 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பிக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சிறிது தூரம் பேரணி சென்ற நிலையில் டெல்லி போலீசாரால் எம்.பி.க்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரும்பு தடுப்புகளைக் கொண்டு எம்.பிக்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் எம்.பிக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் போலீசாரின் தடுப்புகளை தாண்டி குதித்தனர்.
இதனைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே சாலையில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸ் தடையை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக எம்பிக்கள் உட்பட போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.