பாஸ்கர் செல்வராஜ்
மாற்றங்களற்ற பல பத்தாண்டுகள் உண்டு; சில வாரங்களில் பல பத்தாண்டுகளுக்கான வாரலாற்று மாற்றங்கள் நிகழ்ந்து விடுவதும் உண்டு என்ற லெனினின் கூற்றை உண்மையாக்குவது போல கடந்த சில வாரங்களாக உலக இந்திய அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
உலக நாடுகளின் மீதான அமெரிக்க வரிவிதிப்புப் போர் அதனைத் தொடர்ந்த உலக இந்திய நாடுகளின் நகர்வுகள் ஒரு புத்தகம் எழுதுவதற்கும் ஒரு மாபெரும் சமூக மாற்றத்துக்குமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் இதுகுறித்த உரையாடல்கள் ட்ரம்ப், மோடி ஆகிய தனிநபர்களை மையப்படுத்தியதாக இருக்கிறது.
உண்மையை மறைக்கும் சொல்லாடல்கள்
நேற்றுவரை மோடி கைகுலுக்கி கட்டி அணைத்த அமெரிக்கா ஒரே வாரத்தில் வில்லனானது. வில்லனாகச் சித்தரிக்கப்பட்ட சீனாவுடன் மோடி கைகுலுக்கி சிரித்துப் பேசும் படம் உலகம் முழுக்க பேசுபொருள் ஆனது. இந்த அரசியல் மாற்றத்திற்கான அலசல்கள் அனைத்துப் பத்திரிக்கைகளையும் நிறைத்தது. அவை அனைத்தும் பெரும்பாலும் ட்ரம்ப்பின் அதிரடி அரசியல் நடவடிக்கைகளாகவும் மோடியின் தோல்வியாகவும் இராஜதந்திரமாகவும் சித்தரித்தன.

ஆனால் இந்த வரிவிதிப்புப்போர் ஆப்கன் போன்ற நாடுகளில் உள்ள “தீவிரவாதத்துக்கு” எதிரான போர்கள், சதாம், கடாபி போன்ற சர்வாதிகாரிகளை வீழ்த்தி “சனநாயகத்தை” ஏற்படுத்த செய்த போர்கள், சிரியா போன்ற மேற்காசிய நாடுகளில் நடந்த உள்நாட்டு போர்கள், பாலஸ்தீன இசுரேலிய, ஈரான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் போர்கள், வண்ணப்புரட்சிகள், சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எதிரான அமெரிக்காவின் பொருளாதாரப்போர்கள், வணிகப்போர்கள், பணப்போர்கள், நிதியச்சந்தை போர்கள், சில்லுகளுக்கான போர்கள், கொரோனாவின் போதான “சனநாயக” நாடுகளின் “சர்வாதிகார” நாடுகளுக்கு எதிரான திரிபுத்தகவல் போர்கள் என பல போர்களின் வரிசையில் இப்போது வரிவிதிப்புப்போர் நடந்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாம் இந்த இரு நபர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொடங்கி நடந்து வருவது. எனவே இது இருதனிநபர்கள் தொடங்கி நடத்தும் வாரலாற்று நிகழ்வுகள் அல்ல. இந்தக் கட்டமைப்பு கோரும் வரலாற்று மாற்றங்களுக்கான போர்களை இந்தத் தனிநபர்கள் இப்போது தலைமை தாங்குகிறார்கள் என்பதுதான் சரியானது.
எனவே இவர்களை மையப்படுத்தி கட்டமைக்கும் கருத்தியல் உண்மையை மக்களிடம் மறைக்க உருவாக்கப்படும் சொல்லாடல்கள் மட்டுமே.
இது வாழ்வா? சாவா? போராட்டம்
இந்த வரிவிதிப்புப் போரின் தொடக்கம் அமெரிக்க சீன மோதலாகவே முதலில் தொடங்கியது. மற்ற சப்பான், இந்தியா போன்ற நாடுகள் வரிவிதிப்பைத் தவிர்க்க பேச்சுவார்த்தைக்குச் சென்றன. மாறிமாறி வரிவதித்துக் கொண்ட அவர்கள் இருவரும் இப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தைக்குச் சென்ற நாடுகள் வரிவிதிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. எதிரியிடம் மண்டியிட்ட பிறகு தன்னுடன் இதுவரை இணைந்து பயணம் செய்தவர்களின் மீது அமெரிக்கா பாய்ந்து தாக்கும் தர்க்கம் புரியாமல் அனைவரும் குழம்புகிறார்கள். அப்படிப் பாய்ந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பதைப்போல இந்த நாடுகள் அவர்களின் கால்களைக் கட்டிக் கொண்டு மன்றாடுகின்றன. காரணம் அவர்களின் சந்தைக்கான இவர்களின் உற்பத்தி சார்பு, அமெரிக்கர்களின் கைகளில் சிக்கியிருக்கும் இவர்களின் டாலர் கையிருப்புக் குடுமி தவிர வேறு என்ன இருக்கமுடியும்.
அமெரிக்க விவசாய, பால் பொருட்களை இந்தியாவுக்குள் வரியின்றி விற்க அனுமதிக்க ஒன்றியம் மறுத்தது பேச்சுவார்த்தைத் தோல்வியடையக் காரணமாகி இந்தியா மீது அமெரிக்கா 25 விழுக்காடு வரிவிதிப்பில் முடிந்தது.
அதனை அடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் 25 விழுக்காடு வரி ரசிய எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தண்டனையாக உலக தாதாவினால் கொடுக்கப்பட்டது. நான் யாரிடம் எண்ணெய் வாங்கினால் உனக்கென்ன?
இறையாண்மை கொண்ட எனது நாட்டின் தெரிவில் தலையிட உனக்கென்ன உரிமை இருக்கிறது? என்று கேட்பதற்குப் பதிலாக நீங்கள் சொல்லித்தான் வாங்கினோம் இப்போது நீங்களே தண்டிக்கும் தர்க்கம் புரியவில்லை என்று இன்னொரு நாட்டில் போய் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒப்பாரி வைத்தது இந்தியாவின் நவகாலனிய தன்மையைக் காட்டுவதாக இருந்தது.
திடீரென ஏன் இந்தச் சிறப்புத் தண்டனை என்பது பலருக்கும் புரியாத நிலையில் எண்ணெய்யை இறக்குமதி செய்து கொழுக்கும் ரிலையன்ஸ், நயரா நிறுவனங்களை விட்டுவிட்டு ஆபரணக் கற்கள், ஆடைகள், தோல் பொருட்கள், பொறியியலாக்கப் பொருட்கள், இறால் ஏற்றுமதி ஆகியவற்றின் மீது இந்த 50 விழுக்காடு வரியை நடைமுறைபடுத்தி இருப்பது அதில் இருக்கும் இன்னுமொரு புரியாத புதிர். அமெரிக்கர்களுக்குத் தேவையான மின்னணு, மருந்துப் பொருள்கள் தவிர்த்து முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் சிறுகுறு உற்பத்தியாளர்களையும் அதில் வேலைசெய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த வரிவிதிப்பு இந்தியாவின் கையை முறுக்கி வழிக்குக் கொண்டுவரும் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இருக்க இடம் இல்லை.
இப்போது ஒன்றிய பாஜக அரசு அமெரிக்க அழுத்தத்துக்குப் பணிந்து அவர்களின் விவசாய பால் பொருள்களை அனுமதித்தால் அதில் ஈடுபட்டு உயிர்வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களும் தொழிலாளர்களும் பாதிக்கபடுவார்கள். தவறினால் இலட்சக்கணக்கான தொழிற்துறை தொழிலாளர்கள் வீதிக்கு வருவார்கள் என்ற இக்கட்டான நிலை. இரண்டுமே இந்த அரசை ஆட்டம் காணவைத்து பாஜகவை வீட்டுக்கு அனுப்பிவிடும் ஆபத்து கொண்டது.

எனவே இது ஒன்றிய பாஜக அரசுக்கு இது வாழ்வா சாவா போராட்டம். அவர்களுக்கு மட்டுமா?
தமிழ்நாட்டைக் கடுமையாகப் பாதிக்கும்
எந்த மாநில மக்களும் விவசாய சார்பில் இருந்து முழுமையாக விடுபட்டு விடவில்லை. ஆதலால் அமெரிக்க விவசாய பால் பொருள்கள் உள்ளே நுழைந்தால் கிராமப்புற உற்பத்தியாளர்கள் அனைவரும் நகர்ப்புற சந்தையை இழந்து வருமானத்தை இழப்பார்கள். தொழிற்துறையின் மீதான வரி தொழிற்துறை வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் சிறுகுறு உற்பத்தியாளர்கள் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மரண அடியாக இருக்கும்.
அதிலும் இந்தியாவிலேயே அதிகம் தொழிற்துறை வளர்ச்சி அடைந்த அதிகமான சிறுகுறு தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழகம் இதில் அனைவரையும் விட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும்.
குறிப்பாக துணிகள், தோல்பொருள்கள், பொறியியலாக்கப் பொருள்கள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும். அதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தில் இருக்கிறார்கள். இந்த இலட்சக்கணக்கான குடும்பங்களின் இழப்பை ஒப்பிட கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதிக்கும் விவசாய பால் பொருள்கள் இறக்குமதியை அனுமதிக்க மறுப்பது என்று முடிவெடுத்து இருக்கிறது ஒன்றியம். இதனால் தமிழகத்தின் மீதான பாதிப்பும் சிறுகுறு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதான நெருக்கடியும் முற்றி இருக்கிறது. இது நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ஒன்றியம் விவசாயம் முதன்மையாக நடக்கும் பெரும்பான்மை வடமாநிலங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதால் விவசாய பால் பொருள் இறக்குமதிக்கு அனுமதி மறுத்து தனது அரசியல் அடித்தளம் உடையாமல் காத்தது. பின்னரான ரசிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த மறுத்து குஜராத் மாநில எண்ணெய் சுத்திகரிப்பு முதலாளியின் நலனைக் காத்து இருக்கிறது. இதன்மூலம் பாஜகவின் பொருளாதார அரசியல் அடித்தளம் உடையாமல் பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது.
அதேசமயம் இதனை வெறும் எண்ணெய் இறக்குமதியாக மட்டும் பார்க்க இயலாது. நமது இறக்குமதியில் பெரும்பகுதி எண்ணெய் மற்றும் மின்னணு தொழில்நுட்ப பொருள்கள்தான். இந்த இரண்டையும் டாலரில் கடனாக வாங்கி நுகர்ந்து டாலரில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலர் கடனை அடைத்துக் கொண்டு இருந்தோம்.
இப்போது எண்ணைய்யை ரூபாயில் வாங்கி டாலரைச் சேமித்து டாலர் கடன் சார்பைக் குறைக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறோம். அந்தத் தற்சார்பு முயற்சி அமெரிக்கர்களின் இலாபத்தைக் குறைத்து அவர்களின் தாளத்துக்கு இந்தியாவை ஆடவைக்கும் வலிமையைக் குறைப்பதால் அந்த முயற்சியைத் தடுக்க நினைக்கிறார்கள்.
ஒன்றியத்தின் இந்தத் தற்சார்பு நாட்டில் உள்ள அனைவரின் தற்சார்பு சார்ந்ததாக இல்லாமல் குஜராத் முதலாளிகளின் தற்சார்பாக மாற்றுவது அவர்களுக்கு உள்நாட்டில் எதிர்ப்பைக் கூட்டுகிறது. ரசிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த மறுத்து எதிரணியான சீன, ரசிய கூட்டணிக்கு நகரும் ஒன்றியத்தின் நகர்வும் டாலரில் இறக்குமதியாகும் மின்னணு தகவல் தொழில்நுட்ப பொருள்களின் இருக்கும் டாலர் சார்பை உடைத்து யுயன் வழியான முதலீடாக மாற்றுவதிலும் பார்ப்பனிய முதலாளிகள் மட்டுமே பலன்பெரும் வகையில் நகர்த்துகிறார்கள். மின்கலம் மற்றும் மின் வண்டிகள் தயாரிப்புக்கான ஒப்பந்தங்களை சீன நிறுவனங்களுடன் அவர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.
இப்போது விலையைத் தீர்மானிக்கும் சிமெண்ட், இரும்பு, எண்ணெய் அதில் இயங்கும் வண்டிகள், சரக்குப் போக்குவரத்து அனைத்தும் அவர்களிடம்தான் இருக்கிறது. எண்ணெய், சரக்குப் போக்குவரத்தின் விலையையும் வரியையும் கூட்டி இப்போது தமிழ்நாடு உள்ளிட்ட எல்லா மாநில தேசியஇன மக்களையும் சுரண்டி வாழ்வதைப்போல அடுத்து இரும்பு, சிலிக்கன், மின்கலம், அதில் இயங்கும் வண்டிகள், சரக்குப் போக்குவரத்து அனைத்தையும் கைப்பற்றும் அவர்கள் அதன் வழியாக நம்மை ஒட்டச் சுரண்டுவார்கள். நாமும் வழக்கம்போல ஒன்றியம் ஒடுக்குகிறது; வடக்கு வஞ்சிக்கிறது என்று அரசியல் பேசிக்கொண்டு இருப்போம். அவர்களின் ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் சுரண்டலும் அடுத்த பல பத்தாண்டுகளுக்குத் தொடரும். இந்தச் சமூகம் சாதிய சமூகமாகவே தொடர்ந்து நீடிக்கும்.

அமெரிக்கர்களும் ஒன்றியமும் சேர்ந்து கொண்டு சீனா பிளஸ் ஒன் உத்தியை அறிவித்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு உற்பத்தியை மாற்றப் போவதாகக் கூறிக்கொண்டு சீன நிறுவனங்களை வெளியேற்றி இந்தியச் சந்தையில் முற்றோருமையை அடைந்தார்கள். அதனால் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி உயர்வு வேலைவாய்ப்பின்மையை நாம்தான் அனுபவிக்கிறோம். அதற்குள் இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அந்நிய முதலீடுகளை ஈர்த்து மாற்று உற்பத்தி அடித்தளத்தையும் வேலைவாய்ப்பையும் பெருக்க முற்படும்போது அவர்களுக்குள் முட்டிக்கொண்டு எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது ஆடைகள், தோல்பொருள்கள், பொறியியலாக்கப் பொருள்களுக்கு வரிவிதிக்கும் அமெரிக்கா தற்போது தமிழ்நாடு அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய உற்பத்தி செய்யும் மருந்துப் பொருள்கள், மின்னணு பொருள்களின் மீது நாளை வரிவிதிக்காது என்று கூறமுடியுமா?
தற்போதைக்கு அந்நிய முதலீடு எங்கள் அரசால் வந்தது; வரிவிதிப்பு அவர்கள் முடிவால் வந்தது என்று அரசியல் செய்வது வரும் தேர்தலின் போது வாக்கு வாங்கி வெற்றிபெற உதவும். ஆனால் வேலை இழந்து பாதிக்கப்படப் போகும் குடும்பங்களுக்கு அந்த அரசியல் என்ன மாற்றை வழங்கும்.
திமுக கூட்டணி வைத்து இருக்கும் காங்கிரஸ் தமிழ்நாட்டைப் பின்பற்றி இப்போது சமூகநீதி அரசியல் பேசுவது சரியானது. ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்கிறது. வரவேற்கத்தக்க முன்மொழிவுகள்தான். ஆனால் அமெரிக்க-இந்திய வணிக மோதலுக்கு அதனிடம் என்ன தீர்வு இருக்கிறது? அதனால் பறிபோகும் வேலைவாய்ப்புகளுக்கு மாற்றாக எப்படி வேலைவாய்ப்பை உருவாக்கப் போகிறது? வேலைவாய்ப்பு இல்லாமல் இடஒதுக்கீடு அளித்து என்ன பயன் இருக்கப் போகிறது?
ஒருவேளை ஒன்றியத்தில் திமுக ஆதரவு காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பார்ப்பனிய முதலாளிகளிடம் குவிந்து வரும் உற்பத்தி தொழில்நுட்பம் மூலதனம் மற்ற மாநில முதலாளிகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அனைத்து பொதுத்துறை வங்கிகள், நிதிநிறுவனங்கள் அந்த முதலாளிகளுக்குக் கடனாக, பங்குச்சந்தை முதலீடாக பணத்தைக் கொடுத்து இருக்கும் நிலையில் அவர்களின் ஏகபோகத்தில் ஏற்படும் உடைப்பு அவர்களின் சொத்து மதிப்பு சரிந்து பங்குச்சந்தை குமிழி உடைந்து இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கும் ஆபத்து இருக்கிறதே!
உற்பத்தி தானியியங்கிமயமாகி வரும் நிலையில் மீண்டும் வரும் காலத்தில் இந்த உற்பத்தியும் ஒரு சிலரிடத்தில் குவிந்து இப்போதுபோல மாநில தேசிய இனங்களை ஒடுக்காது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? இந்தச் சூழலில் மாநிலங்களின் கூட்டாட்சி குறித்து கருத்து தெரிவிக்க திமுக அரசு மற்ற மாநிலங்களை அழைத்திருப்பது சரியான அரசியல் முன்னெடுப்பு. ஆனால் கூட்டாகச் சேர்ந்து எதனை ஆட்சி செய்யப் போகிறார்கள் என்ற தெளிவு இருக்கிறதா? மாநில தன்னாட்சி கோருவது சரியான அரசியல். மாநிலங்கள் எதனை எல்லாம் தாங்களே ஆட்சி செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தெளிவு இருக்கிறதா?
தேவை முழுமையான ஒரு பகுப்பாய்வு
முந்தைய ட்ரம்ப் காலத்திய சீனாவுடனான மோதல், கொரோனா பெருந்தொற்று முடக்கம், இந்திய-சீன மோதல், இந்துத்துவ சிறுபான்மை முசுலீம் வெறுப்பு அரசியல், தமிழக மாநில உரிமை பறிப்பு என்ற அரசியல் பொருளாதார குழப்பம் நிறைந்த காலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது.
சில்லுகள், 5ஜி, மின்னணு வணிகம், மின்கல வண்டிகள் என்பதாக உற்பத்தி மாற்றத்தைப் புரிந்து கொண்டு அவற்றில் தமிழ்நாட்டின் இடத்தை உறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டது. ஒன்றிய தமிழக முரணை உறுதியாக நின்று தமிழகத்தின் உரிமைக்காக போராடியது.

ஆனால் இந்த உற்பத்தி மாற்றம் அது ஏற்படுத்தும் உலக இந்திய தமிழக முரண்பாடுகள் குறித்த முழுமையான பகுப்பாய்வு செய்யத் தவறியது இப்படியான எதிர்பாராத இக்கட்டுகளை நாம் எதிர்கொள்ள நேரிட்டு இருக்கிறது. இதில் எவரும் அப்படியான பார்வை இன்றி இருந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அப்படியான சரியான புரிதலின் அடிப்படையில் முரண்பாட்டைத் தீர்க்கும் சரியான வழிமுறையைக் கைக்கொண்டு நமக்கான நோக்கத்தையும் உத்தியையும் வகித்துக் கொண்டு செயல்பட தவறி இருக்கிறோம்.
அந்தந்த நேரத்துக்குத் தேவையான உடனடி தீர்வுகளை ஒன்றியமும் அவர்களைப் பின்பற்றி நாமும் கண்டடைய முனைந்ததில் இப்போது இந்த இடர்பாடுகளை எதிர்கொள்கிறோம். எனவே இப்போதேனும் முழுமையான முறையான ஒரு பகுப்பாய்வைச் செய்து இந்த உற்பத்தி மாற்றங்களைப் புரிந்துகொண்டு சரியான இலக்கு, வழிமுறை, உத்தி, பாதையை வகுத்துக் கொண்டு முன்னேறுவதுதான் நமது இன்னல்கள் தீர இருக்கும் ஒரே வழி. அப்படியான ஒரு வரைவை அடுத்தடுத்த கட்டுரைகளில் காணலாம்.