புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில குழு இன்று (மார்ச் 26) கூடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தது. அதன் பின், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் – திமுக வுடனான பேச்சுவார்த்தையில் இழுவை தொடர்ந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று வரை இழுபறி நீடித்ததால் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை, திருபுவனையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டது.
லாஸ்பேட்டை தொகுதியில் ராஜாங்கம், திருபுவனை தொகுதியில் தட்சிணாமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவான கூட்டணி என்று சொன்னாலும் இன்று தளர்ந்து போய்தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16, திமுக 14 தொகுதிகளில் போட்டியிடுவது என தொகுதி பங்கீடு செய்துகொள்ளப்பட்டது.
இதில் திமுக உழவர்க்கரை தொகுதியை விசிகவுக்கு கொடுத்தது. ஆனால் திருமாவளவன் உழவர்கரை, உசுடு நெட்டக்குப்பம் ஆகிய மூன்று தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என கூறி வேட்பாளரை அறிவித்துள்ளார். உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிவசங்கர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை ஆகிய ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன .இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான அவகாசமும் முடிந்துவிட்டதால், இந்த தொகுதிகளில் காங்கிரஸ் -திமுக நேருக்கு நேர் மோத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுபோன்று உழவர்கரை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் சிபிஐ வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இதனால் உழவர்கரை தொகுதியில் சிபிஐ – விசிக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
