சுதந்திர தின நாளில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தமிழர் ஒருவர் வீட்டில் நிகழ்ந்த பயங்கர வெடி சப்தம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தார்.
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டன. பெங்களூரு மாநகரிலும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தன.
இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவே பெங்களூரு, சின்னயனபாளையா பகுதியில் வீடு ஒன்றில் இருந்து திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. இந்த வெடி சப்தத்தால் 12 வீடுகள் சேதமடைந்தன; 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் கூறுகையில், சின்னயனபாளையா பகுதியில் வசித்து வருபவர் அய்யப்பன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது மனைவி கஸ்தூரி.
பெங்களூரு சிட்டி மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வருகிறார் அய்யப்பன். இவர்கள் சின்னயனபாளையா பகுதியில் வாடகை வீட்டில் முதல் தளத்தில் வசிக்கின்றனர்.
இந்த வீட்டில்தான் நேற்று காலை திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. இந்த வெடி அதிர்வால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அதிர்ந்து சேதமடைந்தன. சில வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. வீடுகளில் இடிபாடுகளில் சிலர் சிக்கி உயிருக்கு போராடினர்.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய கஸ்தூரி, சரசம்மா ஆகியோர் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேபோல படுகாயமடைந்த நிலையில் 11 வயது சிறுவன் முபாரக் மீட்கப்பட்டார். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 11 வயது சிறுவன் முபாரக் உயிரிழந்தார்.
முதல் கட்ட விசாரணையில் சமையல் எரிவாயு சிலிண்டர்தான் வெடித்திருப்பது உறுதியானது. கஸ்தூரி வீட்டில் மேலும் பல சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் வாங்கி பதுக்கப்பட்டனவா? என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் எதுவும் வெடித்ததாக சாத்தியம் தெரியவில்லை என்றனர். சுதந்திர தின நாளில் பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.