தமிழ்நாட்டில், போலியான கணக்குகளைத் தாக்கல் செய்து வருமான வரியைத் திரும்பப் பெறும் மோசடி நடவடிக்கைகளை வருமான வரித் துறை முறியடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Income Tax Refund
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை, சென்னை, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 18 இடங்களில் வருமான வரி ஆய்வு / சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலியாக வரிக் கழிவுகள் காட்டப்படுவதன் வாயிலாக, செலுத்திய வரியை மோசடியாகத் திரும்பப் பெறும் நபர்களின் வருமானவரி அறிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்களின் முறைகேடுகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வருமான வரி நிபுணர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வரி செலுத்தும் பல ஆயிரக்கணக்கான மோசடியான நபர்களுக்கு வருமான வரி திரும்பப் பெறும் கோரிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கு உதவியதாகவும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளதை அடுத்து, இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
18 இடங்களில் சோதனை
தமிழகத்தில் 18 இடங்களில் உள்ள வருமான வரி அலுவலக வளாகங்களில் இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருமான வரி அதிகாரிகள் வருமான வரி அறிக்கைகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து, ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
என்ன முறைகேடுகள்?
இத்தகைய நபர்கள், 80-ஜிஜிசி பிரிவின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள், 80-டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்துதல், 80-சி பிரிவின் கீழ் கல்விக் கட்டணம், 10(13 ஏ) – பிரிவின் கீழ் வீட்டு வாடகைப் படி மற்றும் இதர பிரிவுகளின் கீழ் போலியான வரி விலக்கு கோரிக்கைகளை முன்வைத்து, ஆயிரக்கணக்கான வரி செலுத்தும் நபர்களுக்குத் தவறான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய உதவியிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் விளைவாக, கோடிக்கணக்கான ரூபாயை திரும்பப் பெற்று, அரசிற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், அசாம் மற்றும் பீகார் மாநிலங்கள் முழுவதும் அரசு நிறுவனங்களின் பணியாளர்கள், பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி வரும் அல்லது ஓய்வு பெற்ற பணியாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வரி செலுத்துவோர்களை இடைத்தரகர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகள் வாயிலாக குழுக்கள் அமைத்தும், வாய்மொழி வாயிலாகவும் ஏமாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
திட்டமிட்ட மோசடி
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள இத்தகைய முகவர்களைப் பொறுத்தவரை, மோசடியான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்காக அவர்களால் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஐடிகள் உருவாக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து, பல ஆயிரக் கணக்கான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, பல கோடி ரூபாய் அளவில் போலியான முறையில் வரியைத் திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை நடவடிக்கைகளின் போது குற்றஞ்சாட்டுவதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து வருமான வரி வளாகங்களிலும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நிதி இழப்பை ஏற்படுத்தும் சதி
அரசை ஏமாற்றி நிதி இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய பரவலான சதித்திட்ட நடவடிக்கைகள், அனைத்து வரி செலுத்துவோரும் நேர்மையற்ற, நெறிமுறையற்ற அம்சங்களால் உருவாக்கப்பட்ட இத்தகைய செயல்பாடுகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டு அல்லது கடந்த நிதியாண்டுகளில் மோசடியான வரி விலக்குகளைத் தாக்கல் செய்து தவறான வருமான வரி அறிக்கைத் தாக்கல் செய்த அனைத்து வரி செலுத்துவோரும் தாமாக முன்வந்து புதுப்பிக்கப்பட்ட வருமான வரி அறிக்கைத் தாக்கல் / திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைத் தாக்கல் செய்வது அவர்களுக்கு நலன் பயப்பதாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் வரி செலுத்துவோர் நேர்மறையான பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குவதோடு எதிர்காலத்தில் அபராதம் மற்றும் வழக்குத் தொடர்தல் போன்ற தண்டனை நடைமுறைகளைத் தவிர்க்கவும் உதவிடும். வருமான வரித் துறை வருமான வரி அறிக்கைத் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோருக்குத் தேவையான உதவிகளை வழங்கும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.