சுகுணா புட்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் இன்று (செப்டம்பர் 24) இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம். முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். குறிப்பாக நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் கோவையில் செயல்பட்டு வருகிறது. சுகுணா குரூப்ஸ் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நான்கு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சுகுணா குரூப்ஸ் அலுவலகத்தில் நான்கு வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று இரவு எட்டு மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக (செப்டம்பர் 24) வருமான வரித்துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 9 மணிக்கு மீண்டும் இரண்டு அலுவலகங்களுக்கும் வந்த வருமானத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். கோவையில் மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சுகுணா புட்ஸ் அலுவலகத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் ஈரோட்டில் செயல்பட்டு வரும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக சோதனையை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.