உயர் ரத்த அழுத்தம் எப்போது பரிசோதிக்க வேண்டும்?… முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Important things to know about high blood pressure

உயர் ரத்த அழுத்தம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களை பட்டியலிட்டுள்ளோம்.

ரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு பெரும்பாலும் தெளிவான அறிகுறிகள் தெரிவதில்லை. ஆகவே, ரத்த அழுத்தம் எப்படி உள்ளது என்பதை பரிசோதிக்கவோ, அதற்கு கவனம் கொடுக்கவோ பலரும் விரும்புவதில்லை.  உங்களை நீங்கள் ஆரோக்கியமாக உணர்ந்தாலும், ரத்த அழுத்த அளவுகள் உடலுக்குள் மாறிக்கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

ADVERTISEMENT

உயர் ரத்த அழுத்தம் இருப்பதை கண்டறியத் தவறினால் அது காலப்போக்கில் கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக இதய நோய், சிறுநீரகப் பிரச்சனை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் வழிவகுக்கும். ஆகவே,  ரத்த அழுத்தத்தை கண்காணிப்பது அவசியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ரத்த அழுத்தத்தை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பரிசோதியுங்கள்

எந்தவித உடல்நல பிரச்சனைகளும் இல்லாத 20 – 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஒவ்வொரு 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன், சர்க்கரை நோய், உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் ரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஒவ்வொரு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிப்பது சிறந்தது.

ADVERTISEMENT
ரத்த அழுத்தத்தில் தவறான முடிவுகளும் வரலாம்

ரத்த அழுத்தப் பரிசோதனையின் போது செய்யப்படும் சில தவறுகள் துல்லியமற்ற அளவீடுகளை தரலாம். வீட்டில் பயன்படுத்தும் ரத்த அழுத்த சோதனைக் கருவிகள் நம்பகமானவையாக இருந்தாலும், தவறான விதத்தில் பயன்படுத்தினால் துல்லியமில்லாத அளவீடுகளைத் தரலாம். அதேபோல உடற்பயிற்சி அல்லது காஃபி உட்கொண்ட உடனேயே ரத்த அழுத்தத்தை அளவிடுதல், அல்லது பரிசோதனைக்கு முன் ஓய்வைத் தவிர்த்தல் போன்ற தவறுகள் முடிவுகளைப் பாதிக்கக்கூடும்.

ரத்த அழுத்த பரிசோதனையின்போது செய்யக்கூடாதவை

தவறான ரத்த அழுத்த அளவீடுகள் வர உடல்நிலையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. முதுகுக்கு ஆதரவு இல்லாமல் உட்காருவது, கால்களைக் குறுக்காகப் போட்டுக்கொள்வது, அல்லது பரிசோதனையின் போது பேசுவது போன்றவை அளவீடுகளைத் தவறாகக் காட்டக்கூடும். அமைதியான சூழலில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உங்கள் கையை இதய மட்டத்திற்கு நேராக வைத்து இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

ADVERTISEMENT
ரத்த அழுத்தம் : எப்போது அறிகுறிகள் தெரியும்?

உயர் ரத்த அழுத்தம் தீவிரமடையும் வரை எந்த எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டுவதில்லை. தலைவலி, தலைச்சுற்றல் அல்லது மார்பு வலி போன்ற அறிகுறிகள் தோன்றும் வரை பலர் நலமாகவே உணர்கிறார்கள். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் நோயின் தீவிரம் ஏற்கனவே அதிகரித்த பிறகே தோன்றுகின்றன.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

உங்கள் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 140 mmHg-க்கு அதிகமாகவோ அல்லது டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 90 mmHg-க்கு அதிகமாகவோ இருந்தால், மருத்துவரை சந்தித்து ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். அதேபோல உங்களுக்கு நெஞ்சு வலி, கடுமையான தலைவலி, மூச்சுத்திணறல் அல்லது மங்கலான பார்வை ஏற்பட்டால் உடனடி மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share