ஜிஆர் சுவாமிநாதன்.. நீதிபதிகளுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம்.. இதுவரை என்ன நடந்தது?

Published On:

| By Mathi

GR Swaminthan Impeachment

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ‘இந்தியா கூட்டணி’ எம்.பிக்கள் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை நேற்று வழங்கினர்.

நீதிபதிகளை தகுதி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் ஏற்கனவே இம்பீச்மெண்ட் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
  • 1993-ம் ஆண்டு பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ராமசாமிக்கு எதிராக முதன் முதலாக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களவையில் தீர்மானம் நிறைவேறுவதற்கான 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
    • 2011-ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென்னுக்கு எதிராக மாநிலங்களவையில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவ் வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் அவர் பதவியில் இருந்தே விலகினார். இம்பீச்மெண்ட் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி செளமித்ரா சென்.
    • 2011- ஆம் ஆண்டு சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பிடி தினகரன் மீது ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால் அவர் மீது இம்பீச்மெண்ட் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மாநிலங்களவை தலைவரே ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தினார். ஆனால் பிடி தினகரன், தமது பதவியை ராஜினாமா செய்தார்.
    • 2015-ம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலாவுக்கு எதிராக மாநிலங்களவையில் இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது தமது தீர்ப்பில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பர்திவாலா நீக்கிக் கொண்டதால் இம்பீச்மெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
    • 2015-ம் ஆண்டு குவாலியர் மாவட்ட மற்றும் அமர்வு முன்னாள் நீதிபதி எஸ்கே கங்கலே மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்போது மாநிலங்களவையில் 50-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள், கங்கலேவுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொண்டுவர கையெழுத்திட்டனர். ஆனால் விசாரணைக் குழுவின் தீர்ப்பில் கங்கலே மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் இம்பீச்மெண்ட் தீர்மானம் கைவிடப்பட்டது.
    • 2017-ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதி சிவி நாகார்ஜூன ரெட்டியை பதவி நீக்கம் செய்ய கோரும் இம்பீச்மெண்ட் தீர்மானம் மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. ஆனால் கையெழுத்திட்ட எம்.பிக்கள் சிலர் திரும்பப் பெற்றதால் இத்தீர்மானம் கைவிடப்பட்டது.
    • 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ், மாநிலங்களவையில் கொடுக்கப்பட்டது. அப்போதைய மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இதனை நிராகரித்தார். இந்திய வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவருக்கு எதிராக முதல் முறையாக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • 2025-ல் பல்வேறு சர்ச்சை தீர்ப்புகளை வழங்கி சமூக மற்றும் மத மோதல்களை உருவாக்கி வருகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் என்ற குற்றச்சாட்டுடன் அவரை பதவி நீக்க வகை செய்யும் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை டிசம்பர் 9-ந் தேதியன்று திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி எம்.பிக்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்தனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் உடனிருந்தார்.
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share