நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க கோரி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

G.R. Swaminathan

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை மீது உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரி 120-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்ட நோட்டீஸை இன்று (டிசம்பர் 9) திமுகவில் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சியினர் மக்களவை சபாநாயகரிடம் வழங்கி உள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இந்து அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கல் தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் அருகே மட்டும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை இந்து அமைப்புகள் மீறியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் உயர்நீதிமன்ற பாதுகாப்பில் இருந்த சிஐஎஸ்எப் வீரர்களின் பாதுகாப்பில் மனுதாரர் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனிடையே திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தெரிவித்த தமிழக காவல்துறையினர் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி சி ஐ எஸ் எப் அதிகாரிகள் திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து திரும்பினர்.

ADVERTISEMENT

இது குறித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்பி இன்று வழங்கினார்.

ADVERTISEMENT

அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரானா பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜோதிமணி, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், இந்த மனுவில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திடுள்ளனர்.

தகுதி நீக்க தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share