கிட்னி திருட்டு : தனியார் மருத்துவமனைக்கு எதிரான உத்தரவு ரத்து!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி வழக்கில், திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (நவம்பர் 3) ரத்து செய்தது.

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரும் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தாசை காட்டப்பட்டு, அவர்களது சிறுநீரகங்கள் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

ADVERTISEMENT

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பேசிய தொகையை விட மிகக் குறைவான பணமே வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட ஆனந்தன், ஸ்டான்லி மோகன் போன்ற இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இந்த வழக்கில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை ஆகிய இரண்டு தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. 

ADVERTISEMENT

இதை எதிர்த்து சிதார் மருத்துவமனை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை நேற்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது அவர், “சட்டவிரோத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வழக்கு என்றாலும், உரிமத்தை ரத்து செய்யும் முன் ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994, பிரிவு 16’-ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு, விசாரணைக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், அரசு தரப்பில் அது பின்பற்றப்படவில்லை” என்று கூறி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்தார். 

ADVERTISEMENT

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 4) தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது. இந்நிலையில், திருச்சியிலுள்ள சிதார் என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த உத்தரவைக் காரணம் காட்டி,

திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். ‘குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக’ தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஃபெயிலர் மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன். சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த சட்டவிரோத சிறுநீரக மோசடி குறித்து விசாரிப்பதற்காக, ஆகஸ்ட் 25, 2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. தென் மண்டல காவல்துறைத் தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில், ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், பி.கே. அர்விந்த் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மோசடியில் இடைத்தரகர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகள் எனப் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த SIT குழு தனது விசாரணை அறிக்கையை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், உயர் நீதிமன்றம் SIT அமைத்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share