தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இசையமைப்பாளர் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது என்பது சகஜமான ஒன்றுதான்.
ஆனால் யார் இசையில் யார் பாடுகிறார்கள் என்பதைப் பொறுத்து அதன் முக்கியத்துவம் அதிகரிக்கும் . ஏ.ஆர்.ரகுமான் இசையில் எம்.எஸ்.வி பாடியது போல ; ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.ஆர்.ரகுமானும் தேவாவும் சேர்ந்து பாடியது போல !
அப்படி ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘ படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாரும் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனும் இணைந்து நடிக்கும் படம் ‘கொம்பு சீவி’ .
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கையையும், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகளோடு காட்டும் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் முதல் முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்.
பா.விஜய் வரிகளில் உருவான “அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்” என்ற செண்டிமெண்ட் பாடல்.
திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
பொதுவாக இளையராஜா பாடல்களை யாராவது எந்தப் படத்திலாவது பயன்படுத்தினால் வில்லில் இருந்து சீறும் அம்பு போல ராஜாவிடம் இருந்து வழக்குப் பாயும் .
அதுவே இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாவாக இருந்தால் அப்படி வழக்கு ஏதும் வராது.
இளைராஜாவாகவே இருந்தால் இன்னும் வசதி,. அவரது பழைய பாட்டு மெட்டில் இருந்தே ஒரு பாடலை – அது என்ன பாடல் என்று சொன்னால் – அவரே போட்டுக் கொடுத்து விடுவார் .
இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா வேறு பாடி இருக்கிறார் . அப்புறம் என்ன? இந்தப் படக்குழு இளையராஜா பாட்டை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் . நோ ப்ராப்ளம்.
எனவே பாடல் மற்றும் இசை விஷயத்திலும் கொம்பு சீவி விடப்பட்டு இருக்கிறது கொம்பு சீவி .
– ராஜ திருமகன்
