தமிழக வெற்றிக்கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த விஜய் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக முன்னாள் நீதி அரசர் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு குழு ஆய்வு குழுவும் கரூருக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதியழகனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு தாக்கல் செய்தது.
இதையொட்டி மதியழகன் இன்று(அக்டோபர் 9) குற்றவியல் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்போது சிறப்பு விசாரணை குழு மனுவுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதியழகன் சார்பில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற வகையிலும் ஜெனரேட்டர் ஆப் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மதியழகனிடம் விசாரிக்க வேண்டும் என்பதாலும் அவருக்கு போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து மதியழகனை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்.ஐ.டி குழுவுக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.