இந்தியா முழுக்க தெருநாய்கள் தொல்லை என்பது மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது, நடப்பு ஆண்டில் மட்டும் ஏராளமான பொதுமக்களை தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்துள்ளது. ரேபிஸ் தொற்று காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.
தெரு நாய்கள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகள் கடித்தாலும் ரேபிஸ் நோய் தொற்று வருவதற்கு 100 சதவிகிதம் வாய்ப்புகள் உள்ளது. இந்தக் கட்டுரையில் நாய் கடித்த உடனே எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது மற்றும் தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
நாய் கடித்தல் என்பது மருத்துவர்களால் மூன்று வகைகளில் பிரிக்கப்படுகிறது. லேசான (வகை 1), மிதமான (வகை 2) மற்றும் கடுமையான (வகை 3) பாதிப்புகள் ஏற்படுத்துதல் என்று மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகைகளுக்கு உடனடியாக நாய்க்கடி தடுப்பூசி போட வேண்டும். மூன்றாவது வகையான கடுமையான நாய்க்கடி பாதிப்புக்கு ரேபிஸ் நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
கடித்த பகுதியை சுத்தம் செய்தல்
நாய் கடித்த இடத்தில் மஞ்சள் தடவ வேண்டும் என்பது தவறான முடிவு. முதலில் நாய்க்கடி பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். அப்படி செய்யும்போது நாய்க்கடி காயத்தில் உள்ள அழுக்கு, பாக்டீரியா மற்றும் உமிழ்நீரை சுத்தப்படுத்த உதவும். ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆல்ஹகாலைக் கொண்டு கழுவக் கூடாது. ஏனெனில் காயம் அடைந்த பகுதியில் அவை மேலும் எரிச்சலூட்டலாம்.
அதிக இரத்தப்போக்கு
நிதானமாக நாய்க்கடியின் தீவிரத்தை முதலில் மதிப்பிட வேண்டும். நாய்க்கடியால் இரத்தப் போக்கு ஏற்பட்டால், சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் மூலம் மெதுவாக அழுத்த வேண்டும். இது ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். வீக்கத்தை குறைப்பதன் மூலம் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியையும் நம்மால் குறைக்க முடியும். காயத்தில் அதிக இரத்தப்போக்கு தொடர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.
சிகிச்சை முறை
டெட்டனஸ் ஊசி மிகவும் முக்கியமாக போட வேண்டும். இதுதவிர நாய்க்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி ஐந்து டோஸ்களாக செலுத்தப்படுகிறது. முதல் டோஸ் நாய் கடித்த உடனே போடப்பட வேண்டும். பிறகு 3 ஆம் நாள், 7 ஆம் நாள், 14 ஆம் நாள் என நான்கு டோஸ்கள் போட வேண்டும். நாய் கடித்த 30வது நாள் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும். பெரும்பாலும் அரசு மையங்களில் கிடைக்கும் இம்யூனோகுளோபூலின் காயம்பட்ட இடத்தில் செலுத்த வேண்டும்.
ரேபிஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு பற்றி மக்களுக்கு பொது விழிப்புணர்வு செய்வது அவசியம், நாய் கடித்தால் உள்ளூர் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அல்லது சுகாதாரத் துறையிடம் புகாரளிக்க வேண்டும். குறிப்பாக நாயின் தடுப்பூசி நிலை தெரியவில்லை என்றால் உடனே புகார் அளிக்க வேண்டும்.
இது எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும். நாய் கடிக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது, ரேபிஸ் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து உங்களைக் காக்க உதவும், எனவே கவனமாக இருங்கள்.
