குடியரசு துணை தலைவராக எனக்கு வாய்ப்பு அளித்தால் நாட்டின் அரசியலமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் வரும் செப்டம்பர் 9ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இன்று சென்னை வந்த சுதர்சன் ரெட்டி தமிழ்நாட்டில் வாக்கு சேகரிக்க தொடங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு பெற்றார். அப்போது அவர் வேஷ்டி, சட்டை உடையில் இருந்தார்.
இதையடுத்து, சென்னை தியாகராய நகரில் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் எம்.பி.களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆதரவை கோரினார்.
இதைத்தொடர்ந்து பேசிய சுதர்சன் ரெட்டி, “இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு எப்போதுமே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார துறைகளில் தமிழகத்துக்கு இணையாக நிற்கும் மாநிலம் இல்லை. தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நலனுக்கான பணிகளில் தமிழ்நாடு சாதனைகள் படைத்துள்ளது. அதனால் தான், நான் தமிழ்நாட்டின் பங்களிப்பை எப்போதும் பெருமையாகக் கூறுகிறேன்.
நான் எந்த கட்சியிலும் இல்லை. எந்த கட்சியிலும் சேரப்போவதும் இல்லை.
இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சியே.. ஒரே நாடு என்பது அதற்கு எதிரானது. தற்போதைய நிலையில் கூட்டாட்சிக்கு மட்டுமல்ல அரசியலமைப்புக்கே ஆபத்து வந்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவராக எனக்கு வாய்பு கிடைத்தால் நாட்டின் அரசியலைமைப்பை காக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.