பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று (நவம்பர் 1)வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், “நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல” என்ற அவரது நேரடியான அறிவிப்பு, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஜனதா தளம் (யுனைடெட்) கட்சியால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நிதிஷ் குமார் தனது குடும்பத்திற்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றும், 2005 ஆம் ஆண்டு முதல் தான் முதலமைச்சரானதில் இருந்து பீகார் மாநிலத்தின் முன்னேற்றமே தனது ஒரே நோக்கம் என்றும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மீதான மறைமுகத் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. “ஜங்கிள் ராஜ்” என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒரு காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
வீடியோவில், கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், குடிநீர், விவசாயம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் தனது அரசாங்கம் கொண்டு வந்த மேம்பாடுகளை நிதிஷ் குமார் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்பட்டு, பெண்களின் அதிகாரமளிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பீகாரில் “இரட்டை எஞ்சின்” பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி, மாநிலத்திற்குப் பெருமையைக் கொண்டு வந்துள்ளதாகவும், “விக்சித் பீகார்” (வளர்ந்த பீகார்) என்ற தனது தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குடும்ப அரசியல் மரபுகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நிதிஷ் குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது மகன் நிஷாந்த் குமார், ஒரு மென்பொருள் பொறியாளர், அரசியலில் நுழைய விருப்பமின்றி ஆன்மீகப் பாதையில் ஆர்வம் காட்டுவதாக முன்னர் செய்திகள் வெளியாகின.
ஆனால், அண்மையில் நிஷாந்த் குமார் தனது தந்தைக்கு ஆதரவாகப் பொது நிகழ்வுகளில் தோன்றியதும், இஸ்லாம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட JD(U) தலைவர்கள் அவரை ஊக்குவிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இது நிதிஷ் குமாரின் , “பல்டி ராமன்” என்று அவருக்கு இருக்கும் விமர்சனத்துடன், இந்த குடும்ப அரசியல் குறித்த மாற்றமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
