ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர், தயாரிப்பாளர், சமையல் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல்வேறு பரிமாணங்களில் வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு ஏற்கெனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அவரின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டில்டா தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டது சர்ச்சையானது.
அடுத்த சில நாட்களில், சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார் ஜாய் கிரிஸ்டில்டா. அதில் ”நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில வருடங்களாக திருமணம் முடிக்காமல் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகுதான் எம்.ஆர்.சி நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை.
குழந்தை உருவாகியிருப்பதை சமூகவலைதளங்களில் சொன்னபிறகு, கருவை கலைக்கச் சொல்லி என்னை அடித்துத் துன்புறுத்தினார். அதன்பின்னர் கடந்த ஒரு மாதமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. எனக்கு அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவருடன் என்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என மனு அளித்திருக்கிறேன்” என கூறியிருந்தார்.
அதன்பின்னர் தனது சமூகவலைதள பக்கங்களில் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜை குற்றஞ்சாட்டி தங்களது தனிப்பட்ட வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார் ஜாய் கிரிஸ்டில்டா.
இந்த நிலையில் ஜாய் கிரிஸ்டில்டா அனுப்பிய புகாரின் பேரில் இன்று இருவரையும் நேரில் ஆஜராகச் சொல்லி மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
இந்தப் பிரச்சினை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி” என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.