ADVERTISEMENT

நீதிபதி ப.உ.செம்மல் சஸ்பெண்ட்-க்கு எதிராக திரண்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள்!

Published On:

| By Mathi

Justice P. U. Semmal

நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள பூசிவாக்கம் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் நடத்தும், டீ மற்றும் பேக்கரி கடைக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு விற்கப்பட்ட உணவுப் பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிவகுமாரும் அவரது மருமகனும், காவலருமான லோகேஸ்வரன் ரவி (32) இருவரும் சேர்ந்து முருகனை தாக்கி, மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி சென்ற 25.07.2025 அன்று, தனது கணவரைத் தாக்கிய மேற்படி சிவகுமார், காவலர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட முருகன், அவரது மனைவி பார்வதி ஆகியோர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

ADVERTISEMENT

புகார் கொடுத்த 27 நாட்களுக்குப் பிறகு 20.08.2025 அன்று எஸ்.சி/எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
08.09.2025 அன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் (வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்) இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது காஞ்சிபுரம் டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் ஆஜராகியுள்ளார். அவர் இந்த வழக்கில், எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி சரியாக நடவடிக்கை எடுக்காததை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் தாமதமாக வழக்கு பதிவு செய்தது, குற்றஞ்சாட்டப்பவர்களைக் கைது செய்யாதது, பாதிக்கப்பட்டோருக்கு நகல் வழங்காதது உள்ளிட்டவைகள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 18-A(B) மற்றும் 10(2) ஆகியவைபடி சட்ட மீறலாகும். இப்பிரிவுகளை டி.எஸ்.பி சங்கர்கணேஷ் முறையாக செயல்படுத்த தவறியுள்ளார்.

ADVERTISEMENT

இச்சட்டப் பிரிவு 4-இல் உள்ளபடி டி.எஸ்.பி செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செய்யாமல், கடமையில் இருந்து தவறியுள்ளார். இது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 4(2)(G) கீழ் தண்டனைக்கு உரியது. இதனடிப்படையில் டி.எஸ்.பியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் உத்தரவிட்டார்.

உடனடியாக ஒட்டுமொத்தக் காவல்துறை மற்றும் தமிழக அரசின் உதவியுடன் உயர்நீதிமன்றத்தில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி ப.உ.செம்மல் பிறப்பித்த கைது உத்தரவை ரத்துசெய்து, டி.எஸ்.பியை விடுவித்து உத்தரவிட்டார். மேலும், நீதிபதி ப.உ.செம்மல் மீது உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் மீண்டும் ஒரு உத்திரவுப் பிறப்பித்தார். அதில் நீதிபதி ப.உ.செம்மல் இடமாற்றம் செய்யப்பட வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவராக நியமித்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தபோது நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கவில்லை.

உச்சநீதிமன்றம் K, A Judicial Officer In re (2001) என்ற தீர்ப்பில் மாவட்ட நீதிபதிகள் குறித்த வழக்குகளில் அந்நீதிபதிகளிடம் கருத்துக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது, அவர்கள் பெயர்களைக்கூட வெளியிட கூடாது என்பது கடைபிடிக்கவில்லை.

மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 15A(3), 15A(5) படியும், உச்சநீதிமன்றம் Hariram Bhambhi vs Satyanarayan and Anr என்ற தீர்ப்பின்படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படவில்லை.

மேலும், விஜிலன்ஸ் பிரிவு விசாரணையின் போதும் நீதிபதி ப.உ.செம்மல் இடம் விளக்கம் கேட்கப்படவில்லை. அதாவது குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நீதிபதிக்கு உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல், பழிவாங்கும் நோக்கோடு ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர். இது இயற்கை நீதிக்கு (Natural Justice) எதிரானது.

அதோடு மட்டுமல்லாமல் நீதிபதி ப.உ.செம்மல் அவர்களிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய கடிதத்திற்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் கேட்டும் வழங்கப்படவில்லை. மேலும், விஜிலன்ஸ் அறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் கேட்டும் வழங்கப்படவில்லை.

நேர்மையாக செயல்படுவதால் நீதிபதி ப.உ.செம்மல் பழிவாங்கப்படுகிறார்.
நீதிபதி ப.உ.செம்மல் அவர்கள் போக்சோ மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் சிறப்பு நீதிபதியாக செயல்பட்டவர். மேலும், பணியாற்றிய அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியினை சட்டத்தின் அடிப்படையில் வழங்கியவர். பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நீதியின் பக்கம் நின்று, சட்டத்தின்படி நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல தீர்ப்புகளை வழங்கியவர்.

காவல்துறை மட்டுமல்லாமல் தவறு செய்த அனைத்துத் துறை அதிகாரிகளையும் கண்டிக்கத் தயங்காதவர். அதிகாரிகளை சட்டத்தின்படி செயல்பட வைத்தவர். இதனால், நீதிபதி செம்மல் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2015ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்ற பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரை நெய்வேலி நகரிய காவல்நிலையத்தில் போலீசார் அடித்துக் கொன்ற வழக்கில், நீதிபதி ப.உ.செம்மல் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்தபோது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக நடந்த மேல்முறையீட்டில், இதனை சென்ற 10.12.2025 அன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்று மனித உரிமைகள் சார்ந்து பல்வேறு தீர்ப்புகள் வழங்கி எஸ்.சி/எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அடித்தள மக்களின் உரிமைகளைக் காத்தவர்.

நீதிபதி செம்மல் அவர்களுக்கு இப்போது நாம் ஆதரவு அளிப்பது என்பது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு அளிக்கின்ற ஆதரவாகும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை தமிழக அரசு சரியாக அமுல்படுத்தவில்லை என்று பரவலாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், அச்சட்டத்தினை நடைமுறைபடுத்தும் நீதிபதியின் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்பது, இச்சட்டத்தின் அமுலாக்கத்திற்காக செயல்படுவோருக்கான அச்சுறுத்தலாகும்.

இந்தச் சூழலில் நீதிபதி செம்மல் அவர்களுக்கு நாம் அளிக்கும் ஆதரவு, தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோருக்கும், அவர்களுக்கு ஆதரவான சட்ட நடவடிக்கைகளுக்கான உறுதியான ஆதரவாகும்.

எனவே, நேர்மையான, திறமையான நீதிபதியான ப.உ.செம்மல் அவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பணியிடை நீக்க உத்தரவைத் திரும்பப் வேண்டும்.

தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவர் சார்பில் வலியுறுத்துகிறோம்.

  1. எழுத்தாளர் எஸ்.வி.இராஜதுரை,
    மனித உரிமை செயற்பாட்டாளர்
  2. வழக்கறிஞர் ஹென்றி டிபேன்,
    மக்கள் கண்காணிப்பகம், மதுரை.
  3. வழக்கறிஞர் சுதா இராமலிங்கம், சென்னை.
  4. வழக்கறிஞர் ப.பா.மோகன், ஈரோடு
  5. எழுத்தாளர் வ.கீதா, சென்னை
  6. வழக்கறிஞர் பி.எஸ்.அஜீதா, சென்னை
  7. வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை
  8. பேராசிரியர் அ.மார்க்ஸ்,
    மனித உரிமைச் செயற்பாட்டாளர்
  9. பேராசிரியர் பிரபா கல்விமணி,
    பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
  10. பேராசிரியர் வீ.அரசு, சென்னை
  11. சி.துரைக்கண்ணு, அம்பேத்கர் சமூக மையம்.
  12. டாக்டர் வே.அ.இரமேசுநாதன், முன்னாள் தேசிய அமைப்பாளர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை வலுப்படுத்துவதற்கான தேசியக் கூட்டமைப்பு.
  13. புனிதப் பாண்டியன், ஆசிரியர்,
    ‘தலித் முரசு’
  14. எழுத்தாளர் கவின்மலர், சென்னை
  15. கா.வேணி, சமூக செயல்பாட்டாளர், சென்னை
  16. வாசுகி பாஸ்கர், ஆசிரியர்,
    நீலம் பதிப்பகம், சென்னை
  17. கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
  18. பா.அசோக், இணைத் தலைவர், பார்கவுன்சில் தமிழ்நாடு & புதுச்சேர்
  19. வழக்கறிஞர், எழுத்தாளர் ச.பாலமுருகன், ஈரோடு
  20. வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மதுரை
  21. வழக்கறிஞர் சுப.தென்பாண்டியன், மக்கள் உரிமைக் கூட்டணி, சென்னை.
  22. வழக்கறிஞர் கி.நடராஜன், சென்னை
  23. வழக்கறிஞர் பாவேந்தன், சென்னை
  24. வழக்கறிஞர் இல.திருமேணி, கடலூர்
  25. வழக்கறிஞர் பி.புருஷோத்தமன், கடலூர்
  26. வழக்கறிஞர் கா.கணேசன், மனித உரிமை செயற்பாட்டாளர் மதுரை
  27. பேராசிரியர் அரச முருகுபாண்டியன், பி.யூ.சி.எல், சிவகங்கை மாவட்டம்.
  28. கண.குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மக்கள் உரிமைப் பேரவை
  29. அ.சிம்சன், ஒருங்கிணைப்பாளர், நீதிக்கான மக்கள் இயக்கம்.காரைக்குடி.
  30. பழ.ஆசைத்தம்பி, மாநிலச் செயலாளர், சி.பி.ஐ (எம்.எல்), தமிழ் நாடு
  31. பேராசிரியர் சங்கரலிங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், சென்னை.
  32. காஞ்சி அமுதன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, காஞ்சிபுரம்
  33. பேராசிரியர் சே.கோச்சடை, எழுத்தாளர், கல்வியாளர், காரைக்குடி, சிவகங்கை
  34. உறவு கா.சே.பாலசுப்பிரமணியம், மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி
  35. அ.தேவநேயன், குழந்தை உரிமை செயற்பாட்டாளர், சென்னை
  36. ஆ.இரவி கார்த்திகேயன், மருதம், விழுப்புரம்.
  37. கவிஞர் இசாக், சென்னை
  38. கவிஞர் பால்கி, த.மு.எ.க.ச, கடலூர்
  39. கவிஞர் ஜோசப் ராஜா, சென்னை
  40. ஆசிரியர் த.பாலு, விழுப்புரம்
  41. பி.வி.இரமேஷ், தலைவர், மக்கள் பாதுகாப்புக் கழகம், விழுப்புரம்
  42. பழனிச்சாமி கருப்பன், மனித் உரிமை செயல்பாட்டாளர், ஈரோடு
  43. இரா.பாபு, மனித உரிமை செயல்பாட்டாளர், கடலூர்
  44. பா.ஜோதிநரசிம்மன், ஊடகவியலாளர், விழுப்புரம்.
  45. எழுத்தாளர் முருகப்பன் ராமசாமி, திண்டிவனம்.
  46. .எழுத்தாளர் அன்பாதவன், விழுப்புரம்.
  47. .டி.என்.கோபாலன், ஊடகவியலாளர்,
  48. மனிதி செல்வி, சென்னை.
  49. எவிடன்ஸ் கதிர், மதுரை.
  50. யா.அருள், எழுத்தாளர், மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு, சென்னை.
  51. வாலாசா வல்லவன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.
  52. வேடியப்பன், சமூக செயற்பாட்டாளர், அரூர்.
  53. எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநில குழு உறுப்பினர், சி.பி.ஐ.(எம்), சிதம்பரம்.
  54. இராம்குமார்.BA.LLB
    தமிழ்நாடு புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share