இலங்கையின் யாழ்ப்பாணத்தில் 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் காணாமல் போன பிஞ்சு குழ்நதைகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவம் கொத்து கொத்தாக படுகொலை செய்து புதைத்த மனித புதைகுழிகளில் ஒன்றான செம்மணி சிந்துபாத்தி மயானத்தில் தற்போது நடைபெறும் அகழ்வுப் பணிகளில் தோண்ட தோண்ட எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. Human Mass Grave Chemmani
இலங்கை ராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையேயான யுத்தத்தில் 1995 – 2009 இடையே நடைபெற்ற போர் மிக முக்கியமானது. 1995-ல் தமிழீழ விடுதலைப் புலிகள், யாழ்ப்பாணம் பெருநகரை கைவிட்டு வெளியேறினர். அப்போது இலங்கை ராணுவத்தின் வசமானது யாழ்ப்பாணம். அந்த கால கட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயினர்.
பின்னர் காணாமல் போன தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கொடூரத்தை இலங்கை ராணுவம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கு சாட்சியமாக இப்போதும் இருப்பது செம்மணி புதைகுழி, மன்னார் சதொச புதைகுழி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதை குழிகள்தான்.
செம்மணிக்கு அருகே உள்ள சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக அகழ்வுப் பணிகள் இன்று ஜூன் 6-ந் தேதி நடைபெற்றது. கடந்த 11 நாட்களாக இந்த அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ்வில், பள்ளிக்கு செல்லும் சிறுவனின் எலும்புக்கூடு ஒன்று புத்தகப் பையுடன் கண்டெடுக்கப்பட்டது உலகை உறைய வைத்தது.
இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன.
இந்த அகழ்வுப் பணிகள் நடைபெறும் பகுதிக்கு அருகில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. அந்த இடத்திலும் புதைகுழி சான்றும் பொருட்களும் அடையாளம் காணப்பட்டன.
மேலும் இன்றையதினம் தண்ணீர் வெளியேறுவதற்கு என அமைக்கப்பட்ட வாய்க்காலிலும் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் கால்வாய் அமைப்பு பணி இடைநிறுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன.
முன்னதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த செம்மணி புதை குழி பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டிருந்தார். இலங்கையில் இதே போல 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மனித புதை குழி -அகழ்வுப் படங்கள்









