ADVERTISEMENT

ஜூலை 7 முதல் வீடு தேடி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ விண்ணப்பம்!

Published On:

| By Mathi

தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் தொகை’யைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 திங்கள்கிழமை முதல் வீடுதோறும் வழங்கப்பட உள்ளது. Kalaignar Magalir Urimai Thogai

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது வரை 1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்களை சேர்க்க ஜூலை 15-ந்தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி மூலம் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தளர்வுகள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ADVERTISEMENT
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
  • இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஜூலை 7-ந் தேதி முதல் வீடு தேடி வரும் விண்ணப்பங்கள்

மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 7-ந் தேதி முதல் வீடு தேடி வருகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜூலை 15-ந் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆயிரம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள திட்டம், சேவைகள் மற்றும் அதற்கான விண்ணப்பங்களையும் (கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உட்பட) வழங்க உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share