ராஜன் குறை
மக்களாட்சி என்பது இரு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வது; மற்றொன்று அவ்விதம் செயல்பட களம் அமைத்துத் தரும் சட்டத்தின் ஆட்சி. குடிநபர்கள் தவறு செய்யலாம்; பொதுநலனுக்கு எதிரான வகையில் செயல்படலாம். பிறர் நலன்களுக்கு ஊறு விளைவிக்கலாம். அரசோ, மக்கள் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ யாரும் தவறு செய்யலாம். விதிகளுக்குப் புறம்பாக நடக்கலாம். அவ்வாறு நிகழும் அனைத்து தருணங்களிலும் பாரபட்சமில்லாமல் வழக்குகளை விசாரித்து சரியான தீர்ப்புகளை வழங்கி சட்ட த்தின் ஆட்சியை உறுதி செய்யும் பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது.
சமூகத்தின் விழுமியங்களைக் காத்து, மக்களாட்சி நெறிமுறைகளைக் காத்து அரசியலமைப்பு சட்டத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கக் கூடியது நீதிமன்றங்கள்தான். நீதிமன்றம் என்று நாம் உருவகமாகச் சொல்வது, அந்த மன்றத்தில் அமர்ந்து வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதியரசர்களைத்தான். ஆங்கிலத்தில் ஜட்ஜ் என்றும் பெயருக்கு முன்னால் ஜஸ்டிஸ் என்ற முன்னொட்டுடனும் வழங்கப்படும் அந்த பதவியை தமிழில் வெகுகாலம் நீதிபதி என்று வழங்கி வந்துள்ளோம். சமீபத்தில் நீதியரசர் என்று குறிப்பிடுவது நடைமுறைக்கு வந்துள்ளது.

நீதியரசர்கள் எந்தவொரு வழக்கிலும் வக்கீல்களின் வாதங்களில் முன்வைக்கப்படும் சட்ட நுணுக்கங்களை கவனமாகக் கேட்க வேண்டும். பின்னர் அவர்கள் வழக்கு விவரங்களையும், தரவுகளையும், வாதங்களையும் நன்கு பரிசீலித்து பின்னர் அவர்கள் தரப்பிலான விளக்கங்களுடன் தீர்ப்பினை வழங்கவேண்டும். ஒரு வழக்கு முதலில் கீழமை நீதிமன்றங்கள் எனப்படும் தலமட்ட நீதிமன்றங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும். அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கேயும் வழங்கப்படும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது. சில வழக்குகளில் ஒற்றை நீதியரசர் மட்டும் விசாரிப்பது போதாதென்றால் இரண்டு, மூன்று என்று ஐந்து நீதிபதிகள் வரை கொண்ட அமர்வு, பெஞ்ச் என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது, வழக்கை விசாரிக்கும். பெருவாரியான நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு நடைமுறைக்கு வரும்.
இவ்வாறான மேல்முறையீடு, ஒன்றுக்கு மேற்பட்ட நீதியரசர்கள் விசாரிப்பது ஆகியவை எதை உணர்த்துகிறது என்றால் ஒவ்வொரு வழக்கிலும் சட்ட த்தை பொருள்கொள்வது, வழக்கின் சாட்சியங்களை, தரவுகளைப் பொருள்கொள்வது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும் என்பதைத்தான் குறிக்கிறது. சரியோ தவறோ தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் அனைவரும் அந்த தீர்ப்புக்குக் கட்டுப்படத்தான் வேண்டும். இல்லாவிடில் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். நீதிமன்ற அவமதிப்பு தண்டனைக்குரிய குற்றம். வழங்கப்பட்ட தீர்ப்பை தர்க்கரீதியாக விமர்சிக்கலாம்; ஏனெனில் மக்களாட்சியில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் நீதியரசர்களுக்கு உள்நோக்கம் கற்பித்தால், அவர்களை தனிப்பட்ட முறையில் இழிவு செய்தால், அதுவும் நீதிமன்ற அவமதிப்பாகக் கொள்ளப்படலாம்.
சமீப காலங்களில் என்ன பிரச்சினை அதிகரிக்கிறது என்றால் நீதியரசர்களே சட்டங்களையோ, அவற்றின் அடித்தளமான மக்களாட்சி விழுமியங்களையோ கருத்தில் கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக அல்லது மனம் போன போக்கில் தீர்ப்புகளை வழங்குவது, அதனுடன் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை அப்சர்வேஷன்ஸ் என்ற அவதானமாகச் சேர்த்துக் கூறுவது என்பன போன்ற போக்குகள் அதிகரிப்பதுதான். மக்களின் கருத்துரிமையை பாதுகாக்க வேண்டிய நீதியரசர்களே அதற்கு எதிராக தங்கள் கருத்துக்களை கூறுவது மக்களாட்சியின் அடிப்படையையே தகர்த்துவிடக் கூடியது. சட்ட த்தின் படி வழங்கப்படாத தீர்ப்புகள், நீதிமன்ற நடவடிக்கைகள் எதேச்சதிகரமானவை என்றுதான் பொருள்படும். சமீபத்தில் பொதுமன்றத்தில் கவனத்தை ஈர்த்த மூன்று வழக்குகளை மட்டும் நாம் பரிசீலித்தால் நீதிமன்ற எதேச்சதிகாரம் எப்படி பரவலாகிறது என்பதும், அதனை எப்படி எதிர்கொள்வது என்ற கவலையும் நம் மனதைத் தைக்கும்.

கமலஹாசனும், கன்னட மொழியும்
அவர் நடித்த தக் லைஃப் திரைப்படம் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வொன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நேசத்துடன் அழைத்த கமலஹாசன், கன்னடமும் தமிழிலிருந்து பிறந்ததுதான் என்று கூறினார். இது கன்னட மொழி அமைப்புகளின் கண்டனத்திற்கு உள்ளானது. கன்னடமும், தமிழும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை, அவற்றில் தமிழ் மொழி முதலில் முழு வடிவம் பெற்றிருக்கலாம் என்றாலும், கன்னடமும் பூர்வ திராவிட மொழியிலிருந்து தோன்றியதுதானே தவிர தமிழிலிருந்து தோன்றியதல்ல என்பது அவர்கள் வாதம். மொழியியல் வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் நிலவுவது இயற்கை.
பல்வேறு அரசியல் முரண்களின் பின்னணியில் இந்த கருத்து மாறுபாடு ஊதிப்பெருக்கப்பட்டு தக் லைஃப் படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது என்று முழக்கம் எழுந்தது. கன்னட திரைப்பட வர்த்தக சபையும் அந்த பட த்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என்றது. இந்த சூழ்நிலையில் கமலஹாசன் பட த்தை கர்நாடகாவில் வெளியிட பாதுகாப்புக் கோரி வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் கமலஹாசனை கடுமையாகக் கண்டித்ததுடன், கன்னட மொழியினர் மனம் புண்பட்ட தால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நிலம், நீர், மொழி ஆகியவை மக்களின் உணர்வுகளைத் தூண்டுபவை என்பதால் பொறுப்புடன் பேச வேண்டும் என்று கூறிய அவர், கமலஹாசன் என்ன மொழியியல் வரலாற்று அறிஞரா என்றும் கேட்டார். திரைப்படத்தை வெளியிட உத்திரவிட மறுத்துவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூற்றுக்களை வன்மையாகக் கண்டித்தது. கமலஹாசன் கூறிய கருத்து தவறென்றால் அதற்கு மாற்றுக் கருத்தைக் கூறலாம், விமர்சிக்கலாமே தவிர, தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை திரையிட தடை விதிப்பது சட்ட விரோதமானது என கண்டித்தது. கர்நாடக அரசை திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு தரச் சொல்லி உத்திரவிட்டது.
ஒரு பிரச்சினையில் பல்வேறு கருத்துக்கள் நிலவும்போது அவரவர் ஏற்றுக்கொள்ளும் கருத்தை வெளிப்படுத்த அனுமதிப்பதுதான் முதிர்ச்சியான மக்களாட்சி. கருத்தை கருத்தால் மறுக்க வேண்டுமே தவிர, வன்முறையோ, அச்சுறுத்துவதோ சரியான வழிமுறையாகாது. கன்னட அமைப்புகள் கமல்ஹாசன் படத்தை புறக்கணிக்கச் சொல்லி மக்களிடையே கோரிக்கை வைத்திருந்தால், பிரசாரம் செய்திருந்தால்கூட அது அவர்கள் உரிமை எனலாம். ஆனால் பட த்தை வெளியிடக் கூடாது என்று அச்சுறுத்துவது உரிமை மீறல். கருத்துரிமையை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றமே கமலஹாசனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது எதேச்சதிகாரமான போக்கு என்பதில் ஐயமில்லை.

படுகொலை செய்யப்படும் பாலஸ்தீனியர்களை ஆதரித்து பேரணி நடத்தக் கூடாதா?
இஸ்ரேல் காஸா பகுதியில் பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்துவருவதை உலகம் முழுவதும் பல சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் கண்டித்து வருகிறார்கள். இஸ்ரேல் உட்பட பல்வேறு நாடுகளிலும் இஸ்ரேல் அரசின் மனிதத் தன்மையற்ற குரூரமான போக்கிற்கு எதிரான மக்கள் திரள் ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா துவக்கம் முதலே பாலஸ்தீனியர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளது. பாலஸ்தீனிய அரசை, பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளது. ஆனால் இன்றைய பாஜக அரசு இஸ்ரேல் அரசுடன் உள்ள தன் நட்புறவைக் கருதியும், வேறு பல கருத்தியல் காரணங்களாலும் இஸ்ரேலை கண்டிக்க மறுக்கிறது. போரை நிறுத்த குரல் கொடுக்க மறுக்கிறது. காஸாவில் மக்கள் பட்டினியால் மடியும் காட்சி இதயமுள்ள மக்களை உலகம் முழுவதும் உலுக்கியெடுத்து வருகிறது.
இந்த நிலையில் மும்பாயில் சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ.எம் கட்சிகள் அசாத் மைதானில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அமைதியான ஆர்பாட்டம் ஒன்றினை நட த்த அனுமதி கேட்டுள்ளன. காவல்துறை அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கிய அறிவுரைதான் அதிர்ச்சியளிக்கக் கூடியது. இந்திய அரசியல் கட்சிகளான நீங்கள் இந்தியாவில் எத்தனையோ பிரச்சினை இருக்கும்போது அதற்காக போராடாமல், ஏன் எங்கேயோ இருக்கும் பாலஸ்தீனியர்களுக்காக போராடுகிறீர்கள்? இதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு பாதிப்பு வரும். அயலுறவை ஒன்றிய அரசு பார்த்துக்கொள்ளும். நீங்கள் அயல்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளது.
இது மக்களாட்சி நெறிமுறைகளை முற்றிலும் காலில் போட்டு மிதிப்பது என்பது வெளிப்படையானது. முதலில் யார் எதற்காக ஆர்பாட்டம் நட த்த வேண்டும் என்பதை காவல்துறையோ, நீதிமன்றமோ தீர்மானிக்க முடியாது. அவரவர் கருத்துக்களை அமைதிவழியில் வெளிப்படுத்த அனைத்து உரிமைகளையும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் வெளியுறவுக் கொள்கை தவறென்றால் அதனைக் கண்டிக்க இந்திய குடிமக்களுக்கு எல்லா உரிமைகளூம் உள்ளது. மக்களாட்சியில் மக்கள் உருவாக்குவதுதான் அரசு; அந்த அரசிடம் வெளியுறவுக் கொள்கை உட்பட எந்த கொள்கையிலும் முரண்பட, கருத்துக்கள் சொல்ல, பிரசாரம் செய்ய மக்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளது.
மேலும் இன்றைய உலகம் என்பது நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. பாலஸ்தீனிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இது பல்வேறு நாடுகள் மோதிக்கொள்ளும் பெரும் போராக, அணு ஆயுதப் போராகக் கூட மாறுகின்ற வாய்ப்பு உள்ளது. அப்படி நிகழ்ந்தால் இந்தியாவிலும் விலை வாசி ஏற்றத்தால், தட்டுப்பாடுகளால் ஏழை, எளிய மக்கள்தான் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அதனால் உலகில் எங்கு அநீதி நிகழ்ந்தாலும் போராட வேண்டிய தேவை உழைக்கும் மக்களுக்கு உள்ளது. அதற்கான உரிமையை மறுப்பது மக்களாட்சியல்ல.

வாஞ்சிநாதனும், சுவாமிநாதனும்
இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தன்னுடைய பார்ப்பனீய இந்து அடையாளத்தை வெளிப்படையாகப் பேசும் இவர், பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை அளித்தவர். இவர் பாரபட்சமாக செயல்படுகிறார் என்பதைக் குறித்து பல்வேறு தரவுகளுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஒரு புகார் அனுப்பி விசாரணை மேற்கொள்ளக் கோரியுள்ளார். இது சட்டம் அனுமதிக்கும் ஒரு நடைமுறையாகும். இதன் மேல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாஞ்சிநாதனின் மனுவைக் குறித்து கேள்விப்பட்ட ஜி.ஆர்.சுவாமிநாதன் வேறு ஏதோவொரு வழக்கில், வாஞ்சிநாதன் முதலில் வக்காலத்து தாக்கல் செய்து பின்னர் விலகிக் கொண்ட வழக்கில், ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார். அதனை மதித்து அங்கே சென்ற வாஞ்சிநாதன் தான் அந்த வழக்கிலிருந்து விலகிவிட்டதைச் சுட்டிக் காட்டியுள்ளார். உடனே ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் மீது அவர் அனுப்பியுள்ள புகாரில் கூறியவற்றை அவர் உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டுள்ளார். அதைக் குறித்து முதலில் எழுத்து மூலமாக பதிவு செய்து வழக்கை விசாரணைக்கு எடுத்தால் தான் பதிலளிப்பதாக வாஞ்சிநாதன் கூறியுள்ளார். அவரை குற்றச்சாட்டுகளை உடனே கூறுமாறு சவால் விட்ட நீதியரசர், வாஞ்சிநாதனைக் கோழை என்று சீண்டியுள்ளார்.
எத்தனையோ பொது நல வழக்குகளில் அஞ்சாது போராடி வரும் வாஞ்சிநாதனை இவ்வாறு முறையின்றி விசாரணைக்கு அழைத்து நீதியரசர் பேசியுள்ளது எந்த அளவு நீதித்துறையில் எதேச்சதிகாரப் போக்கு தலை தூக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது. தன்னைப் பற்றி அளிக்கப்பட்ட புகாரை தானே விசாரிக்க நினைப்பது அடிப்படை நீதிக்கே முரணானது என்பதைக் கூட நீதியரசர் உணரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்துள்ளார் ஜி.ஆர்.சுவாமிநாதன்.
இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கைவிடச் சொல்லி முன்னாள் நீதியரசர்கள் சந்துரு, அரிபரந்தாமன் உள்ளிட்ட எண்மர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி புகார் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னால் புகார் கூறப்பட்டவரே அவமதிப்பு வழக்கை தொடுப்பது சரியல்ல என்று வலியுறுத்தி உள்ளார்கள்.
இந்த நிலையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தான் நட த்திய பழைய வழக்கொன்றைக் குறித்து பேசும் காணொலி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாக இணையத்தில் வரும் காணொலிகளை சற்றே ஐயத்துடன் தான் அணுக வேண்டும். இந்த காணொலி மிகவும் பரவலாக பகிரப்படுவதை பார்க்க முடிகிறது. அதில் சுவாமிநாதன் ஒரு வ்ழக்கில் உண்மைக் குற்றவாளியை மறைத்து மற்றொருவர் குற்றத்தை ஏற்பது, அவரே முன்வந்து தன்மீது குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனை பெற்ற பிறகு மேல்முறையீட்டில் அவர் அதைச் செய்ததற்கு சாட்சியங்கள் இல்லை என்ற வாதத்தை வைத்து தண்டனையிலிருந்து விடுபடுவது ஆகியவற்றை நியாயப்படுத்தி “வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மை காப்பாற்றும்” என்று பேசுவது பதிவாகியுள்ளது. இந்த காணொலி உண்மையாக இருந்தால் உண்மையிலேயே கவலைக்குரியது. ஒரு நீதியரசரே சட்டத்தை வளைப்பதை மத நம்பிக்கையுடன் இணைத்துப் பேசுவது ஆபத்தானது.
இந்தியக் குடியரசில் எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் 140 கோடி பேர் வாழும் நாட்டில் எழுபத்தைந்து ஆண்டுகளாக மக்களாட்சி நடைபெறுகின்றதென்றால் அதற்கு நீதித் துறையும் ஒரு காரணம். ஆனால் தொடர்ந்து நீதியரசர்கள் எதேச்சதிகாரமாக நடந்துகொள்ளத் துவங்கினால் மக்களாட்சியை, சமூக ஒழுங்கை பேணுவது கடினம் என்பதே நமது கவலையாக இருக்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com