கோடைக் காலத்தில் செலவில்லாமல் ஏ.சியை சர்வீஸ் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

How to clean and service Air Conditioner at no cost in summer

கோடைக் காலத்தில் அதிக செலவு இல்லாமல் நீங்களே வீட்டில் ஏசியை (Air Conditioner) சர்வீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், இப்போதே பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வெயில் காலத்தில் மிகுந்த புழுக்கம் காரணமாக நாம் அவதிப்படுகிறோம். குளிர் காலத்தில் தேவைப்படாமல் இருந்த ஏசி, இனி வரும் நாட்களில் நமக்கு மிக முக்கியமாக மாறிவிடும். கடும் வெயிலில் நாம் வெளியே சென்றுவிட்டு வந்தால் ஏசியை ஆன் செய்யாமல் நம்மால் வீட்டில் இருக்கக் கூட முடியாது. இப்போது நகரங்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் ஏசி ஆக்கிரமித்துள்ளன.

ADVERTISEMENT

குளிர்காலம் முடிந்து பல நாட்களுக்குப் பிறகு ஏசியை ஆன் செய்யும்போது அதில் கூலிங் குறைவாக இருப்பதால் என்ன செய்வது என்று நாம் தெரியாமல் இருப்போம். அத்துடன், பல மாதங்களாக ஆன் செய்யாமல் இருக்கும் ஏசியை (Air Conditioner) சுத்தம் செய்து சர்வீஸ் செய்யாமல் இயக்குவது நல்லதும் இல்லை. ஏசியைப் பயன்படுத்துவதற்கு முன்பு சர்வீஸ் செய்வது அவசியம். அதிக செலவு செய்யாமல் உங்கள் ஏசியை நீங்களே சுத்தம் செய்ய விரும்பினால், சில எளிய மற்றும் பாதுகாப்பான முறைகளை பின்பற்றலாம்.

ஏசியை (Air Conditioner) சுத்தம், சர்வீஸ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

ஏசி சர்வீஸ் செய்வது உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்துவிடுகிறது. வழக்கத்தை விட அதிகமான குளிர்ச்சியை உறுதி செய்கிறது,  ஏ.சியின் ஆயுட்காலத்தையும்  அதிகரிக்கிறது. ஏசியை சுத்தம் (AC Cleaning Tips) செய்வதற்கு முன், மெயின் சுவிட்ச் அல்லது பிளக்கை அகற்றிவிட வேண்டும். இது உங்களை மின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் ஏசிக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும்.

ADVERTISEMENT

ஏசி பில்டரை சுத்தம் செய்யுங்கள்:

முதலில் நாம் செய்ய வேண்டியது ஏசி ஃபில்டரை அகற்றி சுத்தம் செய்வதுதான்.  ஏனெனில், அதில்தான் அழுக்கு, தூசி உள்ளிட்டவை படிந்துகிடக்கின்றன. ஏசியின் மேலே உள்ள முன் அட்டையைத் திறக்க வேண்டும். பின்னர் வலைபின்னல் போல உள்ள ஏர் ஃபில்டரை (Clean AC filter) அகற்ற வேண்டும்.  ஈரமான துணியால் துடைத்துவிட்டு போட்டுவிட வேண்டாம். அதற்கு பதிலாக, குழாய் தண்ணீரில் பில்டரை அழுக்கு, தூசு போகும்படி நன்றாக அலச வேண்டும். சோப்பு அல்லது டிஜர்ஜெண்ட் லிக்விட் தடவி பிரஷ் மூலம் மெதுவாக சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பிறகு வெயிலில் சிறிது நேரம் காயவிட வேண்டும். அதன் பிறகுதான், ஃபில்டரை ஏசியில் மீண்டும் பொருத்த வேண்டும்.

ஏசி காயிலை சுத்தம் செய்வோம்:

ஏசியில் கூலிங் காயில் என ஒன்று உள்ளது. அதையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும். ஏசியின் முன் அட்டையைத் திறந்தால் உட்புரம் சுருள் போன்று இருப்பதுதான் காயில். அதனை மென்மையான பிரஷ் (use brush for ac cleaning) அல்லது துணி மூலம் சுத்தம் செய்து, தூசி மற்றும் அழுக்குகளை அகற்ற வேண்டும். ஏசி காயில் கிளீனரும் கடைகளில், ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது; நீங்கள் அதை பயன்படுத்தி காயிலை சுத்தம் செய்யலாம்.

ADVERTISEMENT
வெளிப்புற யூனிட்டை சுத்தம் செய்யலாம்:

உங்களிடம் இருப்பது ஸ்பிளிட் ஏசியாக (Split ac cleaning tips) இருந்தால், வெளிப்புற யூனிட்டை சுத்தம் செய்யலாம். வெளியே இருப்பதால் அது தொடர்ந்து தூசி, அழுக்கு, காற்று மற்றும் சூரிய ஒளியால் பாதிக்கப்படும். ஆகவே, அதை ஒரு பிரஷ் அல்லது ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும். மின்விசிறியைச் சுற்றியுள்ள தூசியை அகற்ற வேண்டும். மோட்டார் மற்றும் கம்பிகளைத் தவிர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து  சுருள்களையும் சுத்தம் செய்யலாம்.

ஏசியில் கேஸ் நிரப்பவே வேண்டாம்:

ஒருபோதும் நீங்களாக ஏசியில் கேஸ்-ஐ (ac gas filling) நிரப்ப வேண்டாம். கம்ப்ரசர், ஏசி வயரிங் போன்றவற்றை நீங்களே சரிபார்ப்பதற்கு பதிலாக, ஒரு ஏ.சி மெக்கானிக்கை அழைக்க வேண்டும். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிறகும் கூலிங் சரியாக வேலை செய்யவில்லை என்றால், கேஸ் குறைவாகவோ அல்லது செயலிழந்தோ இருக்கலாம். ஆகவே, ஏசி நிறுவனத்தையோ அல்லது உள்ளூர் ஏ.சி. மெக்கானிக்கையே அழைத்து சரி செய்யவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share