நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுவர்கள் இதனை பின்பற்றினால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் பலரும் மலச்சிக்கல் பிரச்னையால் அவதியடைந்து வருகிறார்கள். மலச்சிக்கல் பிரச்னையை வெளியில் கூட சொல்ல முடியாத அளவுக்கு சிரமப்படுவார்கள். காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து வயிற்றை சுத்தம் செய்யாவிட்டால், அந்த நாள் முழுவதும் வயிறு நிரம்பியதாகவும், உப்புசமாகவும் இருக்கும். எதையும் சாப்பிட முடியாத சூழலில்தான் இருப்போம். மலச்சிக்கல் தொடர்ந்து இருந்து வந்தால் அது மூலம் நோய் வருவதற்கும் வழிவகுக்கும், பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கும் காரணமாகிவிடும்.
மலச்சிக்கல் ஏன் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?, என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
மலச்சிக்கல் ஏற்படக் காரணம்
அதிகப்படியான எண்ணெய், மசாலா பொருட்களை சாப்பிடுவது மலச்சிக்கலை உண்டாக்கும். துரித உணவுகள் சாப்பிடுவது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது, இரவில் நேரம் கழித்து சாப்பிடுவது, உடற்பயிற்சியே செய்யாமல் இருப்பது, நார்ச்சத்துள்ள பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளாதது ஆகியவை மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணம். இவை குடலில் வாயுவை அதிகரிப்பதால், மலம் கடினமாகி வறண்டு போகிறது. இது குடல் சரியாக சுத்தப்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கல் தொடர்ந்தால் நச்சுகள் உடல் முழுவதும் பரவி புதிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
மலச்சிக்கலை தடுக்க என்ன செய்வது?
- தூங்கச் செல்வதற்கு முன்பாக ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
இது காலையில் உங்கள் வயிற்றைச் சுத்தப்படுத்த உதவியாகும் இருக்கும். உங்கள் மலம் எளிதாக வெளியேறும். - மதிய உணவு அல்லது இரவு டின்னரில் 1 – 2 டீஸ்பூன் சுத்தமான நெய்யைச் சேர்த்துக்கொள்ளவும். காலையில் எழுந்தவுடன் 2 – 3 குவளைகள் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கவும். இது மலச்சிக்கல் நீங்க நன்மை பயக்கும்.
- நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழம், பப்பாளி, அத்திப் பழம், திராட்சை, பீட்ரூட், கீரை, ஓட்ஸ் மற்றும் தானியங்களை தினமும் சாப்பிடுவதும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவும்.
- மலச்சிக்கலைத் தவிர்க்க இரவில் அதிக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். குறிப்பாக அதிகப்படியான எண்ணெய், மசாலாப் பொருட்கள், கேக்குகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
- இரவு டின்னருக்கு லேசான உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் எடுத்துக்கொள்ளுங்கள். வறுத்த, பொறித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.
- வஜ்ராசனம், புஜங்காசனம், மலாசனம் மற்றும் பவன முக்தாசனம் போன்ற யோகா ஆசனங்களை 10-15 நிமிடங்கள் செய்வது நன்மையை அளிக்கும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் 15 நிமிடங்கள் நடப்பது கூட நமது குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.
- மன அழுத்தமும் குடல் செயல்பாடுகளில் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, சிறிய விஷயங்களுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும். படுக்கைக்கு சீக்கிரம் சென்று சீக்கிரம் எழுந்துவிடுங்கள். ஒவ்வொரு நாளும் நிதானமாக யோசித்து செயல்படுங்கள்.
இதெல்லாம் செய்த பிறகும் மலச்சிக்கல் தொடர்கிறது என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது முக்கியமானதாகும்.
