எஸ்.வி.ராஜதுரை
ஈரானியத் தலைவர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்துவிட்டால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று டொனால்டு டிரம்ப்பும் நெதன்யாகுவும் கணக்குப் போட்டனர். தலையாட்டி பொம்மை ஒருவனை ஆட்சியில் அமர்த்தி விடலாம். பிறகு எண்ணெய் வளங்களை இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம். மத்தியக் கிழக்கு முழுவதையும் உள்ளடக்கிய பெரும் இஸ்ரேலை உருவாக்கிவிடலாம் என்பது அவர்கள் போட்ட கணக்கு.
இந்தக் கணக்கின்படி அதி நவீன செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு ஈரானியத் தலைவர்கள் பலரைக் குறிவைத்துக் கொன்றது இஸ்ரேல். இதற்கு எதிர்வினையாக இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை ஒரு வியூகம் வகுத்துள்ளது. அதன்படி போருக்குத் தலைமை தாங்குவதும் கட்டுப்பாட்டைக் கையில் வைத்திருப்பதும் ஒரே ஒரு மையத்தில் இயங்காமல் நாடு முழுவதிலும் பரவலாக்கப்பட்டுள்ளன. அந்த வியூகத்திற்கு அவை கொடுத்த பெயர் ‘மொஸைக் பாதுகாப்பு உக்தி’ (Mosaic Defence) மொஸைக் என்பது என்ன என்பதை நாம் அறிவோம்.

ஈரானிய இராணுவத்திற்குக் கட்டளையிடும் தலைமைகள் சங்கிலியிலுள்ள கண்ணிகளைப் போல் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் அந்த சங்கிலியிலுள்ள சில கண்ணிகளை உடைத்து நாசப்படுத்தினாலும் அந்த சங்கிலி அப்படியே இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு கண்ணியும் சுயேச்சையானதாக, தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும், வரன்முறையாக்கிக் கொள்ளும், போருக்கு உந்துவிசை கொடுக்கும் வகையில் அந்தந்த வட்டாரத் தலைவர்களுக்கு அதிகாரமும், ஆற்றலும், அவர்களால் மீறமுடியாத ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஆக, ஈரானிய அரசியல் தலைவர்களோ, இராணுவத் தலைவர்களோ ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டாலும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாவலர்கள் (The Revolutionary Guards) தொடர்ந்து போர் புரிவர். மேலும், ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடத்தும் போரில் இறந்தவர்களைத் தியாகிகள் என்று கொண்டாடும் மரபு ஈரானின் இஸ்லாமியப் பண்பாட்டின் அங்கமாக உள்ளது. எனவே ஈரானியப் போர் வீரர்கள், கடைசி நபர் இருக்குவரை போர் புரிவர். அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனோதிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

தென் பார்ஸ் எண்ணெய் வயல் (South Pars gas field ) ஈரானின் எண்ணெய் வயல்களில் மிகப் பெரியது. உலகில் மிகப் பெருமளவுக்கு இயற்கை வாயு உள்ள இடம் அதுதான். அதில் ஒரு பகுதி ஈரானுக்கும் இன்னொரு பகுதி கத்தாருக்கும் சொந்தமானவை. அந்த எண்ணெய் வயல் மீது சில நாள்களுக்கு முன் ஆக்கிரமிப்புப் போர் விமானங்கள் குண்டுகளை வீசி பெரும் நாசத்தை ஏற்படுத்தின. இனி அப்படி செய்யக்கூடாது என்று டிரம்ப் கடிந்து கொண்ட பிறகு இஸ்ரேல் தன் தாக்குதலை நிறுத்திக் கொண்டது.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் செய்யும் கத்தார் நாட்டின் இயற்கை வாயு நிலையங்கள் மீது (LNG installations) ஈரான் தாக்குதல் நடத்தியது. அதன் காரணமாக இனி அந்த இயற்கைவாயு நிர்மாணத்தில் (LNG installation) 3-5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் 17 விழுக்காடு சேதமடைந்துள்ளது. அதை சரி செய்வதற்கு 20 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.

வளைகுடா நாடுகளைத் தாக்குவதை ஈரான் நிறுத்தாவிட்டால் தென் பார்ஸ் எண்ணெய் வயல்களையும் அதன் உள்கட்டுமானத்தையும் முழுமையாக அழித்துவிடப் போவதாக தற்போது டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அப்படி அமெரிக்க இராணுவம் செய்யுமானால் உலகம் மிகப் பெரும் பொருளாதார மந்தத்தைச் சந்திக்கும். அமெரிக்கா உள்பட உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான வறிய, நடுத்தர மக்கள் இறந்து போகும் சாத்தியப்பாடு ஏற்படும். ’மாபெரும் அமெரிக்காவை மீண்டும் உருவாக்கும்’ (Making America Great Again) டிரம்பின் கனவு சிதைந்து உலக மக்களும் உள்நாட்டு மக்களும் அவருக்கு எதிராகத் திரும்புவார்கள்.
உலகம் முழுவதற்கும் தேவைப்படும் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றில் 20 விழுக்காடு இராக், வளைகுடா நாடுகள், ஈரான் ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்றன. அவற்றை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் சென்றாக வேண்டும். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எரிசக்தி எண்ணெயையும் இயற்கை வாயுவையும் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடுத்த நடவடிக்கை, மத்தியக் கிழக்குக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவப் படையினரை அனுப்புவதும், பாரசூட் மூலம் ஈரானின் எண்ணெய் வளம் மிகுந்த கார்க் தீவில் (Kharg Island) இறக்குவதும் ஹோர்முஸ் நீரிணைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் ஆகும் என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. ஈரானில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பைக் கைப்பற்றுவதும் அத்திட்டத்தின் ஒரு பகுதி.

கார்க் தீவு ஈரானுக்கு சொந்தமான பாறைத்தீவு. ஈரானிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியன அந்தத் தீவிலுள்ள முனையத்தில் சேமித்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகின்றது. அந்தத் தீவைக் கைப்பற்றுவதன் மூலம் ஹோர்முஸ் நீரிணைகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. அது மட்டுமல்ல அத்தீவை சீனாவை தாக்குவதற்கான தளமாகவும் பயன்படுத்த முடியும். அதன் பொருட்டு இரண்டாயிரத்து ஐநூறு படைவீரர்களுடன் ஒரு பெரும் போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓரிரு நாள்களில் ஈரானைப் பணிய வைக்கலாம் என்று எண்ணிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பொருளாதார அம்சத்தை தங்கள் இராணுவ மூலோபாயத்தில் சேர்க்கவில்லை. எனவே அது அந்த இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்ட பெரும் தோல்வி எனப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் மிக வலுவான வான் படையோ அதிநவீன போர்க் கருவிகளோ, போர்க் கப்பல்களோ, நீர்மூழ்கிக் கப்பல்களோ ஈரானிடம் இல்லை என்றாலும் கார்க் தீவிலோ அல்லது ஈரானின் முதன்மையான பகுதிகளிலோ அமெரிக்க இராணுவப் படை தரையிறங்கி வருமானால், அதற்குப் பலத்த அடி கொடுப்பதற்குத்தான் ஈரான் மொஸைக் மூலோபாயத்தை வகுத்துள்ளது. இந்தியாவில் கூட்டுப் பயிற்சிக்காக வந்த ஈரானியக் கப்பலை ஸ்ரீலங்காவுக்கு அருகே மூழ்கடித்த அமெரிக்காவைப் பழிவாங்கப் போவதாக ஈரான் அறிவித்தது. அந்தப் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்து மாக்கடலில் உள்ள டீகோ கார்ஷியாத் தீவிலுள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இந்தியா அந்த நாட்டிலிருந்து எண்ணெயையும் இயற்கை வாயுவையும் வாங்குவதை நிறுத்திக் கொண்டது. இப்போது நடக்கும் போருக்கு இடையிலும் வேறு வளைகுடா நாடுகளிலிருந்து வாங்கப்பட்ட எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வரும் இந்தியக் கப்பல்களில் இரண்டை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் அனுமதித்தது. இத்தனைக்கும் அந்த நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டனம் செய்தோ, அனுதாபம் தெரிவித்தோ மோடியின் அரசாங்கம் அதிகாரபூர்வமான அறிக்கையை இன்றுவரை வெளியிடவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் எவ்வித நியாயமும் இன்றி ஈரான் மீது போர் தொடுத்ததைக் கண்டனம் செய்யாத மோடி அரசாங்கம் வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி கொடுப்பதைக் கண்டனம் செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் வரை மேற்கு ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிலிருந்து மலிவான எண்ணெயையும் இயற்கை வாயுவையும் வாங்கி வந்தன. பின்னர் அமெரிக்கா ரஷியா மீது விதித்த பொருளாதாரத் தடையைப் பின்பற்றி அந்த நாடுகள் ரஷியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திவிட்டன. இப்போது எண்ணெயும் எரிவாயுவும் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ரஷியாவை அணுக விரும்புவதாக பிபிசி செய்தியொன்று கூறுகிறது.

இந்தியாவில் இப்போது எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு பல இலட்சக்கணக்கான குடும்பங்களைப் பாதித்துள்ளது. இதிலிருந்து மீள்வதற்குரிய ஒரே வழி மீண்டும் ரஷியாவிலிருந்து எண்ணெயையும் இயற்கை வாயுவையும் வாங்குவதுதான். ஆனால் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டமைப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்வதால், வளைகுடா நாட்டு எரிபொருள்களின் விலையை விட மலிவான விலைக்கு வழங்கும் ரஷியாவை அணுகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் மொத்த பீங்கான் பொருள்களில் 80 விழுக்காடு குஜராத்திலுள்ள மோர்பி நகரில் உற்பத்தியாகிறது. சுவரிலும் தரையிலும் பதிக்கப்படும் ஓடுகள், கழிப்பறைக்குத் தேவையான பொருள்கள் ஆகியவை இந்த ஏற்றுமதியில் அடங்கும். இப்போது எரிவாயு பற்றாக் குறையால் அந்தத் தொழில் முழுவதும் முடங்கியுள்ளது. ஏறத்தாழ 4 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்கள் இப்போது கூட்டம் கூட்டமாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். எங்கும் எரிவாயு இல்லாத நிலையில் அங்கு மட்டும் கிடைக்குமா? இது 2020இல் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைவூட்டுகிறது அல்லவா?
கட்டுரையாளர் குறிப்பு:

எஸ்.வி.ராஜதுரை – மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.
