வீடு கட்ட கடன் வாங்க நினைப்பவர்கள் கவனத்துக்கு. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம்.
வீட்டுக் கடன்கள் தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன் தகுதி என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனம், வாடிக்கையாளர் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் திறனை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதைக் குறிக்கிறது. வாடிக்கையாளரின் வயது, வருமானம், நிதி நிலைமை, கடன் வரலாறு, கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஏற்கனவே உள்ள கடன்கள் போன்ற பல காரணிகளை இது உள்ளடக்கும். இந்தத் தகுதிகளின் அடிப்படையில்தான் எவ்வளவு கடன் கிடைக்கும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
HDFC வங்கியில் தற்போது வீட்டுக் கடன்களுக்கான ஆரம்ப வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.90 சதவீதமாக உள்ளது. இந்த வட்டி விகிதத்தில் கடன் பெற, வாடிக்கையாளருக்கு சுமார் 800 அல்லது அதற்கு மேற்பட்ட CIBIL ஸ்கோர் மற்றும் நல்ல கடன் வரலாறு இருக்க வேண்டும். உங்களுடைய மாதச் சம்பளம் ரூ.50,000 ஆகவும், கடன் காலம் 20 வருடங்களாகவும் இருந்தால், 7.90 சதவீத வட்டி விகிதத்தில், HDFC வங்கியின் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரின்படி, நீங்கள் அதிகபட்சமாக ரூ.27,10,101 வரை வீட்டுக் கடன் பெற முடியும். இந்தத் தொகையை 20 வருடங்களுக்குத் திருப்பிச் செலுத்தினால், உங்களின் மாதத் தவணை (EMI) ரூ.22,500 ஆக இருக்கும்.
அதேபோல, நீங்கள் அதே ரூ.50,000 மாதச் சம்பளத்தில் வீட்டுக் கடனை 15 வருட கால அவகாசத்தில் வாங்க விரும்பினால், HDFC வங்கியின் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டரின்படி, உங்களால் அதிகபட்சமாக ரூ.23,68,700 வரை கடன் பெற முடியும். வங்கிகள் வீட்டுக் கடன் தொகையை நிர்ணயிக்கும்போது, உங்களின் மாதச் சம்பளம் மட்டுமல்லாமல், உங்களின் தற்போதைய செலவுகள், கடன் திருப்பிச் செலுத்தும் திறன், கிரெடிட் ஸ்கோர் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கடன் காலம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்கின்றன.
இவை அனைத்தும் சேர்ந்துதான் உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும் என்பதைத் தீர்மானிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
