தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் என்.டி.ஏ கூட்டணி அமைந்துள்ளது.
ஆனால் இன்னும் யார் யாருக்கு எத்தனை சீட் என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில் நேற்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து இன்று (மார்ச் 20) டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில் அமித்ஷாவுடனான சந்திப்பில் என்ன பேசப்பட்டது என விசாரித்த போது, “என்.டி.ஏ கூட்டணியில் வாசன், ஏசி சண்முகம், பச்சமுத்து, ஜான் பாண்டியன் என பிற கட்சிகளை சேர்த்து பாஜகவுக்கு மொத்தம் 35 சீட், பாமகவுக்கு 18 சீட், அமமுகவுக்கு 9 சீட் என 62 தொகுதிகள் கூட்டணிகளுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள 172 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது என பேசப்பட்டது. ஆனால் அமித்ஷா எங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என கேட்டார். அதன்படி கூடுதலாக 5 சீட் சேர்த்து 67 தொகுதிகள் போனால் 167ல் முடியும் வகையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த சந்திப்பின் போது அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லியிலேயே இருங்கள். டிடிவி,தினகரன், அன்புமணி ஆகியோர் வருகிறார்கள். இங்கேயே தொகுதி பங்கீட்டை அறிவித்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தால் டெல்லியில் அறிவிக்கலாம், இது சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் தான் அறிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு புறப்பட்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதுபோன்று அமமுக இரட்டை இலையில் நின்றால் நாங்களே தேர்தல் செலவுகளை செய்கிறோம் என்று எடப்பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் டிடிவி தினகரன், அதெல்லாம் முடியாது குக்கர் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மறுத்துவிட்டார் ” என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தில்.
மேலும், விஜய்யின் தவெக குறித்தும் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம், “நீங்கள் தவெக வருவதை விரும்பவில்லையா? அதில் ஏன் நீங்கள் தீவிரம் காட்டவில்லை?” என்று கேட்டிருக்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, நான் விஜய் தரப்பிடம் பேசிக்கொண்டுதான் இருந்தேன். கரூர் சம்பவத்தின் போது கூட அவரை ஆதரித்துதான் பேசினேன். ஆனால் வழக்கு சிபிஐக்கு வந்ததும் நீங்கள் தான் குழப்பம் ஏற்படுத்திவிட்டீர்கள். பன்னீர் விஷயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியது நீங்கள் தான்’ என பதிலளித்திருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
