பசங்க, களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு என்று விமலின் மார்க்கெட் எகிறிய நேரத்தில் வெளியான திரைப்படம் ‘தேசிங்குராஜா’. எழில் இயக்கிய இப்படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தந்த ’அம்மாடி அம்மாடி’, ‘ஒரு ஓர ஓர பார்வை’, ‘நெலாவட்டம் நெத்தியிலே’, ‘போம் போம்’ பாடல்கள் ’விசிட்டிங் கார்டாக’ அமைந்தன. சூரி – ரவி மரியாவின் ‘மாமா’, ‘என்ன மாப்ளே..’ வசனங்கள் ரசிகர்களைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தன. விமலின் அலட்டல் நிறைந்த ஹீரோயிசம், பிந்து மாதவியின் கிறங்க வைக்கும் கவர்ச்சியோடு இதர நடிகர் நடிகைகளின் காமெடி அட்ராசிட்டியால் படம் ‘ப்ளாக்பஸ்டர்’ ஆக மாறியது. how is vimal desinguraja 2 teaser?
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து, அது போன்ற மாயாஜாலத்தை நிகழ்த்த வருகிறது ‘தேசிங்குராஜா 2’.
இயக்குனர் எழில், நாயகன் விமல் ஆகியோரோடு ரவி மரியா, சிங்கம்புலி, சாம்ஸ் உட்பட முதல் பாகத்தில் இருந்து மிகச்சிலர் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றனர். ஜனா, பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், வையாபுரி, சுவாமிநாதன், மதுரை முத்து உள்ளிட்ட பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
வித்யாசாகர் இதற்கு இசையமைத்திருக்கிறார். ’டபுள் டக்கர்’, ‘உயிர் தமிழுக்கு’ படங்களுக்குப் பிறகு தமிழில் அவர் இசையமைத்துள்ள படமிது.
பெண் வேடத்தில் வரும் புகழின் நடிப்பும் நாயகியாக நடித்துள்ள பூஜிதாவின் கவர்ச்சியும் இப்படத்திற்கு ‘ப்ளஸ்’ ஆக அமையலாம். போலவே, வித்யாசாகரின் பின்னணி இசை ‘காமெடி காட்சிகளுக்கு’ வலுவூட்டலாம். இது போக நடிகர் நடிகைகளின் ‘டைமிங்’ அபாரமாக இருக்கிற பட்சத்தில் சுமார் ரக ஜோக்குகளுக்கு கூட ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிப்பது இயல்பாக நிகழும்.
தனது படங்களின் பட்ஜெட்டை பற்றி ரசிகர்கள் கவலைப்படாத அளவுக்குத் திரையில் சில ‘கிம்மிக்ஸ்’ வேலைகளை காண்பிப்பது இயக்குனர் எழிலின் வழக்கம். ‘அது இந்த படத்தில் நிகழ்ந்திருக்கிறதா’ என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது படத்தின் டீசர்.
‘தல.. தல..’ வசனங்கள் படத்தின் உள்ளடக்கத்தை ‘தொள.. தொள..’ என்று ஆக்கிவிடுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது இந்த டீசர்.
அது போன்ற சந்தேகங்களைச் சரிவரப் படக்குழு கையாண்டிருந்தால், ‘தேசிங்குராஜா 2’ மீண்டும் ஒரு ‘காமெடி சரவெடி’யாக மாறும். போலவே இயக்குனர் எழில், நாயகன் விமல் உட்படப் பலரது அடுத்தடுத்த படங்களையும் தீர்மானிப்பதாக இதன் வெற்றி அமையுமா என்ற கேள்வியும் திரையுலகில் உள்ளது.
அவ்வளவு ஏன், இது போன்ற ‘காமெடி கலாட்டா’க்களுக்கு தமிழ் ரசிகர்கள் ஆதரவளிப்பார்களா என்ற கேள்விக்கான பதில் பலரை இது போன்ற முயற்சிகளில் இறங்கச் செய்யும்.
படம் வரும் ஜூலை 11 அன்று ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. அன்றைய தினம் இந்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாம்..!