குடும்பத்தில் சாப்பாட்டுக்கு ஒருவரும், வாடகைக்கு ஒருவரும் சம்பாதித்தால்தான் கோவையில் வாழ முடியும் என்ற நிலைக்கு ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக கோவையில் இடத்திற்கு ஏற்ப கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.3,000 வரை வீட்டு வாடகை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தொழில் நகரமான கோவைக்கு வேலை தேடி வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் வாய்ப்பு, கல்வி, ஐடி துறை வளர்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் கோவையின் வளர்ச்சி அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் கோவையின் 2041ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டமிடும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் கோவை 2ஆவது மாஸ்டர் பிளான் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால் கோவை நடுத்தர வர்க்க மக்கள் வாழ முடியாத அளவிற்கு வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்ந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக கடந்த ஓராண்டில் வீட்டு வாடகை குறைந்தபட்சம் ரூ.3000 வரை உயர்ந்துள்ளது. கோவை கணபதி பகுதியில் 2 பெட் ரூம் கொண்ட வீடுகள் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது.
சேரன்மாநகர் பகுதியில் ரூ.15,000 லிருந்து ரூ.18,000 வரை உயர்ந்துள்ளது. சவுரி பாளையம் பகுதியில் ரூ.15,000லிருநது ரூ.18,000 வரை உயர்ந்துள்ளனது.
சரவணம்பட்டி பகுதியில் ரூ.15,000 லிருந்து ரூ.18,000 வரை உயர்ந்துள்ளது. சித்தாபுதூர் பகுதியில் ரூ.12,000 லிருந்து ரூ.15,000 வரை உயர்ந்துள்ளது. கோவையின் அனைத்து பகுதிகளிலும் இன்றைய சூழலில் சிங்கிள் பெட்ரூம் கொண்ட வீடுகள் என்றாலே குறைந்த பட்சம் ரூ.10,000 என்ற நிலை உள்ளது.
இதுகுறித்து சவுரிபாளையம் பிரிவு பகுதியில் வசிக்கும் செல்வராணி கூறுகையில் எங்கள் வீட்டில் 3 பேர் உள்ள நிலையில் ரூ.12,000 வரை வாடகை உள்ளது. ஒரு சிறிய கிளினிக்கில் வேலை செய்யும் எனது சம்பளமே ரூ.6,000 தான். வாங்கும் சம்பளத்தை அப்படியே மகனிடம் கொடுத்து விட்டு இருக்கிறேன். எனது சம்பளம் வீட்டு வாடகைக்கே பத்தாது என்ற நிலைதான் உள்ளது” என்கிறார்.
இதேபோல் உப்பிளிபாளையம் பகுதியில் வசிக்கும் சினேகா மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில், “எங்கள் வீட்டில் நல்ல தண்ணீர் மட்டும் தான் உள்ளது. உப்பு தண்ணீர் தெருவில் உள்ள பைப்பில்தான் எடுக்க வேண்டும். இரு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி மட்டுமே உள்ளது. எனது வீட்டிற்கு மாதம் ரூ.9,000 வாடகை. அதேபோல் வீட்டில் சப் மீட்டர் வைத்து கொடுப்பதாக தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் கூறினாலும் ஒராண்டு கடந்தும் இதுவரை செய்து தரவில்லை. இதில் உப்பு தண்ணீர் வசதி வீட்டிற்குள் வருமாறு செய்து கொடுத்தால் குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சொல்லுவார்கள். இது மிகவும் சிரமமாக உள்ளது. சில நேரங்களில் வேலைக்காக கோவைக்கு வந்து சம்பாதிக்கும் பணத்தை வீட்டு வாடகைக்கு கொடுப்பதற்கு சொந்த ஊரிலேயே இருந்திருக்கலாம்” என்று கூட தோன்றுகிறது.” என்கிறார்.
கோவை நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் திவ்யா மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில், “நான் ரூ.12,000 வரை வீட்டு வாடகை கொடுக்கிறேன். இது எனது சம்பளத்தில் 75 சதவிகிதம். கணவரும் நானும் சேர்ந்து வேலைக்கு போவதால் குடும்பச் செலவுகளை ஓரளவு சமாளிக்க முடிகிறது. இது அவுட்டர் ஏரியா என்பதால் ஓரளவு குறைவாக உள்ளது. குறைந்த வாடகை என்ற காரணத்திற்காக இங்கு இருந்தாலும் தினமும் அலுவலகம் சென்று வருவதற்கு மிகவும் சிரமாக உள்ளது. பாதைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இடுப்பு வலி ஏற்படுகிறது. மேலும் அலுவலகத்திற்கு போய் வருவதற்கு பெட்ரோல் செலவும் அதிகம். முறையான வாகன வசதியும் இங்கு இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு கிளம்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலையில் சாப்பிட கூட நேரம் இருப்பது இல்லை” என்கிறார்.
இதேபோல் வேலைக்காக கோவை வந்து லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் மின்னம்பலம்.காம்-மிடம் கூறுகையில், நாங்கள் 3 நண்பர்கள் சேர்ந்து கடந்த வாரம் தான் லட்சுமிபுரம் பகுதியில் இருக்கும் வீட்டிற்கு குடி வந்துள்ளோம். இங்கு இரண்டு பெட்ரூம் வீடு ரூ.15,000 என்கின்றனர். நாங்கள் முதலில் பேச்சுலர் என்பதாலா என்று கேட்டோம்.. இல்லை பேமிலி என்றாலும் அதுதான் வாடகை என்றனர். வேறு வழி இல்லாமல் 3 பேரும் வாடகையை பகிர்ந்து கொண்டு தங்கி உள்ளோம். இதுவே கொஞ்சம் மெயின் ரோட்டில் உள்ள காமராஜபுரம் என்றால் சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை வாடைகை என்ற நிலை உள்ளது. இதை நினைத்தாலோ எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கை குறித்த அச்சம் வருகிறது ” என்கிறார்.
இது மட்டும் இல்லாமல் வீடு வாடகைக்கு விடும் போதே ஒரு குழந்தை மட்டும் தான் இருக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் எப்போது கிளம்புவார்கள் என கேட்கும் தொந்தரவுகளும் ஆங்காங்கே உள்ளது. அவ்வப்போது அதிரடியாக வாடகையை உயர்த்துகின்றனர். ரூ.15,000 வாடகை உள்ள வீடுகளுக்கான அட்வான்ஸ் தொகையே ரூ.2,00,000 வரை வசூலிக்கப்படுகிறது. இதுவே காந்திபுரம், ராமநாதபுரம், கிராஸ்கட் உள்ளிட்ட கோவையின் மையப்பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள ஓரளவு வசதியான வீடுகளுக்கு 25,000 முதல் 30,000 வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் திண்டாடும் எங்களுக்கு வாடகை உயர்வு மேலும் சிக்கலை தருகிறது என்று பொது மக்கள் புலம்பும் நிலை உள்ளது.