சிலிண்டர் விலை தட்டுப்பாடு எதிரொலி.. உணவு வகைகளை அதிரடியாக குறைக்கும் ஹோட்டல்கள்

Published On:

| By Pandeeswari Gurusamy

hotel

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உணவு வகைகளை ஹோட்டல் நிர்வாகங்கள் குறைத்து வருகின்றன.

மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் (மற்றும் அமெரிக்கா) இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியதால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் எரிபொருள் விநியோக சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரில் வணிக எல்பிஜி சிலிண்டர் வழங்கல் நேற்று (மார்ச் 9) முதல் நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் இன்று (மார்ச் 10) முதல் ஹோட்டல்களை மூடுவதாக அறிவித்துள்ளது. மும்பை, கொல்கத்தா, சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல் தொழிலை நம்பியுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் “வெரைட்டி ரைஸ் இல்லை” என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் தாமதமாக திறக்கப்படுவதுடன், முன்பு மூன்று குழம்பு வகைகள் மற்றும் இரண்டு சாம்பார் வகைகள் வழங்கிய இடங்களில் இப்போது ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது கிளைகளில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. அதில், “மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பிரச்சினைகளால் உணவகத் துறையில் எல்பிஜி எரிவாயு விநியோகத்தில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. சமையலின் முதன்மை எரிபொருளான எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக தினசரி பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்.சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் தொடர்வதற்காக, கீழ்க்கண்ட

தற்காலிக மாற்றங்களை செயல்படுத்துகிறோம்:உணவு பட்டியல் குறைக்கப்படுகிறது; முக்கியமான சில உணவுப் பொருட்கள் மட்டும் வழங்கப்படும்.
சில உணவுப் பொருட்களின் கிடைக்கும் நேரங்களில் மாற்றங்கள் இருக்கலாம்.

ADVERTISEMENT

சீரான எரிவாயு வழங்கலை மீட்டெடுக்க அரசு மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இது அனைவருக்கும் சவாலான காலம். உங்கள் புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது. ஏற்படும் இன்னல்களுக்கு மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகிகள் கூறுகையில், “வழக்கமாக 350 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து விற்று வந்த நிலையில், தற்போது வணிக கேஸ் தட்டுப்பாடு காரணமாக 100 வகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனியன் ஊத்தாப்பம், ரவா ரோஸ்ட், பஜ்ஜி, போண்டா, புரோட்டா, காலிபிளவர் ரோஸ்ட், தந்தூரி, சைனீஸ் உணவுகள் போன்ற கேஸ் அதிகம் தேவைப்படும் உணவு வகைகளின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் தோசை வகைகள், பூரி, சேவை மட்டுமே வழங்கப்படுகிறது. மதியம் வழக்கம்போல் சாப்பாடு கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அரசு விரைவில் வணிக எல்பிஜி விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share