ADVERTISEMENT

மத வன்முறையின் கோர முகம்: வங்கதேசமும் இந்தியாவும்!

Published On:

| By Minnambalam Desk

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் கடும் கண்டனத்துக்கு உரியவை; இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும்  கும்பல் கொலைகளும் அதேபோன்றதுதான்.

நிசிம் மன்னத்துக்காரன்

முகமது நபியை அவதூறு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் டிசம்பர் 18 அன்று தீபு சந்திர தாஸ் என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், பெரும்பான்மைவாத கும்பல் அரங்கேற்றும் கொடூரமான நீதியின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தாஸின் கொலையைத் தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக மேலும் வன்முறைகள் வெடித்தன.

ADVERTISEMENT

இந்தக் கொலை இந்தியாவில் சாதாரண குடிமக்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், பிரபலங்கள் மத்தியில் பெரும் கோபத்தைத் தூண்டியது. இந்திய அரசு இந்த “மிருகத்தனமான கொலை” குறித்து அதிகாரப்பூர்வமாகத் தனது கவலையை வெளிப்படுத்தியது. இந்த எதிர்வினைகள் முற்றிலும் நியாயமானவை. இத்தகைய கொடூரமான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்றால், அது கடுமையான கோபத்துடனும் கண்டனத்துடனும் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த எதிர்வினை சில கேள்விகளை எழுப்பியுள்ளது: இத்தகைய கோபம் மதம், தேசியம், இனத்தின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படுத்தப்பட வேண்டுமா?

இந்தியாவில் கும்பல் கொலைகள்

ADVERTISEMENT

கும்பல் கொலை: சட்டத்தின் ஆட்சி மீது ஒரு விஜிலன்ட் தாக்குதல் - iPleaders

தாஸ் கொல்லப்பட்ட சில நாட்களுக்குள், இந்தியாவில் குறைந்தது நான்கு கும்பல் கொலைகள் நடந்தன: பிகாரில் துணி வியாபாரி முகமது அதார் உசேன்; கேரளத்தில் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராம்நாராயண் பாகல்; ஒடிசாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளி ஜூயல் ஷேக்; உத்தராகண்டில் திரிபுராவைச் சேர்ந்த மாணவர் அஞ்சல் சக்மா. இந்தக் கொலைகள், தாஸின் கொலை ஏற்படுத்தியதைப் போன்ற பாதிப்பை நமது தேசிய உணர்வில் ஏற்படுத்தவில்லை. சக்மாவின் மரணம் மட்டுமே ஓரளவிற்கு கவனத்தைப் பெற்றது.

ADVERTISEMENT

முதன்மை நேரச் செய்தி விவாதங்களோ அல்லது சக்திவாய்ந்த அமைச்சர்களின் கண்டனங்களோ இல்லை. தாஸ் கொலை தொடர்பான ஆத்திரத்தின் ஒரு பகுதியாக, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர் ஒருவர் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. “எங்கு நடக்கும் அநீதியும், எங்கும் இருக்கும் நீதிக்கு ஒரு அச்சுறுத்தல்” என்ற அமெரிக்க சிவில் உரிமைப் போராட்ட வீரர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வலிமையான அறைகூவலை இந்தியா செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

2014இல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, மதத்தின் அடிப்படையில் கும்பல் கொலைகள் இந்தியாவில் அதிகரித்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள். முகமது அக்லாக், பெஹ்லு கான், அலிமுதீன் அன்சாரி, 16 வயது ஜூனைத் கான், குலாம் அகமது, மஜ்லும் அன்சாரி, 12 வயது இம்தியாஸ் கான், ரக்பார் கான் ஆகியோர் கும்பல்களால் கொல்லப்பட்ட சம்பவங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. இது கும்பல் கொலைகளுக்கெனத் தனிச் சட்டத்தை இயற்றுவது குறித்துப் பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொள்ள வழிவகுத்தது.

மத்திய சட்டம் என்று எதுவும் இல்லை என்றாலும், பாரதிய நியாய சன்ஹிதாவின் 103(2) பிரிவு கும்பல் வன்முறைக்குத் தண்டனை வழங்குகிறது.

இயல்பாக்கப்படும் மத வன்முறைகள்

2014-16-ல் உபியில் அதிக சாதி, மத வன்முறைகள்: மத்திய அரசு தகவல்

2024 முதல் நடந்து வரும் கும்பல் கொலைகளின் தொடர்ச்சி நமது தேசியத் தலைவர்களைப் பெரிதாகத் தொந்தரவு செய்யவில்லை. ஊடகங்களிலும் இவை அரிதாகவே இடம் பெற்றுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அதிர்ச்சியூட்டும் வகையில் இயல்பாக்கப்படுவதை இது காட்டுகிறது. 2024 ஜூன் மாதத்தில் மட்டும் குடு கான், சந்த் மியா கான், முகமது ஃபரித், சல்மான் வோஹ்ரா ஆகியோர் கும்பல்களால் கொல்லப்பட்டனர். 2025 ஆகஸ்டில், 20 வயது சுலைமான் கான் பதான் தனது நெருங்கிய நண்பர்கள் அடங்கிய கும்பலால் கொல்லப்பட்டார்.

சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகளும் வன்முறையும் இன அல்லது மத படிநிலையை நிலைநிறுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. சமூக மீறல்கள் என்று கருதப்படுபவற்றைத் தண்டிக்கவும், பிரிவினையை அமல்படுத்தவும் அல்லது ‘வெளியாட்கள்’ என்று கருதப்படுபவர்கள் மீதான அச்சத்தால் தூண்டப்படும் கருவிகளாகவும் இவை உள்ளன.

வங்கதேசத்தில் மைமென்சிங்கில் தீபு சந்திர தாஸ் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார், அவரைக் கொன்ற கும்பலில் இருந்த பலர் அந்த வேலையை விரும்பியிருக்கலாம். இந்தியாவில் மேலே குறிப்பிடப்பட்ட பல கும்பல் கொலைகள் பசுப் பாதுகாப்பு அமைப்புகளால் நடத்தப்பட்டன. ஆனால் ராம்நாராயண் பாகல் கேரளாவில் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு இந்து தலித் தொழிலாளி. இந்துக்கள் அடங்கிய கும்பல் ஒன்று அவர் ஒரு திருடன், வங்கதேசத்தவர் என்று எண்ணிக் கொலைசெய்தது.

அதேபோல், ஜூயல் ஷேக் ஒடிசாவில் ஒரு பெங்காலி முஸ்லிம் தொழிலாளி. ஆனால் கும்பல் அவர் ஒரு வங்கதேசத்தவர் என்று குற்றம் சாட்டியது. திரிபுராவைச் சேர்ந்த அஞ்சல் சக்மாவைக் கொன்ற உத்தராகண்ட் கும்பல் அவரைச் சீனராகக் கருதியதால் கொலை செய்தது.

பெரும்பான்மைவாத கும்பல் வன்முறை கொடூரமானது. வங்கதேசத்தில் தீபு சந்திர தாஸ் பொதுமக்களின் கண்ணெதிரில் இழுத்துச் செல்லப்பட்டு, தூக்கிலிடப்பட்டு, எரிக்கப்பட்டார், இவை அனைத்தும் படமாக்கப்பட்டன. கேரளாவில் ராம் நாராயண் பாகலின் உடலில் 80க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன: அவர் “மிருகத்தைப் போல அடிக்கப்பட்டார்” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிகாரில், அதார் உசேன் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்த கும்பல் அவரது ஆடைகளை உரித்தது, அவரது சதையை எரித்தது, கம்பிகளால் அடித்தது, அவரது காதுகளை இடுக்கியால் துண்டித்தது.

இந்தச் சம்பவங்களை ஏதோ தற்செயலானவை என்று நம்புவதுதான் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு. இவை பெரும்பான்மைவாத அதிர்ச்சியில் இருக்கும் அரசியல் அமைப்புகளின் அறிகுறியாகும். தீபு சந்திர தாஸின் கொலை, ஒரு தேசம் தனது மதப் பெரும்பான்மையின் பிம்பத்தில் தன்னை வடிவமைக்க விரும்பும் செயல்முறையின் விளைவாகும்.

முதன்மை பெறும் மத தேசியவாதம்

லவ் ஜிஹாத்" சட்டங்கள்: இந்தியா அரசியலமைப்புப் போரை எதிர்கொள்கிறது

ஒவ்வொரு குடிமகனும் சமமானவர் என்ற ஜனநாயக ஒப்பந்தத்தையோ, மதத்தைப் பொருட்படுத்தாத மதச்சார்பின்மையையோ இது நம்புவதில்லை. வங்கதேசத்தின் அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள இந்த மதச்சார்பின்மையை இப்போது அந்நாட்டினர் நீக்க விரும்புகிறார்கள்.

இதேபோல் இந்தியாவில், மத தேசியவாதமும் மத அடையாளத்தின் அரசியல் வெளிப்பாடும் அரசியலின் முக்கிய அம்சங்களாக மாறிவிட்டன. பசுக் கொலை, ‘லவ் ஜிஹாத்’ என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஆழமான பாதிப்பு உணர்விலிருந்து உருவாகின்றன. பெரும்பான்மை மதம் சிறுபான்மையினரால் தான் ஆக்கிரமிக்கப்படுவதாக நம்புகிறது. இந்த எண்ணத்திலிருந்தே வன்முறை பிறக்கிறது

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் மீது பல தாக்குதல்கள் நடந்தன: இந்தியா ஒரு இந்து ராஷ்டிரம் என்று கூறி இந்துத்துவ ஆதரவாளர்கள் பிரார்த்தனைகளைத் தடுத்தனர், விடுதிகள், பள்ளிகள், வணிக வளாகங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைச் சேதப்படுத்தினர், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை விற்கும் ஏழை வியாபாரிகளைக்கூட அச்சுறுத்தினர். 2014இல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 147 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கை 2024இல் 840ஐ எட்டியது.

பெரும்பான்மைவாத கும்பலின் வன்முறை தாக்கப்படாதவர்கள் மத்தியிலும் அச்சத்தைப் பரப்புகிறது, மதங்களுக்கிடையே நிரந்தரப் பிளவுகளை உருவாக்குகிறது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். இந்தியாவிலும், முஸ்லிம் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்த கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

சமீபத்திய மாதங்களில், உலகின் பிற பகுதிகளில் உள்ள இந்து சிறுபான்மையினருக்காக இந்தியர்கள் குரலெழுப்புகிறார்கள், அது அவசியம். ஆனால் இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் தாக்கப்படும்போது அவர்கள் குரலெழுப்பவில்லை.

கும்பல் கொலைகள் 21ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தின் மீதான அவமானம். மதத்தின் அடிப்படையில்ஆத்திரத்தை வெளிப்படுத்துபவர்கள் அநீதிக்கு எதிராக எதையும் செய்வதில்லை. இது உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினரை ஆபத்துக்குள்ளாக்குகிறது. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தாக்கப்படுகிறார்கள். எல்லா விதமான மத வன்முறைகளுக்கு எதிராகவும் குரலெழுப்புவதே அறம்.

நிசிம் மன்னத்துக்காரன், கனடாவின் டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

நன்றி: ஸ்க்ரால் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share