கோவை அன்னூர் பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்த இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இந்து மக்கள் கட்சியில் மாநில அமைப்பு குழு செயலாளராக உள்ளார். ராஜேந்திரன் தனது நண்பர் ரங்கநாதனுடம் இணைந்து அன்னூரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தங்கள் நிறுவனத்தில் வாரச் சீட்டு செலுத்தி வந்தால் முதலீட்டுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும் என்று அறிவித்தனர்.
இதை நம்பி கோவை பன்னிமடை பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் வரை பணம் செலுத்திய நிலையில் சமீபத்தில் தவணை கால அவகாசம் முடிந்தது. இதைத்தொடர்ந்து மாரிமுத்து தவணை காலம் முடிந்ததால் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் தொடர்ச்சியாக ஏலச்சீட்டு நிறுவனம் தரப்பில் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
மாரிமுத்து பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததோடு பணத்தை திரும்ப தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.