இந்தி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரி அல்ல; இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் நட்பு மொழி இந்திதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். Hindi Amit Shah English
மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆங்கில மொழிக்கு எதிராக அண்மையில் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. டெல்லியில் ஜூன் 19-ந் தேதி நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுவதற்காக வெட்கப்படும் சூழ்நிலை விரைவில் உருவாகும். நமது மொழிகளே உன்னதமானவை. நமக்கு எதற்கு அந்நிய மொழியான ஆங்கிலம்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில் டெல்லியில் இன்று ஜூன் 26-ல் அலுவல் மொழி துறையின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: இந்தி மொழியானது எந்த ஒரு இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி.
எந்த ஒரு மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. எந்த ஒரு அன்னிய மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனாம் நமது மொழியின் பெருமிதங்கள் முன்வைக்கப்பட வேண்டும். நாம் நமது சொந்த மொழிகளில் பேச வேண்டும். நமது சிந்தனை நமது மொழியில்தான் இருக்க வேண்டும். மொழி என்பது இந்த தேசத்தின் ஆன்மா; அது ஒரு தொடர்பு கருவி மட்டும் அல்ல. நமது நாட்டு மொழிகள் உயிர்ப்புடன் இருக்க வேண்டியது கட்டாயம்.
கடந்த சில தசாப்தங்களாக, மொழியை முன்வைத்து இந்தியாவை பிரிக்க நினைக்கின்றனர். மொழியை முன்வைத்து இந்தியாவை ஒருபோதும் பிளவுபடுத்த முடியாது. இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பதில் மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அரசு நிர்வாகங்களில் இந்திய மொழிகளையே அதிகம் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசில் மட்டும் அல்லாமல், மாநில அரசு நிர்வாகங்களிலும் இந்திய மொழிகளைத்தான் பயன்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் JEE, NEET, CUET தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்பட்டன. இப்போது இந்த தேர்வுகள் 13 இந்திய மொழிகளில் நடத்தப்படுகின்றன. கான்ஸ்டபிள் தேர்வுகளை 95% தேர்வர்கள், தாய் மொழியிலேயே எழுதுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளே இந்திய மொழிகளின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.