இந்தியாவில் பொதுவாக உணவுடன் சேர்த்து ஊறுகாயும் உட்கொள்ளப்படுகிறது. தயிர் சாதம், ரசம் சாதம் மற்றும் வெரைட்டி உணவுகளுடன் தொட்டுக் கொள்ள ஊறுகாயை பயன்படுத்துகிறோம். உணவின் சுவையை கூட்ட ஊறுகாய்கள் பயன்படுகின்றன. சிலருக்கு வெறும் பழைய சாதத்துடன் ஊறுகாய் இருந்தால் போது அப்படியே சாப்பிட்டுவிடுவார்கள்.
முன்பெல்லாம் எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், நார்த்தங்காய், பூண்டு என ஊறுகாய்கள் வீட்டிலேயே சரியான அளவு உப்பு, காரம் சேர்த்து பதப்படுத்தப்பட்டு உணவுக்கு பயன்படுத்தப்படும். ஆனால், இப்போது பெரும்பாலும் சந்தைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள ஊறுகாய்களையே மக்கள் விரும்புகிறார்கள். ஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
ஊறுகாயில் உள்ள நன்மைகள் (Benefits of pickles) : ஊறுகாய்கள் பெரும்பாலும் காய்கறிகள், பழங்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. அதில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிகளவில் உள்ளன. சரியான விகிதத்தில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
புளிக்க வைக்கப்பட்ட ஊறுகாயில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.
ஊறுகாயில் சேர்க்கப்படும் மஞ்சள், வெந்தயம், கடுகு மற்றும் மசாலா பொருட்கள் அழற்சி வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. ஊறுகாயின் காரமான சுவை உமிழ்நீர், செரிமான சாறுகள் வெளியீட்டை தூண்டுகிறது. இதனால் உணவு எளிதாக செரிமானமாகிறது. பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு ஊறுகாய் நன்மையளிக்க வாய்ப்புகள் உள்ளன.
ஊறுகாய்கள் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் (Disadvantages of pickles) : ஊறுகாயை மிதமாக தொட்டுக்கொள்ளும் வரை நன்மையளிக்கும் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். ஆனால், அதிகமான அளவு ஊறுகாயை சாப்பிடுவது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும். ஊறுகாயில் அதிகளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு வழிவகுக்க வாய்ப்புகள் உள்ளன. அதிகமான உப்பு சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. காரமான ஊறுகாய்கள் சாப்பிடுவது நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
யார் ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் (Who avoid eating pickles) : உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சனைகள், வயிறு பிரச்சனை உள்ளவர்கள் ஊறுகாயை மிகக் குறைந்த அளவுதான் பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணி பெண்கள், முதியோர் அதிகமான உப்பு, மசாலா பொருட்கள் கொண்ட ஊறுகாய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் தயாரிக்கப்படும் ஊறுகாய்களில் ரசாயனம் இல்லாததால் அவை நன்மையளிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் ஊறுகாய்களில் சாயம், எண்ணெய், உப்பு ஆகியவை அதிகளவில் உள்ளதால் அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே, கடைகளில் இருந்து ஊறுகாய் வாங்கினால் நல்ல தரமான ஊறுகாயை வாங்கி குறைந்த அளவில்தான் உட்கொள்ள வேண்டும். நீங்கள் ஊறுகாய் பிரியராக இருந்தால் மிதமான அளவு மட்டுமே ஊறுகாயை சாப்பிடுங்கள்.
