இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் காலில் விலங்கிட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 30 ஆம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இந்த மீனவர்கள் நவம்பர் 3 ஆம் தேதி 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்தனர். அங்கிருந்து இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்கு பின், பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
அப்போது மாணிக்கவேல் என்ற மீனவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அது குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மாணிக்கவேலுவிற்கு காலில் விலங்கிடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் உள்ளன.
இந்நிலையில் இலங்கை யாழ்பாணம் பருத்தி துறை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
தமிழக மீனவர்களின் கைகள், கால்களில் விலங்கு போடப்பட்டே, சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே விலங்கிட்டு அழைத்து வரப்படும் மீனவர்களை , வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரின் கேமராவை தட்டி விட்ட யாழ்ப்பாண சிறையின் அதிகாரி வழக்கு போடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மாணிக்கவேலின் காலில் விலங்கிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
