வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான வழங்கப்படுகிற H-1B விசா கட்டணம் ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.88.09 லட்சமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்:
“அமெரிக்க H-1B விசா திட்டத்திற்கான புதிய கட்டுப்பாடுகளை செய்திகளை அரசு கவனித்துள்ளது. இந்த நடவடிக்கையின் முழுமையான விளைவுகளை, இந்திய நிறுவனங்கள் உட்பட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய தொழில் துறையும் H-1B திட்டத்தைச் சுற்றியுள்ள சில தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்தும் வகையில் ஆரம்பகட்ட ஆய்வை வெளியிட்டுள்ளது.”
அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்துறைகள் இரண்டுக்கும் புதுமை மற்றும் படைப்பாற்றலில் பங்கு உள்ளது. எனவே, சரியான முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுக்க அவை ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.”
“திறமையான மனித வள இயக்கமும் பரிமாற்றங்களும் தொழில்நுட்ப முன்னேற்றம், புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித் திறன் மற்றும் செல்வச் சேர்க்கைக்கு அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரிதும் பங்களித்துள்ளன. மேலும், “கொள்கை உருவாக்குவோர் சமீபத்திய நடவடிக்கைகளை இரு நாடுகளுக்கும் கிடைக்கும் பரஸ்பர நன்மைகள், அதாவது மக்களிடைய உறவுகளை கருத்தில் கொண்டு மதிப்பாய்வு செய்வார்கள். இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அரசாங்கம், அமெரிக்க அதிகாரிகள் இதுபோன்ற இடையூறுகளை தகுந்த முறையில் சமாளிப்பார்கள் என்று நம்புகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் நடைபெற்ற வெளிநாட்டில் வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அமெரிக்கா தொடர்பான இரண்டு முக்கியமான அறிவிப்புகளை அவர் பேசியுள்ளார்.
- புதிய தூதரக அலுவலகங்கள்: அமெரிக்கா, இந்தியாவில் பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் புதிய தூதரக அலுவலகங்கள் (Consulates) திறக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது தென்னிந்தியா மற்றும் மேற்கிந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு தூதரக சேவைகளை எளிதாக அணுக உதவும்.
- H-1B விசா புதுப்பிப்பில் பெரிய மாற்றம்: H-1B விசா புதுப்பிப்பு (renewal) செய்வதற்கு இனிமேல் விண்ணப்பதாரர்கள் இந்தியாவுக்குத் திரும்ப தேவையில்லை.
இந்த முக்கியமான செயல்முறை அமெரிக்காவிற்குள் இருந்தே முடிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது H-1B விசா கொண்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு பெரிய சவாலை நீக்கி, வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்” என்று பேசியிருந்தார். தற்போது H-1B விசா பெறுவதற்கே பல மடங்கு கட்டணத்தை அமெரிக்கா நடைமுறைப்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.