வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிவதற்கான வழங்கப்படுகிற H-1B விசா கட்டணம் ரூ.1.40 லட்சத்தில் இருந்து ரூ.88.09 லட்சமாக உயர்த்தப்படுவது இந்திய ஐடி பணியாளர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
H-1B விசா என்பது என்ன?
- அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர் நுழைவதற்கு அல்லது பயணிப்பதற்கான விசா.
- அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்கள் வேலை செய்வதற்கான தற்காலிகமான அனுமதி வழங்குகிறது H1B விசா. ஐடி நிறுவனங்கள் பெருமளவில் இதை பயன்படுத்துகின்றன.
- 1990களுக்குப் பின்னர் ஐடி துறை விஸ்வரூபம் எடுத்ததால் H1B விசாவுக்கு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் அனுமதி வழங்கினார்.
- ஓராண்டுக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான H-1B விசாக்கள் மட்டுமே வழங்கப்படும்.
- H-1B விசாக்களைப் பெறுபவர்களில் 71% இந்தியர்கள்; சீனர்கள் 11.7%
- H-1B விசாக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் பெற முடியும்.
- H-1B விசாக்கள் கணினி குலுக்கல் முறையில் வழங்கப்படும். ஓராண்டுக்கு 85,000 H-1B விசாக்களை இந்த முறையில் அமெரிக்கா வழங்குகிறது. நடப்பாண்டில் அமேசான் நிறுவனம் 10,000 வெளிநாட்டவரை பணியில் அமர்த்துவதற்கான H-1B விசாக்களைப் பெற்றுள்ளது. Tata Consultancy, Microsoft, Apple மற்றும் கூகுள் நிறுவனங்களும் H-1B விசாக்களை கணிசமாக பெற்றுள்ளன.
- H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகம் உள்ளனர்.
தற்போதைய கட்டணம் எவ்வளவு?
H1B விசா கட்டண கட்டணம் $1600 முதல் $7400 அமெரிக்க டாலர்களாக இருந்தன. இந்திய பண மதிப்பில் ரூ 1.40 லட்சம் முதல் ரூ 6.51 லட்சம் வரை இருந்தது.
உயர்த்தப்படும் கட்டணம் எவ்வளவு?
தற்போது இந்த H-1B விசாவுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதற்கான உத்தரவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி H-1 B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் $1,00,000 ஆக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.88.0 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து பணியாளர் ஒருவரை அமெரிக்காவில் செயல்படும் நிறுவனம் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்ற நெருக்கடியை உருவாக்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப்.