ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது! 99% பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி! ரூ2.5 லட்சம் கோடி சேமிப்பு- பிரதமர் மோடி
ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் (செப்டம்பர் 22) நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
2017-ம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டு 4 வகை வரி விதிப்பு அமலில் இருந்தது. தற்போது இது 5% மற்றும்18% என இரண்டு வகையாக மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வந்தது. நாட்டில் 99% பொருட்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்ப்ட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.
முன்னதாக நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2017-ல் நாட்டின் பொருளாதார வரலாற்றில் ஒரு பழைய அத்தியாயத்தின் முடிவையும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் ஜிஎஸ்டி இருந்தது.
வரி சிக்கல்களிலிருந்து நாட்டை விடுவிப்பது அவசியம் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டில் தாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் அரசு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு முன்னுரிமை அளித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன என்றும் மாநிலங்கள் எழுப்பிய ஒவ்வொரு கவலையும் தீர்க்கப்பட்டன என்றும் அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டு, சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள வருமான வரி விலக்கு மற்றும் ஜிஎஸ்டி குறைப்புகள் இரண்டும் இணையும் போது, கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாக இந்திய மக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால்தான் இதை அவர் ‘சிக்கன பெருவிழா’ என்று கூறுவதாக விளக்கம் அளித்தார்.
முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கி, தங்கள் பகுதிகளில் முழு ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் உற்பத்தியை ஊக்குவித்து, இதன் மூலம் தற்சார்பு இந்தியா மற்றும் சுதேசி இயக்கங்களுக்கு முழு ஆதரவு அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.