தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் IAS அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்; புதிய அலுவலராக வெங்கடபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சென்னையில் சில தேர்வு மையங்களில் குளறுபடிகள் ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் மறியல் போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து திடீரென குரூப் 2, குரூப் 2A தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில தேர்வு மையங்களில் தேர்வர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது இந்த அறிவிப்பு வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் TNPSC தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் இன்று அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும். அவருக்கு பதிலாக வெங்கடபிரியா, புதிய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
