கொலைகார பாவிகளா? – திண்டுக்கல் சீனிவாசன் பேச்சுக்கு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்!

Published On:

| By Selvam

அரசு ஊழியர்களை கொலைகார பாவிகள் என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்ததற்கு, அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று (நவம்பர் 22) அதிமுக சார்பில் கள ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியபோது, “சட்டமன்ற தேர்தலில் அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும் நமக்கு எதிராக இருந்தார்கள். திண்டுக்கல் தொகுதியில் நான் 22 ஆயிரம் ஓட்டில் வெற்றி பெற்றதாக கூறினார்கள்.

கையெழுத்து போட போனபோது, துணை தாசில்தார் ஓடிவந்து தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறோம், கையெழுத்து போடாதீர்கள் என்றார்.

சரி, ஆயிரம் அல்லது இரண்டாயிரம் தபால் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று உட்கார்ந்து இருந்தேன். ஆனால், வெற்றி வித்தியாசத்தில் 5 ஆயிரம் ஓட்டுக்கள் எனக்கு குறைந்துவிட்டதாக கூறினார்கள். எல்லா தபால் ஓட்டுகளும் திமுகவுக்கு போய்விட்டது. நீங்கள் 17,500 ஓட்டில் தான் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்றார்கள்.

தபால் ஓட்டில் எனக்கு எத்தனை ஓட்டுக்கள் வந்துள்ளது என்று கேட்டேன். ஒரு ஓட்டு கூட வரவில்லை என்று கூறினார்கள். அரசு அதிகாரிகள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் பாருங்கள். அட கொலைகார பாவிகளா என்று தான் அவர்களை பார்த்து சொல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் என்று மொத்தம் 80 லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இது விளையாட்டு கிடையாது. அந்த ஓட்டுகளால் தான் நாம் தோற்றோம். இதனால் அவர்களின் ஓட்டுகளை பெற முயற்சிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த விமர்சனம் குறித்து நம்மிடம் பேசிய அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ் செல்வி, “அரசு ஊழியர்கள் மீதான அதிமுகவின் உச்சகட்ட அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆட்சியை நிர்ணயிப்பது அரசு ஊழியர்கள் குடும்பம் தான் என்பதை திண்டுக்கல் சீனிவாசன் ஒப்புக்கொள்கிறார்.

பொறுப்புள்ள முன்னாள் அமைச்சர் அரசு ஊழியர்கள் பற்றி ஆணவமாக பேசியதற்கு எங்களது வன்மையான கண்டனங்கள். இதனால் அதிமுகவுக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும். திமுக ஆட்சிக்கும் நாங்கள் அதை தான் சொல்ல வருகிறோம். அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் தேர்தலில் இதுபோன்று தான் நடக்கும்” என்று எச்சரித்தார்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோல்வி அச்சம் – மீள்வது எப்படி?

டாப் 10 நியூஸ்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் முதல் கிராம சபை கூட்டம் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share