மாநில சட்டமன்ற மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கனிமொழி (திமுக):“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மாநில சட்டமன்றம் மக்கள் இறையாண்மையின் தூணாகவும், ஜனநாயகத்தின் உயிர்துடிப்பாகவும் விளங்குகிறது. அந்த உயரிய அமைப்பு நிறைவேற்றிய மசோதாக்களை, எந்தவொரு காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு, இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவாக உறுதிப்படுத்துகிறது.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுத்தும் சட்டங்களையும் கொள்கைகளையும் தடுக்கும் வகையில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது என்பது அரசியலமைப்பின் ஆன்மாவின் நோக்கத்துக்கு முழுமையாக முரண்படுவதாகும் என்பதை இன்றைய தீர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சட்டமன்றத்தின் ஒவ்வொரு முடிவும் மக்களின் விருப்பத்தின் வெளிப்பாடே என்பதை இந்த தீர்ப்பு மறுபடியும் அனைவருக்கும் உணர்த்துகிறது.
இந்த தீர்ப்பு மாநிலங்களின் உரிமை, மக்கள் ஆட்சியின் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னோட்டமாகும். மாநில அரசின் செயல்பாடுகளை தாமதப்படுத்தும் அல்லது தடைசெய்யும் நோக்கத்துடன் ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் முற்றிலும் தெளிவுபடுத்தியுள்ளது. இது சட்டமன்றத்தின் மதிப்பையும், மக்களின் உணர்வுகளையும், மேன்மையையும் உயர்த்தும் நீதியின் முழக்கமாக திகழ்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை நான் மனமார வரவேற்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் எந்தவிதத் தடையும் இன்றி சட்டபூர்வமான முறையில் முன்னேற வேண்டும் என்ற நமது நிலைப்பாட்டுக்கு இன்று நீதிமன்றம் அளித்த உறுதிப்படுத்தல் மிகப் பெரும் பலமாகும். அரசியலமைப்பை மதிக்கும் பண்பும், கூட்டாட்சி மரபுகளைக் காக்கும் பொறுப்பும் அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது.
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரம் பாதிக்கப்படாமல், சட்டமன்றத்தின் கண்ணியம் குறையாமல், ஜனநாயகத்தின் மதிப்பு நிலைக்க தகுந்த பாதையை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது. மக்கள் நலனே முதன்மையானது என்ற உண்மையான அரசியலமைப்பு வழங்கிய உறுதி மொழியில், நாங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம்.
ரவிக்குமார் (விசிக): மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குக் காலக் கெடு விதிக்க முடியுமா? என்ற கேள்வி உட்பட குடியரசுத் தலைவர் கேட்ட 14 வினாக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் மூன்று மாத காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 143 இன் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு 14 வினாக்களை எழுப்பி அவற்றைத் தெளிவுபடுத்தும்படி கேட்டார். இதை தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்தது. அதன் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எந்த விதத்திலும் பாதிக்காது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே தெளிவுபடுத்தி விட்டனர்.
குடியரசுத் தலைவர் கேட்ட வினாக்களுக்கு ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலேயே விரிவாக பதிலளிக்கப்பட்டு இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் அளித்த தீர்ப்பில் காலக்கெடு விதிப்பது குறித்து விரிவாக ஆராய்ந்திருக்கிறது. 414 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பின் பக்கம் 373 இல் ‘ஒரு மசோதா சட்ட விரோதமானதாக இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் கருதினால் அரசமைப்புச் சட்டம் உறுப்பு 143 இன் கீழ் அது குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ‘அவ்வாறு அணுகுவது கட்டாயம் இல்லை என்றாலும் ஒரு மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்ற கருத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டால் அது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு மசோதா மீது முடிவெடுப்பதற்கு ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு விதிக்கலாம் என்பதை சர்க்காரியா கமிஷனும் பூஞ்ச்சி கமிஷனும் பரிந்துரைத்திருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகளில் குறிப்பிட்ட காலத்துக்குள் மசோதாக்களின் மீது முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதையும் உச்ச நீதிமன்றம் எடுத்துக்காட்டியுள்ளது.
இன்று வழங்கப்படும் தீர்ப்பு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாகவே இருக்கும். அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை உடனே நியமிக்கும் என்று நம்புகிறேன்.
மாநில உரிமைகளை நிலைநாட்டும் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அளித்தத் தீர்ப்பு திகழ்கிறது. அதன் சிறப்பை நமது இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதமாக இந்த ஆண்டு சென்னையிலும், மாவட்டங்களிலும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் அதைப்பற்றிய உரைகளை நிகழ்த்துவதற்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
