அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது, 2010 ஆகஸ்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, ‘டெட்’ தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, காலி பணியிடங்களை நிரப்புவது, பணி சுமையை குறைப்பது, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, ஃபோடோ ஜியோ தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.
அதுபோன்று அனைத்து முதுகலை ஆசிரியர் சங்கமும் வரும் 6ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், நிறுத்தி வைக்கப்பட்ட எம்ஃபில் ஊக்க ஊதியத்தை உடனே வழங்குதல், முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்தல் போன்றவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மகேந்திரன் அறிவித்துள்ளார்.
இன்னொரு பக்கம் தினசரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில் போராட்டம் நடத்துவது என்பது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தசூழலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று (டிசம்பர் 31) சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பில் மகேஸ், தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் அலோசித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
