அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு கூடுதலாக 10 நாட்கள் சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு வழிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் ஜி அருள்முருகன் அமர்வு, பத்து நாட்களில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில் வழககு மீண்டும் இன்று (நவம்பர் 11) விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு விதிமுறைகள் வகுப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது. இந்த கருத்துக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இறுதி வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், எங்கள் கட்சிக்கு மட்டும் 23 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை மற்ற கட்சிகளுக்கு விதிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், மின் கம்பங்களில் ஏறக்கூடாது என்பதுதான் அந்த கட்சியினருக்கு விதிக்கப்பட வேண்டிய முக்கிய நிபந்தனை என்று பதில் அளித்தார்.
அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயன், எங்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அரசு பரிசீலிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள் என்பது அரசியல் கூட்டங்களுக்கு மட்டுமல்லாமல் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பிற நிகழ்வுகளுக்கும் கூட விரிவுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் நீதிபதிகள், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாக நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். கடைசி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என்றும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும் போது தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்க கூடாது. 15 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கும் பட்சத்தில் 5 முதல் 7 நாட்களில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அனைத்துக் கட்சிகளின் கருத்துகளும் அரசின் வசம் உள்ள நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வரைவு வழிகாட்டு விதிமுறைகள் குறித்த யோசனைகளை உடனடியாக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த யோசனைகளை பரிசீலித்து 10 நாட்களில் அதாவது நவம்பர் 20ஆம் தேதி வரைவு வழிகாட்டு வழிமுறைகளை நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
